ஸ்காமெட் & ஏற்றுமதி கட்டுப்பாடு இணக்கம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை டிஜிஎஃப்டி நடத்தியது
சென்னை, ஆகஸ்ட் 08, 2025
இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியுடன் தொடர்புடைய இணக்கத்தை உறுதி செய்வதற்காக ஸ்காமெட் (சிறப்பு ரசாயனங்கள் உயிரினங்கள் பொருட்கள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்) பொருட்கள் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8, 2025) நடைபெற்றது. வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் இஇபிசி சென்னை ஆகியவற்றுடன் இணைந்து, ஸ்காமெட் & ஏற்றுமதி கட்டுப்பாடு இணக்கம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) பிராந்திய ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
ஸ்காமெட் பொருட்கள் பொதுவாக பொதுமக்கள் மற்றும் ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, இதில் பேரழிவு ஆயுதங்களும் அடங்கும். மேற்கூறிய அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு அலுவலர்களுடன் பல்வேறு தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் உத்திசார் வர்த்தகக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியாகவும், தொடர்புடைய சர்வதேச மரபுகள், வழிமுறைகள் மற்றும் வரம்புகளுக்கு இணங்கவும், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் டிஜிஎஃப்டி-ஆல் அறிவிக்கப்படும் இரட்டைப் பயன்பாடு, அணுசக்தி மற்றும் ராணுவ பயன்பாடுகளைக் கொண்ட பொருட்களின் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துகிறது. நிறுவன மற்றும் தொழில்துறை இணக்கங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன், ஸ்காமெட் பொருட்களில் வர்த்தகத்தின் உணர்திறன் தன்மையை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.
பலதரப்பு பரவல் தடை, ஏற்றுமதி கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் பிற சர்வதேச மரபுகளின் கீழ் இந்தியாவின் உத்திசார் வர்த்தகக் கட்டுப்பாடுகளை ஸ்காமெட் கொள்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதை வலியுறுத்தி, தொழில்துறையின் புரிதல் மற்றும் இணக்கத்தை எளிதாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இந்தியாவின் ஸ்காமெட் ஏற்றுமதிகள் தொடர்பான கொள்கை மற்றும் நடைமுறைகளை நெறிப்படுத்துவதன் முக்கிய பங்கு குறித்து பங்கேற்பாளர்களுக்கு இந்த நிகழ்வு உணர்த்தியது.