குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.
- திரு அர்ஜுன் ராம் மேக்வால்,
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)
மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்,
இந்திய அரசு
இந்தியாவின் கலாச்சார மரபு, மதிப்புகள், ஞானம் மற்றும் காலத்தால் அழியாத போதனைகளால் வளமானதாக உள்ளது. பல பண்டிகைகள் மூலம் கூட்டு உணர்வைக் கொண்டாடுவதில் அதன் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் உலகளாவிய பரிமாணங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த பண்டிகைகள் வெறும் சடங்கு சார்ந்த அனுசரிப்புகள் அல்ல, அவை இயற்கையுடனான நமது தொடர்பின் துடிப்பான பிரதிபலிப்புகள், அறிவியல் நுண்ணறிவு மற்றும் ஆன்மீக பார்வையால் ஆதரிக்கப்படுகின்றன. குரு பூர்ணிமா, அத்தகைய ஒரு சிறப்பு சந்தர்ப்பத்தைக் குறிக்கிறது, இது நடப்பதை இடைநிறுத்தவும், சிந்திக்கவும், உள்வாங்கவும் நமக்கு ஒரு தருணத்தை அளிக்கிறது. எனவே, குரு பூர்ணிமா என்பது, நம்மை வழிநடத்தி, வடிவமைத்து, வளர்ச்சிப் பாதையில் நம்முடன் நடந்து செல்லும், கண்ணுக்குத் தெரிந்த அல்லது தெரியாத ஒவ்வொரு கூறுகளையும் மதிப்பதற்கு ஒரு புனிதமான வாய்ப்பாகும்.
குரு பூர்ணிமா, தனிப்பட்ட வாழ்க்கையையும் சமூக விழுமியங்களையும் வடிவமைப்பதில் குருவின் பங்கை ஒப்புக்கொள்வதற்கான ஒரு காலத்தால் அழியாத பாரம்பரியத்தைக் குறிக்கிறது. சிவபெருமான் (ஆதிகுரு) ஏழு முனிவர்களுக்கு யோகா அறிவை வழங்கிய நாளைக் குறிப்பதால், ஆஷாட மாதத்தின் இந்த முழு நிலவு நாள், ஆழமான ஆன்மீக, வரலாற்று மற்றும் பருவகால முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்நாள் மகரிஷி வேத வியாசரின் பிறந்தநாளையும் நினைவுகூர்கிறது. இது, நம்மிடையே நன்மையின் ஒளியை ஏற்றி வைப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகை.
ஒரு உண்மையான குரு, சீடரை வெளியில் இருந்து கண்டிப்பு, சவால்கள் மற்றும் பின்னூட்டங்கள் மூலம் ஒழுங்குபடுத்துகிறார், திருத்துகிறார், செம்மைப்படுத்துகிறார். அதே நேரத்தில், அவர், அன்பு, இரக்கம் மற்றும் புரிதலுடன் சீடரை ஆதரித்து பலப்படுத்துகிறார்.
குரு பூர்ணிமா என்பது கற்றல், ஞானம் மற்றும் நன்றியுணர்வின் கொண்டாட்டமாகும். தகவல், குழப்பம், ஒப்பீடு, போட்டி ஆகியவற்றால் அடிக்கடி மூழ்கடிக்கப்படும் ஒரு சகாப்தத்தில், ஆன்மீக குருவாகவோ, பயிற்சியாளராகவோ, கல்வியாளராகவோ, பெற்றோராகவோ, டிஜிட்டல் வழிகாட்டியாகவோ இருந்தாலும், ஒரு உண்மையான ஆசிரியரின் வழிகாட்டும் இருப்பு இன்னும் முக்கியமானதாகவும், மதம் மற்றும் சடங்குகளுக்கு அப்பாற்பட்டதாகவும் மாறுகிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வரும் 21 ஆம் நூற்றாண்டின் கணிக்க முடியாத தன்மை, பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், சைபர் போர், மனநலப் பிரச்சினைகள் ஆகியவற்றின் அச்சுறுத்தல் இளைஞர்களை பாதிக்கிறது. குரு பூர்ணிமாவின் சாராம்சம் முழு உலகிற்கும் ஆழமாகப் பொருத்தமானதாகவே உள்ளது. நெறிமுறை சிக்கல்கள் இல்லாதது, தவறான மற்றும் சரியான செயல்களை வேறுபடுத்திப் பார்க்க இயலாமை ஆகியவை வளர்ந்து வரும் சவால்களாகும். மேலும் இது சமீபத்திய தலைப்புச் செய்திகள் மூலம் சமூகக் கட்டமைப்பை தகர்த்துவிட்டது. ஒருவரை தவறுகளின் பாதையிலிருந்து பின்வாங்கவைக்க போதுமான ஆற்றல் குருவின் நிழலுக்கு மட்டுமே உள்ளது.
டிஜிட்டல் யுகத்தின் சகாப்தத்தில் நாம் மேலும் முன்னேறும்போது, குரு பூர்ணிமாவின் காலத்தால் அழியாத செய்தி, அறிவைத் தேடவும், உள்ளார்ந்த வழிகாட்டுதலை மீண்டும் கண்டறியவும், நமது வழிகாட்டிகளை மதிக்கவும், மற்றவர்களுக்கு ஒளியின் ஆதாரங்களாக மாறவும் நம்மை ஊக்குவிக்கிறது. இதுதான் மதிப்பு சார்ந்த மனிதகுலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழியாகும்.