சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்
- அர்ஜுன் ராம் மேக்வால்,
மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர்
 (தனிப்பொறுப்பு) மற்றும் 
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
பருவமழை என்ற சொல் பாரதம் முழுவதும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தூண்டுகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு அது ஊக்கத்தை அளிக்கிறது. இந்தியாவில் உள்ள புவியியல் ரீதியான நன்மை என்னவென்றால் மழைப்பொழிவின் மூலம் அதன் ஆறுகள் புத்துயிர் பெறுகின்றன. இது நாடு முழுவதும் நீர்வளத்தை விரிவுபடுத்துகிறது. சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரை நீர்வள விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு ஒரு தெளிவான உறுதிப்பாட்டை எடுத்துரைத்தது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில், பிரதமர் இந்த அமர்வை பாரதத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு அமர்வு என்று விவரித்தார். இந்திய வீரர்களின் துணிச்சல், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீதான உறுதியான தாக்குதல், சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது  என இவை அனைத்துமே பாரதத்தின் வலுவான முடிவுகளுக்குச் சான்றாக நிற்கின்றன. அனைத்துப் பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு திறந்த மனதுடன் இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தின.  
தேச நலனை விட சுயநலத்தை முன்வைத்து செயல்படுவதே காங்கிரஸின் தொடர்ச்சியான பழக்கமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. துயரமான தேசப்பிரிவினையிலிருந்து நேருவின் செயல்பாடுகளால் ஏற்பட்ட தோல்விகள் வரை அனைத்தும் பாரதத்தை எவ்வாறு பலவீனப்படுத்தின என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. 
அந்தவகையில் 1960-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை கூர்ந்து கவனித்தால், மக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சியைப் பலிகொடுத்து செய்யப்பட்ட ஒப்பந்தமாகவே இது அமைந்தது. திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் தேசத்தின் மீதான அக்கறையற்ற மனப்பான்மையை இது வெளிப்படுத்துகிறது.  
இந்த ஒப்பந்தம், இந்தியாவில் உருவாகும் சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு பெரிதும் பயன்படும் வகையில் ஒதுக்கீடு செய்துள்ளது. சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகிய குறிப்பிடத்தக்க மேற்கு நதிகளின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் மூலம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் நீர்வளங்கள் பாதிக்கப்பட்டன. தேசிய நலன் பாதுகாக்கப்பட்டிருந்தால், நன்கு நிர்வகிக்கப்பட்ட நீர் உள்கட்டமைப்பு மூலம் இப்பகுதியின் முழு வளர்ச்சியையும் உறுதிசெய்து இப்பகுதிகளை வலுப்படுத்தியிருக்க முடியும்.
இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் நடைமுறைகள் கவலைகளை மேலும் அதிகரித்தது. இந்த ஒப்பந்தம் 1960 செப்டம்பர் 19 அன்று கையெழுத்தானது, ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நவம்பரில், அதுவும் வெறும் இரண்டு மணி நேர அடையாள விவாதத்திற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ஒப்பந்தம் தொடர்பான உண்மைகள் தெரியவந்தவுடன், முன்னணி செய்தித்தாள்கள், இந்த ஒப்பந்தம் குறித்து பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அதன் எதிர்மறையான தாக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தின. இவ்வளவு முக்கியமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நடத்தியது அப்போதைய தலைமையின் நோக்கம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. பாகிஸ்தானின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணிந்த அப்போதைய பிரதமர் நேருவின் செயல்பாடுகள் குறைபாடுடையவை என்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அப்போதே எச்சரித்தார்.
1960 நவம்பர் 30 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், இந்த ஒப்பந்தம் கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு விமர்சிக்கப்பட்டது. பெரும்பாலான உறுப்பினர்கள் இந்திய நலன்களை கைவிட்டுவிட்டதாக அரசு மீது குற்றம் சாட்டினர். ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஹரிஷ் சந்திர மாத்தூர், கம்யூனிஸ்ட் கட்சியின் கே.டி.கே. தங்கமணி உள்ளிட்டோர் இந்த நதி நீர் ஒப்பந்தம்  குறித்த கவலைகளை வெளிப்படுத்தி இதன் விளைவுகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். 
இந்த சூழலில், மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அப்போதைய பிரதமர் நேரு, உறுப்பினர்களின் ஞானத்தை கேள்விக்குள்ளாக்கி, குறைமதிப்பிற்கு உட்படுத்தினார். தெளிவான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைமை, இந்தியாவின் நீண்டகால நீர் பாதுகாப்பை  கருத்தில் கொள்ளாமல் வேறு முடிவைத் தேர்ந்தெடுத்தது. இது சமாதானக் கொள்கை எனக் கருதிய நிலையில் அது பலன் அளிக்காமல் தேசிய முன்னேற்றத்திற்கு பலவகைகளில் தீங்கு விளைவித்தது. ஒப்பந்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைக்கவில்லை. மாறாக, போர்களும், தாக்குதல்களும், தொடர்ச்சியான எல்லை தாண்டிய ஊடுருவல்களும் நடைபெற்று வந்தன.  இந்த ஒப்பந்தம், உண்மையில், இந்தியாவிற்கு நீர் ராஜதந்திர தோல்வியாகவும், பாகிஸ்தானுக்கு அரசியல் வெற்றியாகவும் அமைந்தது.
இந்த வரலாற்றுத் தவறை சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மற்றொரு தீர்க்கமான, துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் தனது இறையாண்மை உரிமைகளைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரை, இந்த ஒப்பந்தத்தை  இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டவட்டமான இந்த முடிவு, தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்பதை எடுத்துரைக்கிறது. தேசமே முதன்மையானது என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் உத்திசார்ந்த நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. இது தன்னம்பிக்கை, நிலைத்தன்மை ஆகியவற்றுடன் இணைந்த ஒரு துணிச்சலான முடிவு என்பதில் சந்தேகமில்லை.
***
Popular posts
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
ஸ்காமெட் & ஏற்றுமதி கட்டுப்பாடு இணக்கம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை டிஜிஎஃப்டி நடத்தியது
Image
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image