மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல் நெறிமுறைகள்
கட்டுரையாளர்:
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்
துறை இணையமைச்சர் திரு அஜய் டம்டா
நாடு முழுவதும் முப்பது லட்சத்திற்கும் அதிகமான வாகன ஓட்டுநர்கள் எதிர்கொண்டு வரும் தெளிவற்ற கொள்கைகள், தன்னிச்சையான இடைநீக்கங்கள், பாதுகாப்பு அம்சங்களில் உள்ள குறைபாடுகள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையில், விரிவான, செயல்படுத்தக்கூடிய வகையில் வழிகாட்டுதல் ஒழுங்குமுறை தொடர்பான நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடியத் தலைமைத்துவம், மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம். ஏற்கனவே மோட்டார் வாகனச் சட்டம், 1988 - ன் கீழ் “மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல் நெறிமுறைகள், 2020” - ஐ வெளியிட்டுள்ளது. இவை வாடகை வாகனங்கள் துறையின் வளர்ச்சிற்கு உதவுவதுடன், அவை தொடர்பான ஆன்லைன் தளங்களுக்கு மாநில அரசுகள் உரிமம் வழங்கவும், மேற்பார்வையிடவும் அதிகாரமளிக்கும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்குவதாக உள்ளன. இருப்பினும், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் என இருவருக்கும் பாதுகாப்பு, நியாயமான நடைமுறை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அம்சங்களில் அதிகரித்து வரும் சவால்களைக் கருத்தில் கொண்டு, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தற்போது மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல் நெறிமுறைகள், 2025 - ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் போக்குவரத்து முறைமைக்கான சூழல் அமைப்பின் கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான கொள்கைகளின் முக்கிய நடவடிக்கை ஆகும்.
1988 - ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள், ஓலா, உபர், ராபிடோ உள்ளிட்ட செயலி அடிப்படையிலான வாடகை வாகன ஒருங்கிணைப்பாளர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதுபோன்ற வழிகாட்டுதல் நடைமுறைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அத்தியாவசிய உரிமைகள், நீதிமன்ற அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவும், அதே வேளையில், ஓட்டுநர்கள், பயணிகள் என இருவருக்கும் பரஸ்பரம் சம அளவிலான நன்மைகளை வழங்க வகை செய்வது இதன் முக்கிய அம்சமாகும்.
இதுவரை, ஒருங்கிணைந்த ஆன்லைன் தளங்களுடன் இணைந்து செயல்படும் வாகன ஓட்டுநர்கள் பெரும்பாலும் குறைந்த வருவாய், தன்னிச்சையாக வெளியேறுவது, காப்பீடு வசதி இல்லாதது, போதிய சட்ட உதவி கிடைக்காத நிலை போன்றவற்றில் உள்ள இடைவெளிகளை இந்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, மத்திய அரசு தற்போது ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளரும் குறைந்தபட்சம் ₹5 லட்சம் ரூபாய் அளவிலான சுகாதார காப்பீட்டையும் ₹10 லட்சம் ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீட்டையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள், வாடகை வாகனம் ஓட்டும் தொழிலாளர்களை முறைசார்ந்த தொழிலாளர் கட்டமைப்புகளுக்குள் கொண்டு வருகின்றன.
மேலும், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் வாகன ஓட்டுநர்கள் தங்கள் வருவாயில் நியாயமான ஒரு பகுதியை சேமித்து வைத்துக் கொள்வதை உறுதி செய்கிறது. கட்டணக் கழிவுத் தொகைகள், கட்டணத் தொகையை பரஸ்பரம் பிரித்துக் கொள்வது மற்றும் அபராதங்கள் தொடர்பான தெளிவான, வகைப்படுத்தப்பட்ட தகவல்களையும் வாகன ஒருங்கிணைப்பாளர்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயணத்தை ரத்துசெய்தல், கட்டணத் தொகை குறித்த சச்சரவுகள் அல்லது இடைநீக்க நடவடிக்கைகள் போன்ற பிரச்சினைகளுக்கு குறித்த காலத்திற்குள் வெளிப்படையான முறையில் தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாகன ஒருங்கிணைப்பாளரும் முறையான குறை தீர்க்கும் நடைமுறையை நிறுவி அதனை உரிய வகையில் செயல்படுத்த வேண்டும் என்பதையும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் வலியுறுத்துகிறது. வாகன ஓட்டுநர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் அவ்வப்போது அளிக்கப்படும். இதில் மொபைல் செயலியின் பயன்பாடு, அவசரகால நடைமுறைகள், சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள், பாலின உணர்திறன், மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு, வாடிக்கையாளருடன் கலந்துரையாடுதல், டிஜிட்டல் கல்வியறிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 40 மணிநேர அறிமுக நிகழ்ச்சியும் இதில் அடங்கும். இது எதிர்கால வாடகை வாகனப் போக்குவரத்துத் தொடர்பான சவால்களை எதிகொள்வதற்கு வாகன ஓட்டுனர்களை சிறப்பான முறையில் தயார்படுத்த உதவுகிறது.
அதிக தேவை ஏற்படும் காலங்களில், பயணிகள் கூடுதல் கட்டண வசூலிப்பு மூலம் சுரண்டப்படாமல் தடுப்பதை உறுதிசெய்து, மாநில அரசுகளின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் கட்டண விகிதங்கள் அடிப்படைக் கட்டண விகிதத்தைக் காட்டிலும் 1.5 முதல் 2 மடங்கு வரை என்று வரையறை செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, அடிப்படை கட்டண விகிதம், மாறுபடும் கட்டண விகிதங்கள், வாகன ஒருங்கிணைப்பாளர் பங்கு மற்றும் அரசின் வரிகள் உள்ளிட்ட அனைத்து கட்டண விவரங்களை அவர்களது செயலிகளில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்" என்ற அணுகுமுறை அடிப்படையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஒரு மென்மையான ஒழுங்குமுறை அமைப்பை வழங்குகின்றன. தற்போது வாகன ஒருங்கிணைப்பாளர்கள் 60 நாட்களுக்குள் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களுக்கும் ஒரே உரிமத்தை எடுப்பதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது.
2030 - ம் ஆண்டிற்குள் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாக குறைக்க மத்திய அரசு இதற்கென லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. தற்போது சாலை விபத்துக்கள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% - ம் அளவிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடுவது நாட்டின் வலுவான கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளை பிரதிபலிப்பதாக உள்ளது. வாகன ஒருங்கிணைப்பாளர்களுக்கான தெளிவான தரநிலைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்துவதன் மூலம், வழிகாட்டுதல் நெறிமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கான நியாயமான வருவாய், சமூகப் பாதுகாப்பு, பயணிகளுக்கான மேம்பட்ட பாதுகாப்பு, வசதி, சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான நடைமுறைகளை வலியுறுத்துவதாக அமையும். இந்த சமச்சீரான, உள்ளடக்கிய கட்டமைப்பு நாட்டில் அதிகரித்து வரும் வாடகை வாகனப் பொருளாதாரத்திற்கான வலுவான அடித்தளத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047 என்ற தொலைநோக்குப் இலக்கை எட்டவும் உதவிடும்.
*