ஒருபோதும் மறக்கமுடியாத அவசரநிலை காலத்தின் இருண்ட நாட்கள்
-அர்ஜுன் ராம் மெக்வால்
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை
இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)
நாடாளுமன்ற விவகாரங்கள்
துறை இணையமைச்சர்
50 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25 அன்று ஜனநாயகத்தின் இருண்ட காலமாக சர்வாதிகார தன்மையுடன் தேசிய அளவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 21 மாதங்கள் நீடித்த இந்தக் காலத்தில் அரசியல் சட்டத்தின் 19-வது பிரிவு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. அரசியல் சட்டத்தின் ஆன்மாவாக விளங்குகின்ற 32-வது பிரிவின் கீழ் நீதிமன்றங்களை அணுகும் உரிமையையும் மக்கள் இழந்தனர். அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கத்துணிந்த ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியப் பாதுகாப்புச் சட்டம், கொடூரமான மிசா சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
மாநிலங்களின் நிர்வாகம், சட்டம் இயற்றும் அமைப்புகள், நீதித்துறை அமைப்புகள் மீது முன்னெப்போதும் கண்டிராத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திரா காந்தி அரசால் அமலாக்கப்பட்ட சர்வாதிகார நடவடிக்கைகள் பலரின் நினைவில் மாறாத வடுக்களாக உள்ளன. எனது தாத்தாவுக்கு அப்போது 92 வயது. அவர் வழக்கமான பசு பராமரிப்பு பணியில் இருந்தபோது தற்செயலாக விரலில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய மருத்துவர், வேறு பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது சஞ்சய் காந்தியின் செல்வாக்கால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு கொள்கையின் கீழ் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் அந்தப்பணியில் மருத்துவர் தீவிரமாக ஈடுபட்டுகொண்டிருந்தார். மனிதாபிமானமற்ற இந்த நிலைமையை புரிந்துகொண்ட எனது தாத்தா, உடனடியாக மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டார். அவர் தப்பி வந்துவிட்டாலும், அப்போது ஏற்பட்ட காயத்தின் வடு மாறவே இல்லை. 1975-77 காலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. இது இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக மாறியது.
ஒரு குடும்பத்தின் நலனுக்காக நிர்வாக எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு இந்தக் காலத்தில் வெளிப்படையான உதாரணமாக இருந்தவர் சஞ்சய் காந்தி. இவர் 1976 மார்ச் 24 அன்று இளைஞர்கள் பேரணியில் கலந்துகொள்வதற்காக பிக்கானிர் வந்திருந்தார். அரசியல் சட்டப்படியான பதவியை அவர் பெற்றிருக்கவில்லை. அரசின் விருந்தினராகவும் அவர் அழைக்கப்படவில்லை. ஆனால் அவரது வருகைக்காக மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டது. பேரணி நடக்கும் இடத்தின் அருகே தற்காலிகமாக தொலைபேசி இணைப்பை உருவாக்குமாறு உத்தரவிடப்பட்டது. இத்தகைய ஏற்பாடு பிரதமரின் அதிகாரப்பூர்வ பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகும். அந்த சமயத்தில் தபால் மற்றும் தந்தித்துறையின் தொலைபேசி ஆபரேட்டராக நான் பணியாற்றினேன். இந்த நடவடிக்கை தனிநபருக்காகவும், அரசியல் விருப்பங்களுக்காகவும், அரசியல் சட்டத்தை மீறி நிர்வாக எந்திரம் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
1971-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததற்காக இந்திரா காந்திக்கு தண்டனை விதிக்கும் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்தது. இதையடுத்து அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான நிர்பந்தம் ஏற்படும் என்பதால் அவர் அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல், அவசரநிலையை பிறப்பிக்க குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். இத்தகைய நடவடிக்கையின் நீட்சியாக பிரதமர், குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவைத் தலைவர் போன்ற உயர்பதவி வகிப்பவர்களின் தேர்தல் குறித்த வழக்குகளிலிருந்து நீதிமன்றங்களை விலக்கி வைக்கும் வகையில் முன்தேதியிட்டு 1975 ஆகஸ்ட் 10 அன்று 39-வது அரசியல் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது. 42-வது திருத்தத்தின்படி மக்களவையின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் முகப்புரையின் சோசலிச, மதச்சார்பற்ற ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அவசரநிலை காலத்தில் வழக்கமான சட்டம் இயற்றும் அமைப்புகளில் விவாதம், பரிசீலனை எதுவுமில்லாமல் 48 அவசர சட்டங்கள் இயற்றப்பட்டன. இத்தகைய அத்துமீறல்களை ஷா கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
அவசரநிலை காலத்தின் அடக்குமுறைகளை நேரடியாகவே சந்தித்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு அதற்கு எதிரான பிரச்சாரத்தை நரேந்திர மோடி ஓய்வின்றி நடத்தினார். இதன் காரணமாகவே அவர் பிரதமரான பின் ஜூன் 25-ம் தேதியை அரசியல் சட்ட படுகொலை தினமாக கடைப்பிடிக்குமாறு அறிவித்தார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ நோக்கி முன்னேறும் இந்தியாவில் ஜனநாயகத்தின் புனிதத்தை பாதுகாக்க நாம் உறுதியேற்க வேண்டும்.
***