இந்திய தொழிலாளர்களுக்கு அதிகாரமளித்தல்: வேலை அதிகரிப்புக்கும் தொழிலாளர் நலனுக்கும் டிஜிட்டல் வழிமுறைகள்
வி.அனந்த நாகேஸ்வரன்,
மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர்
சென்னை
டிஜிட்டல் சமூகம் என்ற நவீன யுகத்தில், சேட்போட், இணையப்பக்கம், இணையதளம் வழியாக குறைதீர்ப்பு மற்றும் தகவல் நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையிலான மின் ஆளுமை குடிமக்களுக்கு நெருக்கமாக அரசைக் கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்பத்தின் அதிகபட்ச பயன்பாட்டின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உட்பட பல துறைகளில் சேவைகள் வழங்குவதை அரசு மறு உருவாக்கம் செய்கிறது. இதற்கான நடைமுறைகள், திறன் மிக்கதாகவும், வெளிப்படையாகவும், அனைத்துக்கும் மேலான மக்களை மையப்படுத்துவதாகவும் மாறியுள்ளன. ஆதார் பதிவு, பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவை போலி பயனாளிகளை தடுத்து உரியவர்களுக்கு உரிய காலத்தில் பயன்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றன. இணையப் பக்கங்களின் ஒருங்கிணைப்பு எளிதாக பயன்கள் கிடைப்பது, வேலைவாய்ப்புகளை அறிந்துகொள்வது, திறன் பயிற்சியை தொடர்வது ஆகியவற்றில் தொழிலாளர்களுக்கு உதவியாக உள்ளது. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்கள், வேலை தேடுவோர், வேலை தருவோர், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு தேசிய அளவிலான தரவுகள் இவற்றின் மூலம் கிடைப்பது முடிவுகள் எடுப்பதில் கொள்கை வகுப்போருக்கு பேருதவியாக உள்ளது.
இத்தகைய மாற்றத்தில் தேசிய பணி சேவை என்ற இணையப்பக்கம் குறிப்பிடத்தக்க உதாரணமாக விளங்குகிறது. மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணையப்பக்கமான இது 2015
-ல் தொடங்கப்பட்டது. இதில் 5.5 கோடிக்கும் அதிகமாக வேலை தேடுவோர் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு நிலைமை, வேலைக்கான வழிகாட்டுதல், தொழில் பழகுநர் வாய்ப்பு பற்றிய தகவல், திறன் படிப்புகளுக்கான தகவல் போன்றவை கிடைக்கின்றன. முந்தைய காலத்தில் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பை செல்பேசியில் தேடும் வாய்ப்பு இல்லை. இப்போது பிரதமரின் விரைவுசக்தி மூலம் இந்த வாய்ப்பை பெறமுடிகிறது. மேலும், திறன் இந்தியா டிஜிட்டல் இணையப்பக்கம் அல்லது உள்ளூர் வேலைவாய்ப்பு கண்காட்சிகள் மூலம் தேவையான திறன்கள் பற்றிய தகவல்களும் கிடைக்கின்றன.
தேசிய பணி சேவை இணையப்பக்கம் சித், உதயம், இ-ஷ்ரம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம், பிரதமரின் விரைவு சக்தி, டிஜி லாக்கர் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 30 மாநிலங்கள் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு இணையப்பக்கங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இதே போல் இஎஸ்ஐ கழகத்தின் தன்வந்த்ரி இணையப்பக்கத்தின் மூலம் மருத்துவமனைகள், மருந்தகங்கள் பற்றிய தகவல்கள், முந்தைய நோய் பற்றிய குறிப்புகளுடன் நோயாளிகளின் ஆவணங்கள் ஆகியவை கிடைப்பதால் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை உறுதி செய்யப்படுகிறது.
அண்மைக் காலம் வரை லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் தங்களின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை பெறுவது வரம்புக்குட்பட்டு இருந்தது. 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் இணையப்பக்கம் தொடங்கப்பட்ட பின் இவர்கள் தங்களுக்கான தனித்துவ அடையாளத்தை பெற்றிருப்பதோடு, அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்கிறார்கள். இதில் 30.7 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஒரே இடத்தில் தீர்வு என்ற கோட்பாட்டுடன் இது செயல்படுவதால் சுமார் 13 சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை நேரடியாக பெறுகிறார்கள். செயலி தொழிலாளர்களும் இதன் மூலம் பயன் பெற முடியும். தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுடன், பகிர்ந்துகொள்ளப்படுவதால் தொழிலாளர் நலனுக்கு சிறப்பாக திட்டமிடுதல் அவற்றை அமலாக்குதல் எளிதாக இருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி திட்டத்தின் மூலம் 22 மொழிகளில் திட்டங்கள் பற்றிய தகவல்கள் கிடைப்பதால் இவற்றை நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அணுக முடிகிறது.
அரசின் இத்தகைய முயற்சிகள் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அண்மைக்கால அறிக்கையின்படி தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு இந்தியாவில் 2015-ம் ஆண்டு 19% ஆக இருந்த நிலையில் 2025-ல் 64.3% ஆகியுள்ளது. 94.13 கோடி தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களை பெறும் நிலையில் இந்தியாவின் தரவரிசை உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பையும் பணியிட திருப்தியையும் உருவாக்குவது நீண்டகால உற்பத்தி திறனுக்கு முக்கியமானதாகும். இதற்காக தொழிலாளர்கள் தொடர்புடைய பல்வேறு இணையப்பக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு எளிதாக அணுகுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
*