பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம்: இந்தியா செயல்படுத்துகிறது, உலகம் பின்பற்ற வேண்டும்
ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர்
பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மீதான தாக்குதல், நாகரீக சமுதாயத்தின் மாண்புகளை அழிப்பதற்கான வெறுப்புச்செயல்; புரட்சி, தியாகம், வன்முறையின் கண்ணோட்டத்தை மிகைப்படுத்துதல் போன்ற தவறான கருத்துக்களால் அது செயல்படுகிறது. “ஒருவருக்கு சுதந்திரப் போராட்டம் மற்றொருவருக்கு பயங்கரவாதம்” என்ற கருத்து மிகவும் ஆபத்தானதாகும். உண்மையான சுதந்திரம் ஒருபோதும் அச்சத்தின் மீதும், ரத்த வெள்ளத்தின் மீதும் கட்டமைக்கப்படுவதில்லை.
இந்த உண்மைக்கு இந்தியா ஒரு சான்றாகும். 26/11 மும்பை தாக்குதல் அல்லது 2001-ல் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் அல்லது அண்மையில் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதல் என எதுவாக இருந்தாலும் இந்தியா மிக உயர்ந்தும், வலுவாகவும் முன்னெப்போதையும் விட தீர்மானகரமாகவும் செயல்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட அரசு ஆதரவிலான எல்லைக் கடந்த பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களாக நாம் இருக்கிறோம். அண்மையில் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானதும், இந்தியாவின் ஒற்றுமையை முடமாக்கவும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்து தோல்வி கண்டதுமாகும். பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை கொல்வதற்கு முன் அவர்களின் மதம் பற்றி விசாரித்தது இதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது. இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக பல்வேறு சமயங்களைச் சேர்ந்த வழிப்பாட்டுத் தலங்கள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலும் இதே போன்ற முயற்சியாகும்.
இத்தகைய இழிவான செயல்களை எந்த மதமும் அனுமதிப்பதில்லை. பயங்கரவாதிகள் தங்களின் காட்டுமிராண்டித்தனமான செயல்களை நியாயப்படுத்த மதத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மதம் என்ற முகமூடிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு அவர்கள் கூறுகிற சமய நம்பிக்கையை கடுமையாக சிதைக்கிறார்கள். மதத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவது தற்செயலானதோ, மனக்கிளர்ச்சியால் ஏற்படுவதோ அல்ல; இது அராஜகங்களை நிறைவேற்ற திட்டமிட்ட தந்திரமாகும்.
பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்ற தனது நிலையை தெளிவுப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் கைகோர்த்து செல்ல முடியாது. பாகிஸ்தானுடனான எதிர்கால பேச்சுவார்த்தை எதுவாக இருந்தாலும் அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையப்படுத்தியதாகவே இருக்கும். பாகிஸ்தான் நேர்மையாக இருந்தால், நீதியை உறுதி செய்ய ஐ.நா. சபையால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள ஹஃபீஸ் சயீத், மசூத் ஆசார் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும்.
பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றும் போது நமது ராணுவம் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட மட்டுமே முன்பு அனுமதிக்கப்பட்டது. ஆனால் துல்லியத் தாக்குதல் (2016), பாலகோட் தாக்குதல் (2019) இப்போது ஆபரேஷன் சிந்தூர் (2025) ஆகியவற்றில் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள அவர்களின் ஆதரவாளர்கள் குறித்த கொள்கையில் அடிப்படையான மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது நமது கொள்கை பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை அழிப்பது என்பதுதான். பயங்கரவாத செயல் எதுவாயினும் அது போராகவே இப்போது கருதப்படுகிறது. இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அரசு ஆதரவிலான பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதிகள் தாங்களாகவே தாக்குதல் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு காணப்படாமல் தக்க பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை அடக்க முடியாவிட்டால் அதன் இயலாமைக்காக அந்நாடு கடுமையான விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான நிதியுதவி குறித்த அமைச்சர்கள் நிலையில் புதுதில்லியில் நடைபெற்ற “பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதில்லை” என்ற 3-வது மாநாட்டில், “ஒற்றை தாக்குதலையும் நாம் பலவாக கருத வேண்டும், ஒருவரின் உயிரிழப்பையும் நாம் பலராக கருத வேண்டும். பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை நாம் ஓய்ந்துவிடக் கூடாது” என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக அறிவித்தார். பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதை ஆபரேஷன் சிந்தூரின் போது மத்திய அரசும், ராணுவமும் ஒட்டு மொத்த உலகிற்கும் வெளிப்படுத்திக் காட்டின.
பயங்கரவாதம் என்பது இந்தியாவின் பிரச்சனை மட்டுமல்ல, அது உலகளாவிய பிரச்சனையாகும். பயங்கரவாத வலைப்பின்னல்களை தீவிரமாக அழிப்பதற்கு கொள்கை அடிப்படையிலான, விரிவான, தொடர்ச்சியான, ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய உத்தியை நாம் மேற்கொள்ள வேண்டும். இது ஐந்து நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
முதலாவது, பயங்கரவாதம் என்ற சொல்லுக்கான வரையறையை ஐ.நா.வில் இந்தியா முன்மொழிந்த கருத்தின் அடிப்படையில் உருவாக்க வேண்டும்.
இரண்டாவதாக, பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியை முடக்குவது அவசியம் என்பது மட்டுமின்றி பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசுகளின் நிதியையும் முடக்க வேண்டும்.
மூன்றாவதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் போது அணுஆயுதங்கள் குறித்து பாகிஸ்தானால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் செய்யப்பட்டது. இந்த அபாயத்தை சர்வதேச சமூகம் கணக்கில் கொண்டு பாகிஸ்தானின் அணுஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.
நான்காவதாக, பயங்கரவாத தாக்குதல் குறித்து தங்களின் வசதிக்கேற்ப அல்லது நலனுக்கு ஏற்ப கண்டனம் செய்வது பயங்கரவாதத்தை முறியடிக்கும் கூட்டு நடவடிக்கையை பலவீனப்படுத்தி விடும்.
ஐந்தாவதாக, பாகிஸ்தானை பாதுகாப்பான புகலிடமாக கொண்டுள்ள பயங்கரவாதிகள் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். எனவே பயங்கரவாதிகள் மூலமான அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பு அவசியமாகிறது. எனவே சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான விரிவடைந்த மாநாட்டில் அனைத்து நாடுகளும் அணிதிரள்வதும், தீர்மானத்தில் கையெழுத்திடுவதற்கான தருணம் இதுவாகும்.
9/11 தாக்குதலுக்குப் பின் இத்தகைய உடன்பாட்டை முன்மொழிந்து ஐ.நா.பொதுச் சபையின் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உரையாற்றும் போது, பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் எந்த சித்தாந்தம், அரசியல் அல்லது மதத்தை நாம் உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்றார். ரவீந்திர நாத் தாகூரை மேற்கோள் காட்டி அவர் தொடர்ந்து பேசுகையில், இப்போதிலிருந்து, ஒவ்வொரு நாடும் தனது சொந்தப் பாதுகாப்பில் ஆர்வம் காட்டுவது போல் ஒட்டு மொத்த உலகின் நலனிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
பயங்கரவாதத்தின் அனைத்து வெளிப்பாடுகளையும் ஒழிப்பதற்கான தேடலில் இந்தியா மிக உறுதியாக உள்ளது. அமைதியை நேசிக்கும் அனைத்து நாடுகளும் நம்முடன் இணைய நாம் வலியுறுத்துகிறோம்.