# பொய்ப் பிரச்சாரத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல்
தகவல் போரில் உண்மையைப் பாதுகாத்தல்
அறிமுகம்:
டிஜிட்டல் யுகத்தில், போர் என்பது பாரம்பரிய போர்க்களங்களைக் கடந்த போர் நடவடிக்கைகளாக உள்ளது. இராணுவ நடவடிக்கைகளைக் காட்டிலும், ஆன்லைனில் கடுமையான தகவல் போர் நடைபெற்று வருகிறது. இந்திய ஆயுதப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் துல்லியமான, உத்திசார் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட உக்கிரமான பொய்ப் பிரச்சாரம் இந்தியாவைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோக்கம்:
உண்மைகளைத் திரித்து, உலகளவில் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் இழந்த கதையாடல் தளத்தை மீட்டெடுப்பதே இதன் நோக்கமாகும். இருப்பினும், இந்தியா உண்மை, வெளிப்படைத்தன்மை, வலுவான டிஜிட்டல் விழிப்புணர்வைக் கொண்டு முன்கூட்டியே பதிலளித்து உண்மைக்குப் புறம்பானத் தகவல்களைச் சிதறடிக்கிறது.
பாகிஸ்தானின் பிரச்சாரம்:
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் தூதரக ரீதியிலான பரப்புரைகள் மட்டுமின்றி, தவறான தகவல்களின் மூலமாகவும் பதிலளித்து வருகிறது:
• பழைய ஊடகப் பிரதிகளை மீண்டும் புதிய பின்னணியில் பயன்படுத்துதல்: பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அண்மைகால போர் தொடர்பான உள்ளடக்கமாக தவறாக சித்தரிக்கப்பட்டன.
• ஜோடிக்கப்பட்ட வெற்றிகள்: சுட்டுவீழ்த்தப்பட்ட ஜெட் விமானங்கள் மற்றும் கைதுசெய்யப்பட்ட வீரர்கள் உட்பட இந்தியாவின் இழப்புகள் குறித்த தவறான கூற்றுக்கள், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பரப்பப்பட்டன. பாகிஸ்தான் ஊடகங்கள் கூட இந்த பொய்யான இழப்புகள் குறித்த தகவல்களை தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றன.
• அரசின் உதவிகள்: அமைச்சர்கள் உட்பட பாகிஸ்தான் நாட்டின் உயர் அதிகாரிகள், சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத மற்றும் போலியான உள்ளடக்கத்துடன் கூடிய செய்திகள் வெளியிடப்படுவதை ஊக்குவிகின்றனர்.
இந்தியாவின் பதில் நடவடிக்கை: கட்டுக்கதை அல்ல, உண்மை.
இது போன்ற பொறுப்பற்ற தகவல் தாக்குதலுக்கு இந்தியா வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வும் கொண்ட உறுதியான, ஆதாரம் அடிப்படையிலான உத்தியுடனும் பதிலளித்துள்ளது.
1. நிகழ்நேர உண்மைச் சரிபார்ப்பு
இந்தியா, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் குழுவுடன், காட்சி ஆதாரங்கள், ஆதாரக் கண்காணிப்பு மூலம் வைரலாகி வரும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை உடனுக்குடன் நிராகரித்து வருகிறது. சரியான தருணத்தில் அவர்களது தலையீடுகள் உதவிகரமாக அமைந்துள்ளன:
• தவறாக வழிநடத்தும் வீடியோக்களின் அசலான நிலையை தெளிவுபடுத்துதல்
• மறுசுழற்சி செய்யப்பட்ட படங்களின் உண்மையான தேதிகள் மற்றும் சூழலை உறுதிப்படுத்துதல்.
• சரிபார்க்கக்கூடிய தரவுகளைப் பயன்படுத்தி தவறான கதையாடல்களை பொதுவெளியில் கட்டுடைத்தல்.
பாகிஸ்தான் விமானப்படையானது ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறும் காணொளி ஒன்று ஊடகங்களில் பரப்பப்பட்டது. உண்மையில், இந்தக் காட்சிகள் 2024 - ம் ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நிகழ்ந்த மதவெறி மோதல்களுடன் தொடர்புடையவை. இந்த வீடியோவிற்கு காஷ்மீர் அல்லது அண்மைக்கால வான்வழித் தாக்குதலுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை. - https://x.com/PIBFactCheck/status/1919916769403134126
இந்திய படைப்பிரிவு தலைமையகத்தை பாகிஸ்தான் அழித்ததாக தனிப்பட்ட வதந்தி பரப்பப்பட்டது. இந்தச் செய்தி உண்மையில் எந்தவித அடிப்படையும் இல்லாதது மட்டுமின்றி முற்றிலும் ஜோடிக்கப்பட்டதாகும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- https://x.com/PIBFactCheck/status/1919922375069409298
கூடுதலாக, 2024 - ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த மிக் -29 விமான விபத்து தொடர்பான பழைய புகைப்படம், பாகிஸ்தான் சார்பு சமூக ஊடகங்களால் இந்திய விமானப்படையின் அண்மைக்கால இழப்புகளைக் குறிக்கும் வகையில் மீண்டும் பகிரப்பட்டு வந்தது. ஆனால் அது போன்ற இழப்பு எதுவும் தற்போது நிகழவில்லை.- https://x.com/PIBFactCheck/status/1919973596665135471
குழப்பத்தை உருவாக்குதல், பொதுமக்களை மனச்சோர்வடையச் செய்தல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக உலகளாவிய கருத்தை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட விரிவான உளவியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத்தகைய உத்திகள் அமைந்துள்ளன.
2. உத்திசார் தொடர்புகள்
ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் ஊடகங்கள் மூலம், எந்த ஒரு இடைவெளியும் ஏற்படுத்தாமல் துல்லியமான தகவல்களின் அடிப்படையில் நிலையான தகவல் பரிமாற்றத்தை இந்திய பாதுகாப்பு முன்னணி தளபதிகள் மேற்கொண்டு வருகின்றனர். தகவல்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க 2 பத்திரிகையாளர் சந்திப்புகள் இதுவரை நடந்துள்ளன.
3. டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் பொது விழிப்புணர்வு
வைரலாகப் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்த மக்களின் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதுபோன்ற தவறான தகவல்கள் தொடர்பான சந்தேகமும் அவர்களுக்க அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் செயல்பட்டுவரும் செல்வாக்கு படைத்த முக்கிய டிஜிட்டல் ஊடகங்களும் பாதுகாப்பு ஆய்வாளர்களும் உண்மையான தகவல் சரிபார்ப்புகளைப் பெருக்குவதிலும், தவறான தகவல்களுக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை அம்பலப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகித்துள்ளனர்.
ஆரவாரக் கூச்சலுக்குப் பின்னால் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்துதல்
இந்தியாவின் எதிர்ப் பிரச்சாரமானது தவறென எடுத்துக் காட்டுவதைத் தாண்டி, பாகிஸ்தானின் இராணுவ உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளையும் வெளிப்படுத்துகிறது. தவறான தகவல்கள் இதை மூடி மறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளதையும் எடுத்துக் காட்டுகிறது.
ஒரு வலிமையான படையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் இராணுவம், ஒரு நிலையான போர் இயந்திரத்தை விட வெளிநாட்டு ஆயுதங்களை கொள்முதல் செய்யும் பெருநிறுவனத்தைப் போலவே எவ்வாறு செயல்பட்டது என்பதையும் இந்த எதிர்ப் பிரச்சாரம் எடுத்துக்காட்டுகிறது
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கையின் போது:
• சீனாவால் தயாரிக்கப்பட்ட ஹெச் கியூ-9 பேட்டரிகள், பஹவல்பூர் மற்றும் முரிட்கேவில் உள்ள இலக்குகளைத் தாக்கிய இந்தியாவின் ஸ்கேல்ப் ஏவுகணைகளை கண்காணிப்பு ராடார் வளையத்திற்குள் கண்டறியவோ அல்லது இடைமறிக்கவோ தவறிவிட்டன.
• 25 நிமிடம் நீடித்த தாக்குதல் நடவடிக்கையை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் நிகழ்நேர போர்க்களப் பதிவுகளாக வெளிப்படுத்தவில்லை.
• பிஎல்-15 விண்ணிலிருந்து செலுத்தப்படும் வான் ஏவுகணைகள் இந்திய சு-30எம்.கே.ஐ.ரக போர் விமானங்களுக்கு எதிராக குறி தவறி பயன்படுத்தப்பட்டன. இது பாகிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு உள்கட்டமைப்புடன் இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகளின் மோசமான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தியது.
• உறுதியான தலைமைத்துவத்திற்கு பதிலாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதிகள் எச்சரிக்கைகளுக்கு மட்டுமே எதிர்வினையாற்றினர். தீவிரமான தாக்குதல் உத்திகளை வகுக்கும் தளபதிகளை விட தகவல்களை சரிபார்க்கும் அலுவலக மேலாளர்களைப் போல நடந்து கொண்டனர்.
உத்திசார் மந்தநிலை மற்றும் தொழில்நுட்ப பாதிப்பு ஆகியவற்றின் இந்த வெளிப்பாடு, பாகிஸ்தான் ஆன்லைனில் பரப்ப முயற்சித்த தகவல்களுடன் முற்றிலும் முரண்படுகிறது. இந்த பிரச்சாரம் தவறான தகவல்களை எதிர்ப்பது மட்டுமின்றி, பாகிஸ்தானின் சோதிக்கப்படாத ஆயுதத் தளவாடங்கள் மற்றும் நவீன யுத்த களத்தில் காலாவதியான உத்திசார் நடவடிக்கைகளை அதிகமாக நம்பியிருப்பதைச் சார்ந்துள்ள செய்திகளை மறுவடிவமைக்கிறது.
நம்பகத்தன்மையுடன் கூடிய தகவல்களை வடிவமைத்தல்
உணர்ச்சிபூர்வமாக எதிர்வினையாற்றுவதற்கு மாற்றாக, தகவல் போரில் இந்தியா அமைதியான மற்றும் முறையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது:
• செயல்பாட்டு வெற்றியை எடுத்துக்காட்டுதல்: 'ஆபரேஷன் சிந்தூர்' - ன் செயல்திறன் குறித்த தகவல்கள் துல்லியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான தகவல்களைக் காட்டிலும் உத்திசார் விளைவுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
• பிரச்சார ஆதாரங்களை இழிவுபடுத்துதல்: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஊடகங்களால் பயன்படுத்தப்படும் தகவல் உத்திகளை இந்திய அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். அவற்றில் பல தற்போது சர்வதேச சமூக ஊடக வலைதளங்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
• ஊடக அடிப்படை அறிவை ஊக்குவித்தல்: போலிச் செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்து குடிமக்களுக்குக் கற்பிப்பதற்கான பிரச்சாரங்கள், மிகவும் நெகிழ்ச்சியான டிஜிட்டல் சூழலை உருவாக்க உதவியுள்ளன.
முடிவு: உண்மை என்பது ஒரு உத்திசார் சொத்து.
பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம், கலப்பினப் போரை எதிகொள்வதில் நாட்டின் முதிர்ச்சியான நிலைக்கு சிறந்த சான்றாகும். தவறான தகவல்களை உண்மையான தகவல்களுடன் எதிர்கொள்வதன் மூலமும், நம்பகமான தகவல்தொடர்புகளில் வேரூன்றி இருப்பதன் மூலமும், இந்தியா தனது பிராந்திய இறையாண்மையை மட்டுமின்றி, தகவலின் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்தியுள்ளது. ஒரு வலைத்தள பதிவின் மூலம் கருத்து தெரிவிக்கும் கொள்கையை வடிவமைக்கும், அச்சத்தைப் பரப்பும் சகாப்தத்தில், தவறான தகவல்களை அம்பலப்படுத்தி நடுநிலையாக்கும் இந்தியாவின் திறன், போர்க்களத்தில் வெற்றி பெறும் திறனைப் போலவே முக்கியதத்துவம் வாய்ந்ததாகும்
******