சிந்துநதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில் தனது வரம்புக்கு உட்பட்ட நிலை பற்றி உலக வங்கி தெளிவுபடுத்தியுள்ளது
சென்னை : மே, 09
பிராந்திய பதற்றம் அதிகரித்துவரும் தருணத்தில் இந்தியாவின் நீண்ட கால அமைதிக்கான உறுதிபாட்டை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மீண்டும் உறுதிசெய்துள்ளார். இருப்பினும் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் சிந்து நதி ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய இந்தியாவை நிர்ப்பந்தித்துள்ளது என்று அவர் கூறினார். “இந்த ஒப்பந்தத்தின் முன்னுரை நல்லெண்ண உணர்வு மற்றும் நட்புணர்வு என்பதுடன் நிறைவடைகிறது” என்பதை மிஸ்ரி சுட்டிக்காட்டியுள்ளார். “மீண்டும் மீண்டும் ஆத்திரமூட்டல்கள் இருந்தபோதும் 65 ஆண்டுகளுக்கு மேல் சிந்துநதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியா அளவு கடந்த பொறுமையையும், கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.”
இந்தியாவின் நடவடிக்கை குறித்து உலக வங்கியின் நிலையை அதன் தலைவர் அஜய் பங்கா தெளிவுபடுத்தியுள்ளார். செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது, “நாங்கள் நீதிபதியோ அல்லது முடிவெடுப்பவர்களோ அல்ல. இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதில் அல்லது தொடர்வதில் உலக வங்கியின் பங்கு எதுவும் இல்லை” என்றார். “இந்த வங்கியின் செயல்பாடு நடைமுறை சார்ந்ததாகும். இருநாடுகளும் ஒப்புகொண்டால் மட்டுமே நடுநிலையான நிபுணரை நியமிக்க அல்லது நடுவர் மன்றத்தை கூட்ட அது உதவி செய்ய முடியும். இந்த நடைமுறைகளுக்காக வழங்கப்படும் நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம். ஆனால் இந்த ஒப்பந்தம் இறையாண்மை மிக்க இரண்டு நாடுகளுக்கு இடையேயானது. இதன் எதிர்காலத்தை முடிவு செய்வது அவர்களை பொறுத்ததாகும்” என்று அவர் கூறினார். இது குறித்த மக்களின் தவறான கருத்துப் பற்றி பங்கா கவலை தெரிவித்தார். “இந்த ஒப்பந்தத்தை உலக வங்கியால் நிறுத்த அல்லது செயல்படுத்த முடியும் என்ற கருத்து உள்ளது. அவ்வாறு நாங்கள் செய்ய இயலாது. இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது எங்களின் பங்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரும் தீர்வு காண விரும்பினால் நாங்கள் உதவிசெய்ய முடியும். அவ்வளவுதான்” என்று அவர் கூறினார்.
சிந்துநதி ஒப்பந்தம் 1960-ல் கையெழுத்தான போது சிந்துநதி பள்ளத்தாக்கின் ஆறு நதிகளின் நீர் பகிர்வை நிர்வகிப்பதற்கு உலக வங்கி நடுவராக இருந்தது. கிழக்கு நோக்கி பாயும் ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகள் இந்தியாவுக்கும், மேற்கு நோக்கிப் பாயும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் இந்த நதிகளின் நீரை பாகிஸ்தான் மின்னுற்பத்தி அல்லது வேளாண்மை தவிர்த்த பிற பயன்பாட்டை இந்தியா மட்டுப்படுத்தியது. ஒருங்கிணைப்பு மற்றும் பிரச்சனைக்கான தீர்வை உறுதிசெய்ய நிரந்தர சிந்து நதி ஆணையம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் சிந்துநதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்ற இந்தியாவின் முடிவு “தொலைஉத்தி சார்ந்தது” என்றும் திரும்ப பெறுதல் அல்ல என்றும் விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது மறுஅளவீட்டிற்கு உரியது. இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 12(3)-ன் படி, மறுபேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானுக்கு இந்தியா பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளியுறவு அமைச்சக தகவலின்படி, பேச்சுவார்த்தைக்கு இந்த முறைப்படியான அழைப்புகளுக்கு பாகிஸ்தான் பதிலளிக்க தவறிவிட்டது.
1965, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் போர் நடந்த போதும், அவ்வப்போது மோதல்கள் இருந்தபோதும், இந்த ஒப்பந்தத்தை கருவியாக இந்தியா ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. “நம்மீது பாகிஸ்தான் போர்களை திணித்த போதும், காஷ்மீரில் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட போதும், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருந்தோம். இந்த ஒப்பந்தத்தின்படி உள்ள இந்தியாவின் சட்டப்படியான உரிமைகள் குறிப்பாக திட்ட அமலாக்கத்தில் பாகிஸ்தானால் திரும்ப திரும்ப தடுக்கப்படுவதால் நமக்கு வேறு வாய்ப்பில்லாமல்போனது” என்று மிஸ்ரி தெரிவித்தார்.
காலாவதியான பொறியியல் கருத்துகள், மக்களின் நெருக்குதல்கள், தூய்மை எரிசக்தி தேவைகளின் உருவாக்கம் என்பது தொடங்கி தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வரை மறுமதிப்பீட்டிற்கான காரணங்கள் என்பதை இந்திய அரசு பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. மேற்கு நோக்கிப்பாயும் நதிகள் மீதான திட்டங்கள் இந்தியாவின் உரிமைகளுக்குள் உட்பட்டிருப்பதை சர்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் எதிர்ப்பது வளர்ச்சிப்பணிகளில் தாமதத்திற்கும், தடைபடுவதற்கும் காரணமாகிறது.
பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் குழுக்கள் காரணம் எனக்கூறியிருப்பது முக்கியமானதாகும். இந்த சம்பவம் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதை இது மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்த ஒப்பந்தம் நல்லெண்ணத்தின் மீது கட்டமைக்கப்பட்டது என்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அதன் நடவடிக்கைகளை கடுமையாக பாதித்துள்ளது.
இந்தியாவின் நிலை, இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் திருப்பத்தை குறிக்கிறது. தேசத்தின் இறையாண்மையை மறுஉறுதி செய்வதையும், பல பத்தாண்டுகால மோதல்கள், தடங்கல்கள், எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டையும் அது பிரதிபலிக்கிறது. இந்தியாவை அச்சுறுத்தும் நிலையில் பாகிஸ்தானின் பதில் உள்ளபோதும் அர்த்தமுள்ளதாக, பொறுப்புள்ளதாக, இன்றைய கள எதார்த்தங்களை ஒப்புகொள்வதாக இருக்கும்பட்சத்தில் பேச்சுவார்த்தைக்கு தனது கதவுகள் திறந்தே இருக்கின்றன என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
---------------