வேவ்ஸ்: உலகளாவிய படைப்பாற்றல் புரட்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது
படைப்பாற்றலுக்கு எல்லைகள் இல்லை. ஆதிகாலம் தொட்டே படைப்பாளிகள் இந்த உலகை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்து வந்திருக்கிறார்கள். இருண்ட காலத்திலிருந்து நமது நீண்ட பரிணாமப் பயணத்தில், அனைத்து நாகரிகங்களிலும் "நவீன மனிதர்களாக" நம்மை வடிவமைத்தது சிறந்த படைப்பு சிந்தனைகள்தான். அவை ஆக்கபூர்வமான பார்வையை, நமது வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்வைக்கின்றன. நவீன காலங்களில் மனித வாழ்க்கையை நமக்கு சிறப்பாக்கியது நம் முன்னோர்களின் படைப்பாற்றல்.
தற்போது நாம், 21-ம் நூற்றாண்டில் முன்னேற்றத்தின் பலன்களை அனுபவிக்கிறோம். இந்தச் சூழலில் படைப்பாளிகளை அடையாளம் காண்பது, அவர்களுக்கு வழிகாட்டுதல், அதிநவீன அறிவைப் பகிர்ந்து கொள்வது, சிறந்த உலகளாவிய நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது, அவர்களின் படைப்புப் பணிகளுக்கு சந்தை வாய்ப்புகளை வழங்குவது ஆகியவை முக்கியமானதாக உள்ளது.
நவீன இணைய யுகத்தில், திறன் வாய்ந்தவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதன் மூலம், இந்தியா துல்லியமாக படைப்பாற்றல் பாதையில் பயணம் செய்கிறது. உலக நாடுகளிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஆக்கபூர்வமான மென் சக்தியாக செயல்பட்டு உலகை அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதை, இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஊடக- பொழுதுபோக்குத் துறையின் செயல்பாட்டில், நமது கொள்கை வகுப்பாளர்கள், "படைப்பாளர்களை இணைத்தல்" என்ற சிந்தனையின் அடிப்படையில் வேவ்ஸ் -2025 எனப்படும் உலக ஒலி, ஒளி பொழுது போக்கு உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். பேசும் படங்கள் தோன்றிய கடந்த 100 ஆண்டுகளில், நமது படைப்பாளிகள் உலகை வடிவமைத்து அனைத்து தலைமுறைகளின் படைப்பாளிகளுக்கும் அறிவை ஜனநாயகப்படுத்தி வருகின்றனர்.
2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறும் உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடான வேவ்ஸ், உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகளுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், புகழை சம்பாதிக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். திரைப்படங்கள், இசை, இணைய விளையாட்டுகள், காமிக்ஸ் போன்றவற்றை மலிவு விலையில் தொழில்நுட்பத்துடன் இணைப்பதற்கான வாய்ப்பை வேவ்ஸ் உருவாக்குகிறது. ஊடக - பொழுதுபோக்குத் துறையை சிறப்பாக மறுவடிவமைக்கும் திறன்களைக் கொண்ட அம்சங்களை உருவாக்குவதன் மூலம் முன்னோக்கிச் செல்வதற்குப் படைப்பாளர்களுக்கு வேவ்ஸ் ஒரு "ஆரோக்கியமான வாய்ப்பை" வழங்குகிறது.
படைப்பாற்றல் திறன் கொண்டவர்களை அடையாளம் காண்பதில் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் முயற்சிகள் பலன்களைத் தருகின்றன. 'இந்தியாவில் உருவாக்குவோம், உலகத்திற்காக உருவாக்குவோம்' என்ற அடிப்படையிலான சவால்கள் மூலம் உலகெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 750 க்கும் மேற்பட்ட படைப்பாளிகள், இப்போது மும்பையில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்துவார்கள். அவர்கள் படைப்பாளிகள் மட்டுமல்ல. கண்டுபிடிப்பாளர்களும் ஆவர். புதுமையான வழிகளில் படைப்பைக் கொண்டு வரும் படைப்பாளிகள், தொழில்துறை வல்லுநர்கள், சந்தை வல்லுநர்கள் அடங்கிய நடுவர் குழுவால் அடையாளம் காணப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
அடுத்த முறை நீங்கள் போர்ட்பிளேயரில் உள்ள செல்லுலார் சிறைச்சாலைக்கு சுற்றுலா செல்லும்போது, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கருடன் உரையாடுவது போன்ற சிறந்த அனுபவத்தைப் பெற முடியும். ஏனென்றால் ஒரு படைப்பு நிறுவனம் தங்கள் எக்ஸ்டெண்டெட் ரியாலிட்டி (எக்ஸ்ஆர்) திறமையைப் பயன்படுத்தி அதை சாத்தியமாக்கியது. வேவ்ஸ் சவாலின் கீழ், படைப்பாளிகள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள பிற வரலாற்று தலங்களின் பெருமைகளை பரப்ப விரும்புகிறார்கள். சரியான ஆதரவு, வழிகாட்டுதலுடன், இந்திய இளைஞர்களின் படைப்பாற்றலை உலக அளவில் நிலைநிறுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'இந்தியாவில் உருவாக்குவோம் - உலகத்திற்காக உருவாக்குவோம்' என்ற தொலைநோக்குப் பார்வையை வேவ்ஸ் மூலமாகவும் நனவாக்க முடியும்.
இந்தியாவின் தொலைதூர பகுதிகளிலிருந்து வருபவர்கள் இந்த சவால்களின் மூலம் பயனடைகின்றனர். காஷ்மீரைச் சேர்ந்த 16 வயது நபர் ஒருவர், வேவ்ஸ் தளத்தில் தனது கோடிங் திறன்களை வெளிப்படுத்தி, அங்கீகாரம் பெற்றதன் மூலம், சொந்தமாக புத்தொழில் தொடங்க வேண்டும் என்ற தமது கனவுகளுக்கு வடிவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இது காஷ்மீரைச் சேர்ந்த ஒரு இளைஞரின் கதை மட்டுமல்ல. உலகெங்கிலும் உள்ள பல இளைஞர்கள் தங்கள் திறமைகளை வேட்டை வாயிலாக வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் எதிர்காலத்தைச் சிறப்பாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். கலை உருவாக்கத்துடன் தொழில்நுட்பத்தின் சங்கமமும் உச்சத்தில் இருப்பதால், ஊடக - பொழுதுபோக்கு துறை அதன் மென் சக்தியின் மூலம் இந்தியாவை வரும் காலங்களில் சிறந்த உலகளாவிய உள்ளடக்கங்களின் தயாரிப்பு மையமாக மாற்றுவதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. முதல் வேவ்ஸ் உச்சி மாநாடு, ஊடகம் - பொழுதுபோக்கு துறைக்கு ஒரு மைல்கல் நிகழ்வாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாடு ஊடக வல்லுநர்கள், கலைஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை பங்குதாரர்களை ஒன்றிணைக்கும். உலகின் உள்ளடக்க மையமாக இந்தியாவை மாற்ற இந்த உச்சி மாநாடு உதவுகிறது. வேவ்ஸ் -2025 ஒரு உச்சி மாநாடு மட்டுமல்ல. இது இணைக்கப்பட்ட, ஆக்கபூர்வமான கூட்டு உலகத்திற்கான தொலைநோக்குப் பார்வையாகும்.
***