இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு வேவ்ஸ் உச்சி மாநாடு எடுத்துச் செல்லும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
சென்னை, 20 ஏப்ரல் 2025:
இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக வேவ்ஸ் (உலக ஒலி, ஒளி, மற்றும் பொழுதுபோக்கு) உச்சி மாநாடு அமையும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற தூர்தர்ஷன் சென்னை (டிடி தமிழ்) தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் படைப்பாற்றல் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பேசிய அவர், டிடி தமிழ் தொலைகாட்சி, தமிழ்நாட்டின் கலை , கலாச்சாரம், பண்பாட்டு மதிப்பீடுகளை காக்கும் அரும்பணியை செய்துவருவதாகவும் காலத்தால் அழியாத பல நினைவலைகளை நம்முள்ளே விதைத்துள்ளது என்றும் கூறினார். மேலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் செய்திகள் நூறு சதவீதம் உண்மைத் தகவல்களையும் நம்பகத்தன்மையையும் கொண்டவை என்றும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். இன்றைய நவீன காலத்துக்கு ஏற்றார்போல் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்திய அரசின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அரசின் செய்திகளையும், மக்களுக்கான நலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிக முக்கியப் பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் நிகழ்ச்சிகள், பிரதமரின் நிகழ்ச்சிகள், குடியரசு தின விழா, சுதந்திர தின விழா போன்ற நிகழ்ச்சிகளை நேரலையில் தூர்தர்ஷனில் மட்டுமே காண முடியும் என்றும் அவர் கூறினார். இந்திய பாரம்பரியத்தையும், இந்திய பெருமையும், இந்திய கலாச்சாரத்தையும் நிலை நிறுத்தும் வகையில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதாக அவர் தெரிவித்தார்.
டிடி தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளான, என்றும் நினைவில் நிற்கும் ஒளியும் ஒலியும், வயலும் வாழ்வும், கண்மணிப் பூங்கா, பூவையர் பூங்கா, விநாடிவினா, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் போன்றவை நம் நினைவில் நிற்கின்றன என்றும் இது இன்னும் பல்லாண்டுகள் தொடர்ந்து சிறந்த சேவையை நாட்டு மக்களுக்கு வழங்கும் என்றும் அவர் கூறினார். இதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அமைச்சர் தெரிவித்தார்.
டிடி தமிழ் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பொன்விழா கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சி பெரிய அளவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மும்பையில் வரும் மே 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை, உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடான வேவ்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இந்நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு நாள் முழுவதும் பங்கேற்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஹாலிவுட் திரைப்படங்களின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மேற்கோள்ளும் அளவிற்கு இந்திய திரைத் துறை தற்போது சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். படைப்பாற்றல் திறன் கொண்ட இளைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாகவும் வேவ்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இது ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை சார்ந்த அனைவரையும் ஒருங்கிணைக்கும் என்றும் இந்த மாநாடு, நாட்டின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்றும் இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் கே பி சதிஷ் நம்பூதிரிபட், பரதநாட்டியக் கலைஞர் பத்ம விபூஷண் பத்மா சுப்ரமணியம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சியின் துணைத் தலைமை இயக்குநர் ஆர். கிருஷ்ணதாஸ் மற்றும் செய்திப்பிரிவு இயக்குநர் குருபாபு பலராமன் உள்ளிட்டோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.