சமூக மாற்றத்திற்கு வழிகாட்டியாக திகழும் சமூக வானொலி
(டாக்டர் பிரிஜேந்தர் சிங் பன்வார் , மூத்த பத்திரிகையாளரும் எம் எஸ் பன்வார், தகவல் தொடர்பு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் &
நிகிதா ஜோஷி, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உதவி இயக்குநர், மும்பை)
ஹேஷ்டேக்குகள், வரைகலைகள், காட்சிப்பட ரீல்கள் போன்றவை தற்போதைய டிஜிட்டல் உலகில், தகவல்தொடர்பு சாதனங்களாக பல்வேறு ஊடகங்களில் விரிவடைந்துள்ளன. இன்று இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் இணையதளம் வாயிலாக விரைவான தகவல் தொடர்பு சேவையை சாத்தியமாக்கியுள்ளன. பல்வேறு தகவல் தொடர்பு சாதன வசதிகள் இருந்த போதிலும் பயனுள்ள வழிமுறைகளுக்கு அவை வரையறை செய்யப்படுவது இன்றியமையாததாகும். இதன் காரமணாக தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் அவர்களது கலாச்சாரச் சூழல்கள் குறித்த ஒரு ஆய்வு, வெவ்வேறு தகவல்தொடர்பு ஊடகங்களை ஆய்வு செய்வதற்கு உதவுகிறது. படைப்பாற்றலுக்கு உத்வேகம் அளிக்கும் ஊடகமாக திகழும் சமூக வானொலி, கல்வி நிறுவனங்கள், கிராமப்புறங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதன் தேவை அதிகரித்து வருகிறது. வானொலி என்பது குறைந்த செலவில் அடித்தட்டு மக்களுக்கு பயன்படக் கூடிய எளிதான ஊடகமாக உள்ளது. இந்த சமூக வானொலி மூலம் சாமானிய மக்கள் தங்களது சொந்த மொழியில் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவுகிறது. இது போன்ற சமூக ஊடகங்கள், சமூகத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கும் அது குறித்து விவாதிப்பதற்குமான ஒரு தளமாக அமைந்துள்ளது. எனவே இது போன்ற ஊடகங்கள் இணைந்து பொதுவான தளத்தில் இயங்க வகை செய்வதன் மூலம் தகவல் தொடர்பு மற்றும் அது தொடர்பான மேலாண்மை திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுவதுடன், சமூகத்தில் மாற்றங்களுக்கான ஊக்கியாகவும் உருவெடுக்கின்றன. எனவே வலுவான சமூகங்களை உருவாக்க இத்தகைய உள்ளூர் தகவல்தொடர்பு முயற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறவுள்ள "உலக ஒலி - ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு, 2025"-ல் சமூக வானொலி அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையை உலக நாடுகளின் சந்தைகளுடன் இணைக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது, புதுமைகளை வளர்ப்பது, இளம் திறமையாளர்களுக்கு உத்வேகம் அளிப்பது, கலாச்சாரப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது போன்றவை வேவ்ஸ் உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும். மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து, பதிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக வானொலி அமைப்பான இந்திய சமூக வானொலி சங்கம், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், இந்தியாவில் சமூக வானொலி நிலையங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகையில் இந்த உச்சிமாநாடு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
சமூக வானொலியில் படைப்பாற்றல் போட்டி என்பது 32 படைப்பாறல் தொடர்பான போட்டிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றும் படைப்பாற்றல் திறன்களை சோதிக்கவும், அனிமேஷன், கேமிங், விளையாட்டு, காமிக்ஸ், திரைப்படத் தயாரிப்பு போன்ற பல்வேறு துறைகளில் தங்களது தனித்துவமான திறமைகளை இளைஞர்கள் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சமூக வானொலி உள்ளடக்கப் போட்டி சவால் சமூக வானொலி நிலையங்கள் சார்ந்த பல்வேறு திறன்கள் மற்றும் தனித்துவமான குரல் வளங்களை முன்னிலைப்படுத்தவும், புதிய வடிவங்கள், வகைப்பாடுகள் மற்றும் கதை சொல்லும் நுட்பங்களை பரிசோதிக்கும் வகையில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக வானொலிகள் பொது அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் கற்றல் திறனை மேம்படுத்தவும், தகவல் தொடர்பு இணைப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்க உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வகையான போட்டிகள் சமூகங்களில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த உதவிடும். பொது சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி & எழுத்தறிவு, பெண்கள் & குழந்தைகள் மேம்பாடு, சமூக நீதி, வாதிடும் திறன், வேளாண்மை, ஊரக மேம்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் இருந்து இந்த போட்டிகளுக்கான உள்ளடக்கங்கள் கோரப்பட்டுள்ளன. புகழ்பெற்ற ஊடக பிரமுகர்கள், சிஆர்ஏஐ அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் குழு, போட்டியாளர்களின் உள்ளீடுகளை மதிப்பீடு செய்து, இறுதியாக வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்குகிறது.
-----