உலகை மறுவடிவமைக்கும் புவிசார் அரசியல் போக்குகள் வழிநடத்துதல்
- அமிதாப் கந்த்
நித்தி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி
சென்னை
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் நிர்வாகம் வரிக் கொள்கையில் மாற்றங்களை செய்து கொள்கைகளை மறுவரையறை செய்து வருகிறது. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகளின் அதன் தாக்கங்கள் உணரப்படுகின்றன. இந்த முடிவுகள் வர்த்தக சமநிலையை மேம்படுத்துவதன் மூலமும், பொது செலவினங்களைக் குறைப்பதன் மூலமும் அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்தும், உலக சுகாதார அமைப்பிலிருந்தும், சர்வதேச நீதிமன்றத்திலிருந்தும் அமெரிக்கா விலகி உள்ளது. இந்த நடவடிக்கைகள் உலகளாவிய புவிசார் அரசியல் ஒழுங்கில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி வருகின்றன. இந்த வெற்றிடம் நீண்ட காலம் நீடிக்காது. அது மற்ற போட்டி சக்திகளால் நிரப்பப்படும். அமெரிக்கா மிகவும் சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், பன்முக உலகின் எழுச்சி இப்போது ஏற்பட்டுள்ளது. உலகமயமாக்கல், தொழில்நுட்ப மேலாதிக்கம், எரிசக்தி தொடர்பான புவிசார் அரசியல் ஆகியவை உலகை மறுவடிவமைக்கும் முக்கிய புவிசார் அரசியல் போக்குகளாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் நாம் கண்ட உலகமயமாக்கலின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின்னர், சிறிது சிறிதான உலகமயமாக்கலை நாம் கண்டுள்ளோம். கொவிட் தொற்றுநோய் பாதிப்பு உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இது நாடுகளையும் வணிகங்களையும் மாற்று விநியோகச் சங்கிலிகளை உருவாக்கத் தூண்டியது. டிரம்ப் நிர்வாகம் மீண்டும் கடும் வரிவிதிப்புகளைப் பின்பற்றுவதால், வர்த்தகப் போர்களின் இரண்டாவது சகாப்தம் தொடங்கி உள்ளது. வர்த்தகப் போர்கள் உலக வர்த்தகத்தை பெரிதும் சீர்குலைக்கும். வர்த்தகப் போர்கள் இனியும் வெறுமனே வணிகப் பொருட்களை மட்டுமல்லாமல் அவை தொழில்நுட்பம், எரிசக்தி போன்றவற்றையும் பாதிக்கும்.
உலக வர்த்தக அமைப்பு நிலையற்ற சூழலில் உள்ள நிலையில், நாடுகள் இருதரப்பு அல்லது பன்முக வர்த்தக ஒப்பந்தங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. நட்பு நாடுகளின் எழுச்சியும், மாற்று விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் இலக்கும் இந்தியாவுக்கு வாய்ப்புகளை அளிக்கின்றன. சரியான கொள்கைகள், உத்திசார் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள், எளிதாக வர்த்தகம் செய்வதில் கவனம் செலுத்துவது ஆகியவற்றின் மூலம் உற்பத்திக்கான முதலீடுகளை நாம் ஈர்க்க முடியும்.
முதல் தொழிற்புரட்சி முதல் நான்காவது தொழிற்புரட்சி வரை உலகளாவிய அதிகார இயக்கவியலை வடிவமைக்கும் முக்கிய உந்து சக்தியாக தொழில்நுட்பம் இருந்து வருகிறது. இன்றைய சகாப்தத்தில், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.
தீமைகளை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் தொழில்நுட்பம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உலக சமூகம் உறுதி செய்ய வேண்டும். பிளவுகளை அதிகரிக்காமல் ஒரு பாலமாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்திய மாதிரி, உலகிற்கு ஒரு முன்மாதிரியாக அமையும்.
தூய எரிசக்தியை நோக்கிய மாற்றம், எரிசக்தித் துறையை மறுவரையறை செய்கிறது. முக்கியமான தாதுக்களான லித்தியம், கோபால்ட், போன்றவை நிறைந்த நாடுகள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. உலகின் 80% சூரிய மின்கலங்கள் சீனாவால் உற்பத்தி செய்யப்படுகின்றன. மின்சார வாகன பேட்டரிகள் உற்பத்தியில் சீனா ஏற்கனவே முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகி, அதற்கு பதிலாக புதைபடிவ எரிபொருள் விரிவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளது. இது உலகளாவிய பசுமை எரிசக்திக்கு மாற்றத்தில் சிக்கலை ஏற்படுதுதுவதாக அமைந்துள்ளது.
ஜி7 நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கும் இலக்கும் தற்போது தள்ளிப்போயுள்ளது. வளரும் நாடுகளுக்கு பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான தங்கள் பொறுப்பில் இருந்து வளர்ந்த நாடுகள் தவறி உள்ளன. இது வளரும் நாடுகளின் லட்சியங்களை பூர்த்தி செய்வதை தடுப்பதாக அமைந்துள்ளது. தூய்மையான எரிசக்தியை நோக்கிய நமது பயணத்திற்கு புதிய உலகளாவிய கூட்டணிகள் தேவைப்படுகின்றன. அடுத்த தலைமுறை சூரிய சக்தி தகடுகள், எலக்ட்ரோலைசர்கள் மற்றும் மாற்று செல் வேதியியல் பேட்டரிகள் போன்ற தொழில்நுட்பத்தில் நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். பசுமை ஹைட்ரஜன், சூரிய மின்சக்தி மற்றும் மின்சார வாகன போக்குவரத்து ஆகியவற்றில் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தை வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் கூறி வருவது போல், பருவநிலை மாற்றம், தொற்றுநோய்கள் மற்றும் உறுதியற்ற நிதித்தன்மை ஆகியவை மிகப்பெரிய சவால்களாகும். காலாவதியான கொள்கைகளை கொண்ட உலகளாவிய நிறுவனங்களின் மூலம் இந்த சவால்களை நாம் எதிர்த்துப் போராட முடியாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். உலகளாவிய பொருளாதார மாதிரியை வடிவமைக்கவும், உள்ளடக்கிய சர்வதேச அமைப்புக்காக வாதிடவும் இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
வரவிருக்கும் 10 ஆண்டுகள் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும். உலக அரங்கில் இந்தியா தன்னை ஒரு நடைமுறை தலைமைத்துவ நாடாக நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் இந்த சகாப்தத்தின் வரையறுக்கும் அம்சமாக மாறி வருகிறது.
***