நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு பற்றிய விளக்கம்
சென்னை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், மற்றும் ஓய்வூதியத்தில் 24% உயர்த்தப்படுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்தது. 2025, மார்ச் 24 அன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 1 லட்சம் ரூபாயிலிருந்து 1.24 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் இது 2023, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இது பொதுமக்களிடம் பல்வேறு தவறான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய திருத்தம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்புரிமை முடிவிலிருந்து பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட நடைமுறையாக மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் வலுவான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊதிய விகித திருத்தத்தின் பின்னணியில் உள்ள செயல்முறை
2018-ம் ஆண்டின் நிதிச் சட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை பணவீக்கத்துடன் இணைக்கிறது. இந்த திருத்தத்திற்கு முன்னர், ஊதிய விகிதங்கள் தற்காலிக அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டன. இதற்கு ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்பட்டது. இந்த திருத்தம், ஊதிய செயல்முறையை அரசியலற்றதாக மாற்றியுள்ளதுடன் நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது.
2018-ம் ஆண்டுக்கு முன் 2010-ம் ஆண்டு ஊதிய உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 16,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்படுவதற்கான மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்த முடிவு அப்போது விமர்சனத்திற்கு வழிவகுத்தது. ஏனெனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மடங்கு தங்களுக்கு தாங்களே ஊதிய உயர்வை வழங்கிக் கொண்டதாக பலர் கருதினர்.
எனினும், அப்போது முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உயர்வு போதுமானதல்ல என்றும் குறைந்தது ஐந்து மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கொவிட்-19 காலத்தில் தற்காலிக சம்பள குறைப்பு
கொவிட்-19 தொற்றுநோய் பாதிப்பின் போது, 2020 ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு 30% ஊதியக் குறைப்பு நடவடிக்கையை அரசு செயல்படுத்தியது. தொற்றுநோயைக் கையாள்வதில் மத்திய அரசின் நிதி ஆதாரங்களை பெருக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மாநிலங்களில் முதலமைச்சர்கள் செயல்படுத்திய ஊதிய உயர்வு நடவடிக்கைகள்
பல மாநிலங்களில் முதலமைச்சர்கள் தங்களுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குமான ஊதியத்தை தீர்மானிப்பதில் தன்னிச்சையான வழிமுறையை தொடர்ந்து பின்பற்றுகின்றனர். இந்த ஆண்டு அண்மையில் கர்நாடக முதலமைச்சர் திரு சித்தராமையா தனக்கு தானே 100% ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்தார்.
அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 50% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.
ஜூன் 2024-ல், ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு தன்னிச்சையாக முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 50% வரை உயர்த்தியது.
2023-ம் ஆண்டில், தில்லியில் திரு அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு 136% ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் 66% அதிகரிக்கப்பட்டது.
2023-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் செல்வி மம்தா பானர்ஜி அரசு சட்டபேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை 50% உயர்த்தியது. 2018-ம் ஆண்டு கேரளாவில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் 66% உயர்த்தப்பட்டது.
2016-ம் ஆண்டில் தெலுங்கானாவின் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு 163% ஊதிய உயர்வை அறிவித்தது.
இதேபோல், 2016-ம் ஆண்டில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையே 83% ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது.
பணவீக்கத்தின் அடிப்படையிலான ஊதிய மாற்றம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தைப் பொருத்தவரை தற்போது திருத்தப்பட்ட செயல்முறையின் கீழ், செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மாற்றியமைக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில் அடிப்படை ஊதியம் மாதத்திற்கு 1 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது, செலவு பணவீக்க குறியீட்டின் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு 1.24 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும். இந்த நடைமுறைகள் வெளிப்படையானவை, தன்னிச்சையான முடிவுகளை விட பொருளாதார அளவீடுகளை அடிப்படையாக கொண்ட ஊதிய உயர்வு இதுவாகும்.
*****