விளையாட்டு உலகில் இந்தியாவின் எழுச்சி
சென்னை, டிசம்பர் 31, 2024
2024-ம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டுத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சாதனைகள் காரணமாக உலக அளவில் விளையாட்டு போட்டிகளுக்கான மையமாக உருவெடுப்பதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பல்வேறு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நோக்கத்திலான திட்டம் போன்ற முக்கிய முயற்சிகளின் மூலம் இந்திய விளையாட்டுத்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது. நீரஜ் சோப்ராவின் வெற்றி, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை இந்திய விளையாட்டுத்துறையில் நவீன காலத்தின் முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளன.
பிரதமர் திரு நரேந்திர மோடி: இந்திய விளையாட்டுகளை பெரிதும் ஊக்குவிப்பவர்
பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் விளையாட்டு வீரர்களுடன் தொடர்புகொண்டு, ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும், தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்களது திறனை வெளிப்படுத்தி சாதனைப் படைத்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்து அவர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு பிறகு: திரு நரேந்திர மோடி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெறும் வீரர்கள் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் அனைத்து வீரர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார். ஒவ்வொரு வீரரின் பயணமும் இந்திய விளையாட்டுத் துறையின் வரலாற்றில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.
• 2024 - பாரிஸ் பராலிம்பிக் போட்டிக்கு முன்னர்: பராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய குழுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, அவர்களது துணிச்சல், மனஉறுதியைப் பாராட்டினார். பிறகு, அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் பிரதமர் இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டுப் பெற்றனர்.
• நீரஜ் சோப்ராவுடன் முக்கிய தருணம்: நீரஜ் சோப்ராவின் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு, அவரது தாயாருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது அன்பை இனிமையாக வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான தருணம்.
• வந்திகா அகர்வாலிடமிருந்து பரிசு: இந்திய செஸ் வீராங்கனை வந்திகா அகர்வால் 2012-ம் ஆண்டின் 'சுவாமி விவேகானந்தா மகளிர் செஸ் திருவிழாவின்' போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பரிசாக அளித்தார். அப்போது, பிரதமர் அவருக்கு அளித்த வரவேற்பு மனதை நெகிழ வைத்தது.
இத்தகைய நெகிழ்ச்சியான தருணங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மூலம் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அளித்து வரும் உத்வேகம் அவர்களது வெற்றிக்கு தூண்டுதலாக அமைந்துள்ளன.
இந்தியாவின் விளையாட்டு கனவுகள் பெரிய அளவில் விரிவடைந்துள்ளன
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை நோக்கமாகக் கொண்டு இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு அதிகாரபூர்வ கோரிக்கை மனுவை அளித்தது.
கேலோ இந்தியா மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் திட்டம்:
இந்தியாவின் விளையாட்டுத் திறனை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு கேலோ இந்தியா, ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
***