மாறிவரும் இந்தியாவின் முகமாக பரிணமிக்கும் ரயில்வே
-ஜெய வர்மா சின்ஹா
நமது தேசம் தனித்துவமானது. பல அம்சங்களில் பன்முகத்தன்மை கொண்டது. நம்மைப் பொறுத்தவரை கங்கையும், கோதாவரியும் வெறும் நதிகளின் பெயர்கள் அல்ல; அவை உயிர் கொடுக்கும் தாய்க்கு நிகரானவை. இசை என்பது காதுகளுக்கு இன்பம் தருவது மட்டுமல்ல, சுருதியையும் தாளத்தையும் பயிற்சி செய்து தேர்ச்சி பெறுவதற்கான ஒரு வழியாகும். இதேபோல், இந்திய ரயில்வே என்பது இயந்திரம் மற்றும் பெட்டிகளைக் கொண்ட போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல; நமது தொழிலாளர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களை, அவர்களின் குடும்பங்களோடும் உறவினர்களோடும் இணைக்கும் உணர்வுபூர்வமான உறவுகளின் பாலமாக இது திகழ்கிறது. நமது ரயில்கள் கிழக்கிலிருந்து மேற்காகவோ அல்லது வடக்கிலிருந்து தெற்காகவோ உள்ள தண்டவாளங்களில் மட்டும் ஓடவில்லை; உண்மையில், அவை உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைத் தாங்கி ஓடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் கோடிக்கணக்கான மக்கள் வீடு திரும்பும் போது, இந்த லட்சியங்களுக்கான சோதனைக் காலம் வருகிறது. இந்தப் பருவத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதுபோன்ற சூழ்நிலைகளில், சீரான ரயில் இயக்கத்தை நிர்வகிப்பது மட்டும் போதாது. ரயில் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு, தங்குமிடம், குடிநீர் போன்ற முறையான வசதிகளையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தவிர, பல தன்னார்வ அமைப்புகளும் இந்த நிலைமையை நிர்வகிக்க உதவியையும் ஆதரவையும் வழங்குகின்றன. கோடிக்கணக்கான பயணிகள் தினமும் தங்கள் இடங்களை அடைய உதவுவதில் இந்திய ரயில்வேக்கு பல தசாப்த கால அனுபவம் உள்ளது,
பண்டிகை காலங்களில், இந்திய ரயில்வே 1,70,000 ரயில் பயணங்களுக்கு கூடுதலாக 7,700 சிறப்பு ரயில்களை இயக்கியது என்பதை அறிந்து போக்குவரத்து மேலாண்மை வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பண்டிகை காலங்களில் புது தில்லி ரயில் நிலையம் அதிக போக்குவரத்தைக் காண்கிறது. இந்தக் காலகட்டத்தில் 64 சிறப்பு ரயில்களும் 19 முன்பதிவில்லா ரயில்களும் தேவைக்கேற்ப இயக்கப்படுகின்றன.
வெளிநாட்டு விருந்தினர்களுடனான ஒரு சந்திப்பில் பண்டிகை காலங்களில் ரயில் பயணம் என்ற தலைப்பு விவாதிக்கப்பட்டபோது, இந்த ஆண்டு, நவம்பர் 4-ம் தேதி மட்டும், சூரியக் கடவுளை வணங்கும் சாத் பூஜை விழாவுக்கு முன், குறைந்தது மூன்று கோடி பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர் என்பதையும், சுமார் 25 கோடி பேர் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வேயைப் பயன்படுத்தி தங்கள் இடங்களை சென்றடைந்தனர் என்பதையும் அறிந்து ஒரு தூதர் ஆச்சரியப்பட்டார். "பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் ஒரு சில நாட்களில் உங்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர்" என்று அந்தத் தூதர் புன்னகையுடன் குறிப்பிட்டார்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? நிலைமை எவ்வாறு கையாளப்படுகிறது? மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் கூடிய வந்தே பாரத், அம்ரித் பாரத் மற்றும் நமோ பாரத் போன்ற நவீன ரயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய ரயில்வே ஒரு புதிய மற்றும் உலகத் தரம் வாய்ந்த பயணத்தைத் தொடங்கியுள்ளது. கூடுதலாக, நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. மாறிவரும் இந்தியாவின் பரிணாம வளர்ச்சி இப்போது இந்திய ரயில்வேயின் மாற்றத்தில் பிரதிபலிக்கிறது.
கட்டுரையாளர்: இந்திய ரயில்வேயின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய முதல் பெண் ஆவார்.