கோவையில் ஊடகவியலாளர் பயிலரங்கு
கோவை : நவ,18
இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், கோவையில் "ஊடகவியலாளர் பயிலரங்கு" இன்று (18.11.2024) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
போலிச் செய்திகளை தடுப்பது எப்படி?
இந்தப் பயிலரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநர்(பொ) திரு வி பழனிச்சாமி, பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை தடுப்பதில் ஊடகத்தின் பங்கு குறித்தும், சரியான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகத்தின் பொறுப்புணர்வு குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஊடகவியலாளர்கள் மக்களிடம் கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டார்.
பாதுகாப்பான வெளிநாட்டு வேலை
பயிலரங்கின் முதல் அமர்வில் பேசிய குடிபெயர்வோர் பாதுகாவலர் திரு எம் ராஜ்குமார், சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், முறையான வகையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.
மேலும், வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்கள் கடத்தப்படுவதுடன், அவர்களை இணைய அடிமைகளாக வேலை வாங்குவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இது போன்று அழைத்துச் செல்லப்படுவோர், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய குடிமக்கள் போன்று நடந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வெளிநாடு செல்வோர், வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர்கள் மூலம் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் விவரத்தை emigrate.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். வெளிநாடுகளில் பணியாற்றச் செல்லும் இந்தியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் 90421 49222 என்ற செல்பேசி உதவி எண்ணை தொடர்பு கொள்வதுடன், இதே எண்ணில் வாட்ஸ்அப் மூலமும் அணுகலாம் என திரு ராஜ்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் செயல்பாடு
புத்தொழில் நிறுவனங்கள் குறித்து பேசிய ஸ்டார்ட் அப் தமிழ்நாடு துணைத்தலைவர் திரு சிவகுமார், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பின் செயல்பாடுகளால், நமது கண்டுபிடிப்பு சூழலியல் மற்றும் புத்தொழில் சூழலியல் தரவரிசையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார்.
TANSEED, தமிழ்நாடு SC/ST புத்தொழில் நிதியம், TANFUND அமைப்பு, ஏஞ்சல்ஸ் தமிழ்நாடு, TANSCALE, புத்தொழில் முதலீட்டாளர் மாநாடு போன்றவை மூலமாக, முதலீட்டு முன்முயற்சிகளை மேற்கொள்வது குறித்து விளக்கம் அளித்த அவர், இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் தான் 127 இன்குபேஷன் மையங்கள் செயல்படுவதாக கூறினார்.
ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, தனது முதலாவது உலகளாவிய ஒருங்கிணைப்பு மையத்தை துபாயில் அமைக்கவிருப்பதாக குறிப்பிட்ட திரு சிவகுமார், கோயம்புத்தூரில் இன்னும் சில மாதங்களில் உலகளாவிய புத்தொழில் மாநாடு நடைபெறவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இணைய குற்றங்களை தடுக்கும் வழிமுறை
இணையகுற்றங்கள் தொடர்பாக பேசிய கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் திரு அருண், மோசடியான முதலீடு, தொலைபேசி அழைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகள், கிரிப்டோ கரன்சி முறைகேடு, டிஜிட்டல் கைது, ஃபெட்எக்ஸ் கூரியர் முறைகேடு போன்றவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கிக் கூறினார்.
பாதுகாப்பான கடவுச் சொற்களை பயன்படுத்துவதுடன், நமக்கு நன்கு அறிமுகமானவர்களுடன் மட்டும் சமூக ஊடகங்களை பின்தொடர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இணைய குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணிலோ, cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், mkavach 2.0 என்ற ஆண்டிவைரஸ் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை திறக்க வேண்டாம் எனவும் ஆய்வாளர் திரு அருண் அறிவுறுத்தினார். செல்போன்கள் தொலைந்து போனால் உடனே அது குறித்து ceir.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
உண்மை செய்திகளை உறுதிப்படுத்துதல்
சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குநர் திரு பி அருண் குமார், வரவேற்புரையாற்றியதுடன், உண்மையான செய்தி அல்லது தகவல் எது என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்துவதோடு, போலிச் செய்திகளை வெளிவராமல் தடுப்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். கோவை களவிளம்பர அலுவலர் திரு சந்திரசேகர் நன்றி கூறினார்.