இந்திய சர்வதேச திரைப்பட விழா… மலரும் நினைவுகள்
*** கட்டுரையாளர் சிலாதித்யா சென்
பாயல் கபாடியாவில் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக ஐநாக்ஸ் திரையரங்கம் முன்பாக நீண்ட வரிசை காத்திருந்தது, எனக்குப் பின்னாலும் ஏராளமானோர் வரிசையில் நின்றிருந்தனர். இந்த ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முதல் நாளில், ‘ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. மிருணாள் சென்னின் ‘காரிஜ்’, 1983-ம் ஆண்டு கேன்ஸ் படவிழாவில் நடுவர் குழுவின் பரிசை வென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கேன்ஸ் படவிழாவில், முக்கியமான கிராண்ட் பிரிக்ஸ் பரிசை வென்றதன் மூலம், மற்றொரு இந்திய இயக்குநரான பாயல் வரலாறு படைத்துள்ளார். வாழ்க்கையின் பலதரப்பையும் சேர்ந்த சேர்ந்த மக்கள், காலை 9 மணிக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக முன்னதாகவே வந்துவிட்டனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த அவர்கள், கோவா வந்துள்ளனர். காலை எழுந்தவுடனேயே, காலைச் சிற்றுண்டியைக் கூட சரியாக உட்கொள்ளாமல், அவர்கள் நேரடியாக திரையரங்குக்கு வந்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, 1995-ம் ஆண்டு அப்போதைய பம்பாய் நகரில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நோக்கி, எனது நினைவுகள் செல்கின்றன. பிரசித்திப் பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான ஃபெடரிக்கோ ஃபெலினி, இயற்கை எய்திய சில நாட்களில், அந்த ஆண்டு திரைப்பட விழாவின் போது தினந்தோறும் காலை நேரத்தில் அவரது படங்கள் திரையிடப்பட்டன. ஃபெலினியின் படங்களை திரையிடுவதற்கென பிரத்யேக பிரிவு ஒன்று அர்ப்பணிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நான் இளம் பத்திரிகையாளராகவும், திரைப்பட ஆர்வலராகவும் இருந்தேன். சினிமா மீதான மோகத்தால், நெரிசல் மிகுந்த ரயில்களில் சாண்டா குரூசிலிருந்து சர்ச் கேட் வரைப் பயணித்து அதன் பிறகு வேகமாக ஓடி, பேருந்தைப் பிடித்து நாரிமன் பாய்ண்ட் சென்று மரைன் ட்ரைவ் பகுதியின் கடைக்கோடியில் உள்ள என்சிபிஏ செல்வேன்.
அந்த இடம் திரையரங்கம் அல்ல என்றாலும் என்சிபிஏ-வில் திரையிடப்படுவது மிகச் சிறப்பானதாக இருக்கும். அப்போது தான் நான் முதன் முறையாக மின்னணு வடிவில் துணை தலைப்புகள் (Sub Title) போடுவதைக் கண்டேன். ஃபெலினியின் திரைப்படத்தில் அசூர்சீ காட்சிகள், மனதை கொள்ளை கொள்வதாக இருந்தன. படத்தின் முடிவில் தேநீரும், பாவ் பாஜியும் சாப்பிட்டுக் கொண்டே மெரைன் ட்ரைவ் கடற்கரைப் பகுதியின் எழிலை ரசிப்பது மற்றொரு சுவரஸ்யமாக இருக்கும். அதே போன்று மற்றொரு கடற்கரை நகரான பனாஜி, திரைப்பட விழாக்களுக்கான நிரந்தர இடமாக மாறியிருப்பது சிறந்த திரைப்படங்களை காணும் உற்சாகத்தில் எந்தக் குறைவையும் ஏற்படுத்தவில்லை.
நான் பிறந்த நகரான கொல்கத்தா, சத்யஜித் ரே மற்றும் மிருணாள்சென் ஆகிய உலகப் பிரசித்திபெற்ற இரண்டு திரைப்படத் தயாரிப்பாளர்களை இந்த உலகிற்கு தந்துள்ளது. இவ்விரு பிரபலங்களும், திரைப்படக் கலை என்பது பிராந்திய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தேசிய உணர்வுகள் முடிந்தால் சர்வதேச கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என நமக்குக் கற்பித்துள்ளனர்.
புத்தாயிரம் ஆண்டின் தொடக்கமான 2,000-மாவது ஆண்டில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக அருண் ஜேட்லி இருந்த போது, தில்லியில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. பிரபல தயாரிப்பாளரான மிருணாள் சென், சர்வதேச பிரிவுப் படங்களுக்கான நடுவர் குழுத் தலைவராகவும், பிரபல ஈரானிய இயக்குநரான அபாஸ் கியாரோஸ்டமி நடுவர் குழு உறுப்பினராகவும், பிரசித்தி பெற்ற நடிகர் சௌமித்ரா சட்டர்ஜி, அந்த ஆண்டு திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகவும் இருந்தனர். நானும் அந்த ஆண்டு இந்தியப் படங்களுக்கான நடுவர் குழு உறுப்பினராக பணியாற்றினேன். அந்த ஆண்டு விழாவின் நிறைவுப் படமாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படம் திரையிடப்பட்டது. நாஜிக்களின் கொடுமையிலிருந்து தப்பிய யூதர்கள் உலகின் பிற பகுதியை நோக்கி ஓடும் காட்சியை அந்த கருப்பு வெள்ளை திரைப்படத்தின் இறுதிக் காட்சியாக வண்ணத்தில் எடுத்திருந்தார் ஸ்டீல்பெர்க்.
அன்றைய தினம் சான்டாகுரூசில் உள்ள எனது ஓட்டலுக்கு நான் திரும்பிய வேளையில், நமது வரலாற்றை நினைத்துப் பார்க்கச் செய்யும் வல்லமை திரைப்படங்களுக்கு உண்டு என்பதை நான் உணர்ந்தேன்… இது போன்ற விழாக்கள் ஒட்டுமொத்த உலகையும் நம் கண் முன் கொண்டு வரும் ஆற்றலைப் பெற்றவை என்றால் அது மிகையல்ல.
----