இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம்: புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தலும் எதிர்காலத்தை வடிவமைத்தலும்-அஸ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர்
இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம்: புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தலும் எதிர்காலத்தை வடிவமைத்தலும்
-அஸ்வினி வைஷ்ணவ்,  
மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர்

"உலகம் முழுவதற்கும் இந்தியாவின் டிஜிட்டல் தூதர்கள் நீங்கள். உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிக்கும் குறியீட்டுத் தூதர்கள் நீங்கள்." - இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் எழுச்சியூட்டும் இந்த வார்த்தைகள், இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றன. இன்று, நம் படைப்பாளிகள் வெறும் கதைசொல்லிகள் மட்டுமல்ல; அவர்கள் தேசத்தை உருவாக்குபவர்கள், இந்தியாவின் அடையாளத்தை வடிவமைத்து, அதன் வளர்ச்சிவேகத்தை உலக அரங்கில் வெளிப்படுத்துபவர்கள்.
கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியுள்ள நிலையில், 'இளம் திரைப்பட தயாரிப்பாளர்களே  எதிர்காலம் இப்போது தயாராக உள்ளது' என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தப்படுகிறது. அடுத்த எட்டு நாட்களில், இந்திய சர்வதேச திரைப்பட விழா நூற்றுக்கணக்கான திரைப்படங்களைத் திரையிடும். தொழில்துறை வல்லுநர்களுடன் நுட்பமான  வகுப்புகளை நடத்தும். உலகளாவிய சினிமாவில் மிகச்சிறந்தவர்களை கௌரவிக்கும். உலகளாவிய, இந்திய சினிமா மேன்மையின் இந்த ஒருங்கிணைப்பு, புதிய கண்டுபிடிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கலாச்சார உறவின் சக்தியாக இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம்: விரிவடையும் எல்லை 
இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொழிலாக உருவெடுத்துள்ளது. இது  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 2.5% பங்களிப்பு செய்கிறது; 8% தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை  வழங்குகிறது. சினிமா, கேமிங், அனிமேஷன், இசை, சந்தை என பலவற்றை உள்ளடக்கிய இந்தத் துறை துடிப்பான இந்தியக்  கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது.
3,375 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தை, 200,000-க்கும் அதிகமான முழுநேர உள்ளடக்க படைப்பாளிகளுடன், இந்தத் தொழில், உலகளாவிய விருப்பங்களை இயக்குகின்ற  இந்தியாவின் மாற்றம் தரும் சக்தியாகும். குறிப்பாக, குவஹாத்தி, கொச்சி, இந்தூர் போன்ற நகரங்கள் படைப்பாற்றல் மையங்களாக மாறி வருகின்றன. இவை பரவலாக்கப்பட்ட படைப்பாற்றல் புரட்சியைத் தூண்டுகின்றன. 
இந்தியாவின் 110 கோடி இணையப் பயனர்களும், 70 கோடி சமூக ஊடகப் பயனர்களும் படைப்பாற்றலை ஜனநாயகப்படுத்துகின்றனர். சமூக ஊடகத் தளங்களும், ஓடிடி  தளங்களும் படைபாளிகளை உலகளாவிய பார்வையாளர்களுடன் நேரடியாக இணைக்க உதவுகின்றன. பிராந்திய உள்ளடக்கமும், வடமொழி கதைசொல்லலின் எழுச்சியும் நிலைமையை மேலும் பன்முகப்படுத்தியுள்ளன.  இது இந்தியாவின் படைப்பாற்றல்  பொருளாதாரத்தை உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுகிறது.
உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வெற்றியை அடைகின்றனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்வோரைக் கொண்டவர்கள் மாதத்திற்கு 20,000 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். இந்தச் சூழல் அமைப்பு பண ரீதியாக பலன் தருவதுடன், கலாச்சார வெளிப்பாட்டிற்கும்  சமூக தாக்கத்திற்கும்  ஒரு தளமாகவும் உள்ளது.
பல பரிமாணங்களில் தாக்கம்
படைப்பாற்றல் பொருளாதாரம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைத் தாண்டி ஓர்  ஆழமான செல்வாக்கைக் கொண்டுள்ளது. இது துணைத் தொழில்களை ஆதரிப்பதன் மூலம் சுற்றுலா, விருந்தோம்பல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கூடுதலாக, டிஜிட்டல் தளங்கள் விளிம்புநிலைக் குரல்களை மேம்படுத்துகின்றன. சமூக உள்ளடக்கம், பன்முகத்தன்மை, கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன. கதை சொல்லும் ஆற்றல் மூலம், இந்தியா தனது உலகளாவிய சக்தியை பாலிவுட் முதல் பிராந்திய சினிமா வரை அதிகப்படுத்துகிறது. உலக அரங்கில் அதன் வளமான கலாச்சார விவரிப்பை வெளிப்படுத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி நடைமுறைகள், நிலையான வடிவமைப்பின் எழுச்சி ஆகியவற்றில் காணப்படுவது போல், சுற்றுச்சூழல் உணர்வுள்ள வளர்ச்சிக்கு அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.  
மாற்றத்திற்கான அரசின்  தலையீடுகள்
இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை உலக அரங்கில் உயர்த்த, ஒரு வலுவான திறமைச் சூழலை வளர்த்தல், படைப்பாளிகளுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், கதைசொல்லிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் என்ற மூன்று முக்கிய தூண்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. இந்தத்  தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, இந்தியப் படைப்பாற்றல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்டுள்ளது. புதுமையையும்,  படைப்பாற்றலையும்  வளர்ப்பதில் அரசின் உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது. சினிமா, அனிமேஷன், கேமிங் அல்லது டிஜிட்டல் கலைகளில் இந்தியப் படைப்பாளிகள் உள்நாட்டில் ஒன்றிணைக்கும் கலாச்சார சக்தியாகவும், உலகளாவிய பொழுதுபோக்கில் முன்னணி செல்வாக்குடனும் தொடர்ந்து செழித்து வளர்வதை உறுதி செய்வது  இந்தியப் படைப்பாற்றல் தொழில்நுட்பக் கழகத்தின் நோக்கமாகும். திரைப்படத் தயாரிப்பில் அண்மைக்கால  தொழில்நுட்பங்கள், அதிவேக அனுபவங்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றைத் தழுவுவதன் மூலம், உள்ளடக்க உருவாக்கத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்ய இந்தியா தயாராக உள்ளது.
உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்) என்பது உள்ளடக்க உருவாக்கத்திலும் புத்தாக்கத்திலும் உலகளாவிய அதிகார மையமாக நாட்டை நிலைநிறுத்துவதற்கான ஒரு மைல்கல் முயற்சியாகும். ஒலி, ஒளி மற்றும்  பொழுதுபோக்குத் துறைகளின் எதிர்காலத்தை வடிவமைக்க படைப்பாளிகள், தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும்  தளமாக வேவ்ஸ் செயல்படுகிறது. ‘இந்தியாவில் உருவாக்கு’ என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்துடன் இணைந்த இந்த உச்சிமாநாடு ஒத்துழைப்பை வளர்க்கிறது.  இந்தியாவின் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது; உலகளாவிய கூட்டாண்மைகளை ஊக்குவிக்கிறது.
‘இந்தியாவில் உருவாக்கு சவால்கள்’ என்பது இந்தியப்  படைப்பாற்றல் பொருளாதாரத்தின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோடி முயற்சியாகும். உலக ஒலி, ஒளி மற்றும்  பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட இந்த சவால்கள், அனிமேஷன், கேமிங், இசை, ஓடிடி, அதிவேக கதைசொல்லல் போன்ற முக்கிய துறைகளில் திறமைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 14,000-க்கும் அதிகமான பதிவுகளுடனும் புத்தொழில் நிறுவனங்கள், சுயேச்சை படைப்பாளிகள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பங்கேற்புடனும் இந்த முயற்சி இந்தியாவின் புதுமை உணர்வை வெளிப்படுத்துகிறது. 
இந்தியாவை உலகிற்கு எடுத்துச் செல்லும் முன்னோக்கிய பாதை 
இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் எட்டு நாள் கொண்டாட்டத்தை நாம் தொடங்கும்போது, செய்தி தெளிவாக உள்ளது: இந்தியாவின் படைப்பாளிகள் உலகளாவிய படைப்பாற்றல் பொருளாதாரத்தை வழிநடத்த தயாராக உள்ளனர். கொள்கை சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்குவிப்புகள் மூலம் இந்தச் சூழல் அமைப்பை ஆதரிக்க மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
நமது படைப்பாளிகளுக்கு, செயல்முறைக்கான அழைப்பு எளிமையானது. ஆனால் ஆழமானது. 5ஜி, மெய்நிகர் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துங்கள். இந்தியாவின் தனித்துவமான அடையாளத்தைப்  பிரதிபலிக்கும் அதே வேளையில், புவியியல் தடைகளைத் தாண்டி, உலக அளவில் எதிரொலிக்கும் கதைகளைச் சொல்லும் தளங்களைப் பயன்படுத்துங்கள்.
புதுமைசெய்பவர்கள், ஒத்துழைப்பவர்கள், தடையின்றி உருவாக்குபவர்களுக்கு எதிர்காலம் சொந்தமானது. இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம் உத்வேகம், பொருளாதார வளர்ச்சி, கலாச்சார உறவு,  உலகளாவிய தலைமை ஆகியவற்றிற்கு கலங்கரை விளக்கமாக இருக்கட்டும். ஒவ்வொரு இந்தியப் படைப்பாளியும் உலகளாவிய கதைசொல்லியாக மாறுவதையும், நாளைய காலத்தை வடிவமைக்கும் கதைகளுக்காக உலகம் இந்தியாவை நோக்கி இருப்பதையும் நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம். 
*********
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image