கலாச்சாரங்களை இணைத்து, திறமைசாலிகளை கௌரவித்து எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா
-சைதன்ய கே பிரசாத்
(திரைப்பட விழாக்கள் இயக்குநரகத்தின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழா இயக்குநர்)
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI- ஐஎஃப்எஃப்ஐ), 2024 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற உள்ளது. இது திரைப்பட கொண்டாட்டங்களில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்த உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் விழா ஒரு திரைப்பட விழா என்பதற்கும் மேலாக கூடுதல் சிறப்புகளுடன் இருக்கும். இது உலகளாவிய கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பு, வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கான தளம், இந்தியாவின் திரைப்பட பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் நிகழ்வு என பன்முக விழாவாக அமைந்துள்ளது. இந்த விழா இந்தியாவின் துடிப்பான கலாச்சாரத்தையும் உலக அரங்கில் திரைப்படக் கலையையும் கொண்டாடும் ஒரு தனித்துவமான சர்வதேச திரைப்பட விழாவாகும்.
இந்த ஆண்டு, ஐஎஃப்எஃப்ஐ விழாவைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவை "கவனம் செலுத்தும் நாடு" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய- ஆஸ்திரேலிய கலாச்சாரங்களை இணைப்பதற்கும், சர்வதேச புரிதலை வளர்ப்பதற்குமான இந்த விழாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது. இதன் மூலம் இந்தியத் திரைப்பட ரசிகர்கள் ஆஸ்திரேலியத் திரைப்படங்கள் குறித்து நன்கு புரிந்துகொள்ள இயலும். இந்த கவனம் செலுத்தும் பிரிவின் மூலம், திரைப்பட ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் தனித்துவமான, திரை மொழியை உணரமுடியும்.
ஐஎஃப்எஃப்ஐ 2024 பாரம்பரிய திரைப்படத் திரையிடலைத் தாண்டி ஒரு சிறப்பு அனுபவத்தை உருவாக்குகிறது. இந்த திருவிழா உலகின் கதைகள், மக்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது.
இந்த ஆண்டு விழாவின் "இந்திய திரைப்படத்தின் சிறந்த அறிமுக இயக்குநர்" என்ற விருது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த தலைமுறை இந்திய திரைப்பட படைப்பாளிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இந்த விருது வெறும் அங்கீகாரம் மட்டுமல்ல. இது ஒரு இளம் இயக்குநரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணமாக அமையும். புதியப் படைபாளிகளை ஊக்குவிக்கவும், போட்டி நிறைந்த இந்தத் துறையில் திறமைசாலிகளை கண்டறிந்து அங்கீகரிக்கவும் இதுபோன்ற விருதுகள் பயன்படும்.
இந்த ஆண்டு விழா, இந்திய சினிமாவின் ஜாம்பவான்களான ராஜ் கபூர், தபன் சின்ஹா, அக்கினேனி நாகேஸ்வர ராவ் (ஏ.என்.ஆர்), முகமது ரஃபி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துகிறது. ஐஎஃப்எஃப்ஐ-யின் பிலிம் பஜார், இப்போது அதன் 18-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர்கள், நிதியாளர்கள், விநியோகஸ்தர்கள், சர்வதேச திரைப்படத் தொழில்துறை பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் சந்தையாக இந்த பிலிம் பஜார் திகழ்கிறது. ஃபிலிம் பஜார் என்பது கதைகளை திரைப்படமாக்குவதற்கான முதலீட்டாளர்களைக் கண்டறியும் இடமாகும். இந்த பிரத்யேக தளம் ஐஎஃப்எஃப்ஐ விழாவை மற்ற திரைப்பட விழாக்களில் இருந்து வேறுபடுத்துகிறது. இது படைப்பாளிகள் வளர்வதிலும், அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்திய, சர்வதேச திரைப்பட படைப்பாளிகளுக்கு, ஃபிலிம் பஜார் என்பது உலகளாவிய நுழைவாயிலாகவும், தங்களது எதிர்கால திட்டங்களுக்கு ஆதரவைப் பெறுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாகவும் அமைகிறது.
ஐ.எஃப்.எஃப்.ஐ-யின் இந்திய பனோரமா பிரிவு திருவிழாவின் ஒரு அடையாளமாக மாறியுள்ளது. இந்தப் பிரிவு ரசிகர்களுக்கு சமகால இந்திய சினிமாவின் வித்தியாசமான அம்சங்களை வழங்குகிறது. இந்திய சினிமாவை அதன் அனைத்து சிறப்புகளுடனும், பன்முகத்தன்மையுடனும் ஐஎஃப்எஃப்ஐ-யின் நோக்கத்தை இந்த பகுதி வலுப்படுத்துகிறது. இது உலகளாவிய திரைப்பட சங்கமத்தின் மிக முக்கிய பிரிவாகவும் அமைகிறது.
ஐஎஃப்எஃப்ஐ 2024-ன் தனித்துவமான முயற்சிகளில் ஒன்று "கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆஃப் டுமாரோ" (CMOT-சிஎம்ஓடி) எனப்படும் நாளைய படைப்புச் சிந்தனை என்பதாகும். இது தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் நோக்கம் இளம் திரைப்பட கலைஞர்களை வளர்ப்பதாகும். குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்த சிஎம்ஓடி ஒரு தளத்தை வழங்குகிறது. அனுபவமிக்க தொழில்நுட்ப நிபுணர்களுடன் இணைப்புகளை எளிதாக்குகிறது. அடுத்த தலைமுறை இந்திய திரைப்படத் கலைஞர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை இது வழங்குகிறது.
இந்த ஆண்டு ஐஎஃப்எஃப்ஐ, ஒரு முக்கிய தருணத்தில் நடைபெறுகிறது. இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களை உலக அரங்கில் உயர்த்துவதற்கான ஒரு தளமாக இது செயல்படுகிறது. வளர்ந்து வரும் திறமைசாலிகள், உலகளாவிய அங்கீகாரத்தை பெற வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இந்த விழா அமைந்துள்ளது.
55-வது சர்வதேச திரைப்பட விழா என்பது பாரம்பரியத்தை தொலைநோக்கு சிந்தனை கொண்ட புதுமையுடன் தடையின்றி இணைக்கும் ஒரு திருவிழாவாகும். இது இந்திய திரைப்பட ஜாம்பவான்களுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரத்தில் நாளைய படைப்பாளிகளை அங்கீகரிக்கிறது. இந்த விழா சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழில்துறை பிரதிநிதிகள், ரசிகர்கள் ஆகியோரை ஒன்றிணைப்பதால், இது இந்தியாவை உலக அளவில் திரைப்படத் துறையில் முக்கிய நாடாக நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை.
----------