சென்னை
வங்கி மோசடி வழக்கில், வங்கி மேலாளருக்கு
4 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை.
சென்னை, நவ:07,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எஸ்பிஐ வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றிய ஒய் கிரண் பாபு, வங்கி பணத்தை 2016 டிசம்பர் முதல் சிறிது சிறிதாக தனது மனைவியின் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இந்த மோசடியை யாரும் கண்டுபிடிக்காதவகையில், அவர் இந்த தொகையை வங்கியின் பொது கணக்குப் பேரேட்டில் இருந்து சிறிது சிறிதாக பிரித்து குறைத்து காட்டி பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் வழக்கமான கணக்கு அல்லது பரிவர்த்தனைகளில் நேரடியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு பதிவுகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். இந்த மோசடி தொடர்பாக மேலாளர் கிரண் பாபு தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி மொத்தம் ரூ. 4,94,70,606 பணத்தை கையாடல் செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பதிவு செய்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வங்கியின் அப்போதைய மேலாளரான ஒய். கிரண் பாபுவுக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3.7 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
***