இளம் குழந்தைகள் துணை உணவு எடுத்துக்கொள்வதை அதிகரிக்க நான்கு வழிமுறைகள்
-டாக்டர் அனன்யா அவஸ்தி
செப்டம்பர் மாதம் என்பது ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கும் செயல்பாட்டுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாதமாகும். இது 7-வது தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்பட்டது. இதில் நமது கவனத்தைக் கோரிய முக்கியமான அம்சம் துணை உணவாகும். இது உணவைப் பற்றியது மட்டுமல்ல; குழந்தைகள் சரியான நேரத்தில் சரியான ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்வது. ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பது பற்றியது. வளரும் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளைப் பால் மட்டுமே நிறைவு செய்ய முடியாது என்பதால், உலக சுகாதார நிறுவனம் 6 மாதத்திலிருந்து ஊட்டச்சத்து நிறைந்த, போதுமானதும் பாதுகாப்பானதுமான துணை உணவுகளை வழங்கவும், 2 வயது வரை அல்லது அதற்கும் அதிகமாக தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவும் பரிந்துரைக்கிறது.
மூளையின் செயல்பாடு, உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு ஆகியவற்றில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள், மூளை வளர்ச்சி 100% க்கும் கூடுதலாக உள்ளது என்று மூளை வளர்ச்சி குறித்த அறிவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.
இதேபோல், முதல் ஆண்டில், ஒரு குழந்தையின் எடை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கிறது. எனவே, மூளை வளர்ச்சிக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்கும் துணை உணவு அவசியமாகிறது. மேலும், இளம் குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படும் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், உணவு ஒவ்வாமை போன்ற நோய்களின் தாக்கங்களைக் குறைக்க துணை உணவு உதவுகிறது.
இந்தச் சூழலில்தான், தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024-ல், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் துணை உணவுக்கு முன்னுரிமை அளித்தது. இது நம்மிடம் முக்கிய கேள்வி ஒன்றை எழுப்புகிறது. இந்தியாவின் இளம் குழந்தைகள் துணை உணவு எடுத்துக்கொள்வதை அதிகரிக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
முதலாவதாக, ஆரோக்கியமான சத்தான பொருள்களை உணவில் சேர்ப்பதாகும். குறிப்பாக ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான காலத்தில், இந்தியாவின் வளமான சமையல் பாரம்பரியம் இளம் குழந்தைகளுக்கு ஏற்ற, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குகிறது. கிச்சடி, பருப்பு மசியல் போன்ற பாரம்பரிய சமையல் வகைகள் தயாரிப்பதற்கு எளிதானது மட்டுமல்ல, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்தவை. உதாரணமாக, ராகி வாழைப்பழ கஞ்சி இரும்பு மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலாதாரமாகும். அதே நேரத்தில் கம்பு கிச்சடி வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல கலவையாகும். இது போன்ற உணவின் நுகர்வை ஊக்குவிப்பதில் ஊட்டச்சத்து இயக்கம் 2.0 வழிகாட்டுதல்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.
இரண்டாவதாக, பிறந்து ஆறு மாதங்களுக்குப் பின் துணை உணவைத் தொடங்க உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கப்பட்ட காலம், இந்தியக் கலாச்சார சூழலில் ஒரு முக்கிய மைல்கல்லான 'அன்னப்பிரஷன்' என்ற பழமையான நடைமுறையுடன் சரியாகப் பொருந்துகிறது. குழந்தைகளுக்கு மாறுபட்ட, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி தாய்மார்களுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் ஆலோசனை வழங்க நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்களால் 'அன்னப்பிரஷன் தினம்' கொண்டாட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஊக்கப்படுத்துகிறது.
மூன்றாவதாக, சமூக-பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இளம் குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய, தற்போதுள்ள அரசின் திட்டங்களை மேம்படுத்துவது முக்கியமாகும். குறிப்பாக, ஆறு மாதங்கள் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கான துணை ஊட்டச்சத்து திட்டம் முக்கியமானது.
நான்காவதாக, ஆரோக்கியமான உணவுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் (ஜங்க் ஃபுட்) ஆபத்துகளிலிருந்து, குறிப்பாக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவை அதிகமுள்ள உணவுகளிலிருந்து குழந்தைகளை அவசியம் பாதுகாக்க வேண்டும். குக்கிகள், சிப்ஸ், உடனடி நூடுல்ஸ், குளிர்பானங்கள், பேக்கரி தயாரிப்புகள் போன்ற ஜங்க் ஃபுட் துரதிர்ஷ்டவசமாக "குழந்தைகள் மெனுவில்" பிரதானமாகிவிட்டன. இவை உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் ஆரம்பத்திற்கு வழிவகுக்கும். எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தீங்கான விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆரோக்கியமான மாற்றுகளைத் தேர்வுசெய்ய பெற்றோர்களை ஊக்குவிப்பதும் மிக முக்கியமானதாகும்.
நிறைவாக, துணை உணவுக்கான அரசின் முயற்சிகள், "மக்கள் இயக்கமாக" மாறி, அனைத்துக் குழந்தைகளும் செழித்து வளரத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதி செய்து, தேசத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும்.
கட்டுரையாளர்: பொது சுகாதார ஆராய்ச்சியாளர்,
அனுவாத் சொல்யூஷன்ஸின் இயக்குநர்.