ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்: நிலையான முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இந்தியா
-டாக்டர் ராஜன் சங்கர்
மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நல்ல ஊட்டச்சத்து அவசியம். ஒரு நாட்டின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்வது முக்கியமானதாகும். குறிப்பாக கர்ப்ப காலத்தில், ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்புக்கு ஊட்டச்சத்து மிகவும் இன்றியமையாதது. குழந்தைப் பருவத்தில் சரியான ஊட்டச்சத்து கிடைத்தால், அந்தக் குழந்தைகளின் நுண்ணறிவு திறன் அதிகரிக்கும். கருத்தரித்ததிலிருந்து 1,000 நாட்கள் வரை ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை அளிப்பது மிக முக்கியமானது. ஊட்டச்சத்து தொடர்பாக மேற்கொள்ளப்படும் முதலீடுகள், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள உத்தி ஆகும்.
7-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் நாட்டில் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடு உடல் ஆரோக்கியத்தையும் தாண்டி நீண்டகால விளைவுகளைக் கொண்டுள்ளது. இது சமூக-பொருளாதார நிலைமைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, பிரதமரின் ஊட்டசத்சத்து திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக முறை, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற அரசின் பல்வேறு முயற்சிகள் இந்தப் புரிதலை பிரதிபலிக்கின்றன.
ஊட்டச்சத்தில் தற்சார்பு:
பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையிலான சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 போன்ற திட்டங்கள், ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டவையாகும். இத்திட்டங்கள், குழந்தைகள், இளம் பருவ பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டின் சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட தனித்துவமான அம்சங்கள் கொண்டவையாகும். சக்ஷம் அங்கன்வாடி முன்முயற்சியின் கீழ், அங்கன்வாடி மையங்கள் அடிப்படை ஊட்டச்சத்து ஆதரவைத் தாண்டி விரிவான சேவைகளை வழங்குகின்றன. இந்த சேவைகளில் ஆரோக்கியமான உணவு, மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு, தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறைகள் மற்றும் இணை உணவின் முக்கியத்துவம் பற்றிய வழிகாட்டுதல் உள்ளிட்டவை அடங்கும்.
அங்கன்வாடி மையங்கள் தாய் -சேய் ஊட்டச்சத்து முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தொடர்ச்சியான கவனிப்பை வழங்குகின்றன. ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடும் வகையில், தகவல்கள் வழங்குவதற்காக போஷன் டிராக்கர் (Poshan tracker) என்ற தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தளம் ஊட்டச்சத்து சேவைகளை திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல், ஆகியவற்றோடு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காண அங்கன்வாடி பணியாளர்களுக்கு உதவுவதுடன், கடைசி நிலை வரை சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மற்றொரு முயற்சி போஷன் வாடிகாஸ் எனப்படும் ஊட்டச்சத்து தோட்டங்கள் ஆகும். வழக்கமாக அங்கன்வாடி மையங்களில் அமைக்கப்படும் இந்த சமையலறை தோட்டங்கள், புதிய, உள்நாட்டில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்குவதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு கிடைக்கும் உணவின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நிலையான நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.
பருவநிலை மாற்றத்திற்கு மத்தியில் உணவு முறைகளில் ஏற்படும் பாதிப்பை சமாளிக்கும் விதமாக, இந்தியா அதிக சத்தான சிறுதானியங்களை ஊக்குவித்து வருகிறது. 2023-ம் ஆண்டை ஐநா சபை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அங்கீகரித்ததன் மூலம் சிறுதானியங்கள் மேலும் பிரபலமடைந்தன. சிறுதானியங்களில் புரதம், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், உணவு நார்ச்சத்து, பி-வைட்டமின்கள் மற்றும் முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்கள் ஊட்டச்சத்து இயக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். அவை வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும் துணை ஊட்டச்சத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது ஒரு பல்துறை பிரச்சினையாகும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் இணைந்து ஊட்டச்சத்து குறைபாடுள்ள நிவர்த்தி செய்வதற்கான நெறிமுறைகளை வெளியிட்டு, ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.
தற்போதைய திட்டங்கள் ஒரு உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளன. இவை குழந்தைகளிடையே ஊட்டச்சத்து விகிதங்களை மேம்படுத்துவதுடன், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான சிக்கல்களை நிவர்த்தி செய்ய அரசு நிறுவனங்கள், சுகாதார சேவை வழங்கும் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடையேயும் ஒத்துழைப்பு அவசியம். கூட்டு மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நீண்டகால மாற்றத்தை அடைவதற்கு முக்கிய பங்காற்றும்.
டாக்டர் ராஜன் சங்கர்: டாக்டர் ராஜன் சங்கர் ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவ ஆலோசகர் ஆவார். டாடா அறக்கட்டளைகளில் ஊட்டச்சத்து இயக்குநராகவும் அவர் பணியாற்றினார். ஊட்டச்சத்துக்கான உலகளாவிய கூட்டமைப்பில் தெற்காசியாவிற்கான மண்டல பிரதிநிதியாகவும் அவர் இருந்துள்ளார். இந்தியாவில் யுனிசெஃப்பின் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஊட்டச்சத்து பிரிவில் திட்ட அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். டாக்டர் சங்கர் தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் 100-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
--------------