இந்தியாவில் கார்பன் வெளியேற்றத்தைச் சமாளிக்கவும் பசுமை நடைமுறைகளை ஊக்குவிக்கவும் புதிய கட்டமைப்பு
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அதன் இலக்குகளை அடைவதற்கும், இந்திய கார்பன் சந்தையின் (ஐசிஎம்) எதிர்காலத்தை வடிவமைக்கும் இரண்டு அத்தியாவசிய வழிகாட்டுதல்களை இந்தியா வெளியிட்டுள்ளது. இவை இணக்க வழிமுறைக்கான விரிவான நடைமுறை மற்றும் கார்பன் சரிபார்ப்பு முகமைகளுக்கான அங்கீகார நடைமுறை, தகுதி அளவுகோல்கள் ஆகியனவாகும்.
இந்தியாவின் பருவநிலை உத்திசார் செயல்திட்டம், இது தொடர்பான பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே எட்டியுள்ளது மட்டுமல்லாமல், விஞ்சியும் உள்ளது. 2016-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம், நூற்றாண்டின் இறுதிக்குள் உலகளாவிய வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தியா ஆரம்பத்தில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கார்பன் உமிழ்வு தீவிரத்தை 2005ம் ஆண்டில் இருந்த நிலையில் இருந்து 2030-ம் ஆண்டுக்குள் 33 முதல் 35 சதவீதம் குறைக்க உறுதியளித்தது. இருப்பினும், இந்தியா இந்த இலக்கை முன்கூட்டியே அடைந்து விட்டது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது. 2021-ம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாநாட்டில் (COP26) இந்தியா அதன் லட்சியங்களை மேலும் மேம்படுத்தி, இன்னும் தீவிரமான இலக்குகளை நிர்ணயித்தது. அது 2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கும், 2030 க்குள் அதன் பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதம் அளவுக்கு குறைப்பதற்கும் இலக்கு நிர்ணயித்தது. அதே காலக்கெடுவிற்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து 50 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் உறுதியளித்தது. இந்த மைல்கற்களில் சிலவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே எட்டியதன் மூலம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சியில் முன்னணியில் இருப்பதை இந்தியா நிரூபித்துள்ளது.
ஒரு நிறுவனம் அதன் கார்பன் உமிழ்வைக் குறைத்தால், அது கார்பன் கிரெடிட் என்று அழைக்கப்படும் ஒரு வெகுமதியைப் பெறுகிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் கார்பன் நீக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விரிவான மற்றும் வெளிப்படையான அமைப்பு தேவை. இந்தியா இந்த சமநிலையை அடைய ஒரு முக்கிய வழிமுறையை முன்வைக்கிறது. கார்பன் கிரெடிட்களை ஊக்குவிப்பதன் மூலம், கார்பன் தடயங்களை தீவிரமாக குறைப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இது செலவு குறைந்த கார்பன் வெளியேற்றத் தடுப்பைச் செய்ய உதவுகிறது.
இணக்க நடைமுறையானது "கடமைப்பட்ட நிறுவனங்கள்" என வகைப்படுத்தப்பட்ட தொழில்கள் மற்றும் துறைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த நிறுவனங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட பசுமை இல்ல வாயு உமிழ்வு இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு கடமைப்பட்ட நிறுவனம் அதன் உமிழ்வுகளை பரிந்துரைக்கப்பட்ட இலக்குகளுக்குக் கீழே குறைத்தால், கார்பன் கிரெடிட் சான்றிதழ்கள் அதற்கு வழங்கப்படும். அவற்றுக்கு சலுகைகள் கிடைக்கும். மாறாக, தங்கள் இலக்குகளை அடையத் தவறும் நிறுவனங்கள் அதிகப்படியான உமிழ்வுகளை ஈடுசெய்வதற்கான செலவுகளைச் செய்ய வேண்டும். இந்த சந்தை உந்துதல் வழிமுறை உமிழ்வைக் குறைக்க நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. இந்தியா தனது தேசிய மற்றும் சர்வதேச பருவநிலைக் கடமைகளைப் பூர்த்தி செய்ய ஒரு அத்தியாவசிய கருவியாக இதை அமைத்துள்ளது.
இணக்க செயல்முறைக்கான விரிவான செயல்முறை கார்பன் சூழலின் கண்காணிப்பை உறுதி செய்கிறது. உதாரணமாக, ஒரு சிமெண்ட் நிறுவனம் அதன் உமிழ்வுகளை குறைத்தால், அது கூடுதல் கார்பன் கிரெடிட்களை சம்பாதிக்க முடியும். இணக்க செயல்முறைக்கான விரிவான செயல்முறை, இணக்க செயல்முறை எவ்வாறு செயல்படும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதலை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கார்பன் உமிழ்வு குறைப்பு கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்ய பின்பற்ற வேண்டிய கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் காலக்கெடுவை இந்த ஆவணம் கோடிட்டுக் காட்டுகிறது.
அங்கீகார நடைமுறை என்று அழைக்கப்படும் இரண்டாவது வழிகாட்டுதல், உமிழ்வு குறைப்புகளை சரிபார்க்கும் நிறுவனங்கள் நம்பகமானவையா என்பதை உறுதி செய்கிறது.
இந்திய கார்பன் சந்தையின் செயல்பாடு இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஆனால் அதன் அடித்தளம் வலுவாக உள்ளது. இதனை நிர்வாகிக்கும் அமைப்பாக செயல்படும் எரிசக்தி திறன் அமைப்பு (BEE-பிஇஇ), தற்போது இணக்க செயல்முறையில் பங்கேற்கும் தொழில்களுக்கான துறை சார்ந்த உமிழ்வு இலக்குகளை இறுதி செய்து வருகிறது. இந்தியாவின் தேசிய வளர்ச்சிக்கு ஏற்ப உமிழ்வு குறைப்பை எட்டுவதை நோக்கி நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதில் இந்த இலக்குகள் முக்கியமானதாக இருக்கும்.
இந்திய கார்பன் நடைமுறை சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்க தயாராக உள்ளது. வணிகங்கள் தங்கள் உமிழ்வைக் குறைக்க ஊக்குவிப்பதன் மூலமும், வெற்றி பெறுபவர்களுக்கு வெகுமதி அளிப்பதன் மூலமும், பசுமையான தொழில்நுட்பங்களை நோக்கிய மாற்றம் ஏற்படும்.
கட்டுரையாளர்கள்:
அசோக் குமார்,
உதவி தலைமை இயக்குநர், இந்திய எரிசக்தித் திறன் அமைப்பு (பிஇஇ)
சௌரப் தீதி, இயக்குநர், இந்திய எரிசக்தித் திறன் அமைப்பு (பிஇஇ)
அதிக் மதின் ஷேக், பருவநிலை மாற்ற நிபுணர் (பிஇஇ)
================