ஒரே பாரதம் உன்னத பாரதம்: நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் இந்திய திரைப்படங்களின் சக்தி
அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
"திரைப்படங்கள் உலகளாவிய மொழியைப் பேசுகின்றன" என்பது பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரே-வின் கருத்தாகும். மக்களை ஒருங்கிணைக்கும் திரைப்படங்களின் சக்தியை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய சினிமா, அதன் பரந்த மொழி பாரம்பரியத்துடனும், கலாச்சார பன்முகத்தன்மையுடனும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களை ஒருங்கிணைக்கிறது. பொதுவான உணர்வுகளையும் அனுபவங்களையும் அது பகிர்ந்து கொள்கிறது. தமிழ், இந்தி அல்லது மராத்தி என எந்த மொழிப் படமாக இருந்தாலும், சினிமா அனைவருக்கும் பொதுவான, வேறுபாடுகளைக் கடந்து ஆழமான உணர்வுகளை அவை எடுத்துரைக்கின்றன. நாட்டில் பல்வேறு வகைகளில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைவரும் சமம் என்பதையே திரைப்படங்கள் நினைவூட்டுகின்றன.
இந்திய சினிமாவின் உலகளாவிய தன்மை பிராந்திய, மொழி எல்லைகளைக் கடந்து, தேசிய ஒருமைப்பாட்டுக்கான வலுவான சக்தியாக உள்ளது. ராஜ் கபூரின் ஸ்ரீ 420 திரைப்படம் முதல் நாடு தழுவிய பாராட்டைப் பெற்ற மணிரத்னத்தின் ரோஜா வரை, இந்திய திரைப்படங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் உணர்வுகளை பேசுவதாகவே அமைந்துள்ளன. எம்.எஸ்.சத்யுவின் கரம் ஹவா, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் போன்ற படங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள், காதல் ஆகியவை எல்லைகளைக் கடந்தவை என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. இது இந்திய சினிமா உண்மையிலேயே தேசத்தை ஒருங்கிணைக்கும் சக்தி என்பதை நிரூபிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குநர்கள், சிறந்த நடிகர்கள் ஆகியோருக்கு குடியரசுத்தலைவர் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். இதன் மூலம் இந்திய சினிமாவின் உலகளாவிய தன்மை கொண்டாடப்பட்டு போற்றப்படுகிறது. இது வழக்கமான நிகழ்வு அல்ல, படைப்பாளிகள், கதை சொல்லிகள், நடிகர்கள் ஆகியோரின் திறமைக்கான அங்கீகாரமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பல மொழிகளைப் பேசும் சுமார் 140 கோடி மக்களையும் ஒருங்கிணைக்கும் மாபெரும் சக்தியாகத் திகழும் திரைப்படங்கள், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் அதன் சிறப்பையும் உறுதிப்படுத்துகின்றன.
திவா மொழியில் தயாரிக்கப்பட்ட 'சிகைசல்' (இஃப் ஒன்லி ட்ரீஸ் கேன் டாக்) என்ற படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இது திபெத்திய-பர்மிய இனக்குழுவான திவா மக்களின் மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்பட விருதுகள் அனைவரையும் அங்கீகரிக்கும் தனித்தன்மைக் கொண்டதாக திகழ்கிறது என்பதை இந்த விருது எடுத்துக்காட்டுகிறது. இந்த மக்கள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும், பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வசிக்கின்றனர். 70-வது தேசிய திரைப்பட விருதுகளுக்காக, திரைப்படப் பிரிவில் 32 வெவ்வேறு மொழிகளில் 309 கதையம்சம் கொண்ட படங்களும், கதை அம்சம் அல்லாத பிரிவில் 17 மொழிகளில் 128 திரைப்படங்களும் விண்ணப்பித்தன. திரைப்படப் பிரிவில், தங்கத் தாமரை (கோல்டன் லோட்டஸ்) விருதை நான்கு இந்திய மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் வென்றன. அவற்றில் ஒன்று ஹரியான்வியாகும். இந்தப் பிரிவில் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலிருந்து தலா ஐந்து திரைப்படங்கள் வெள்ளித் தாமரை (சில்வர் லோட்டஸ்) விருதை வென்றன. மலையாளம், குஜராத்தி, கன்னடம், ஹரியான்வி, பெங்காலி ஆகிய மொழிகளைச் சேர்ந்த படங்களும் இந்தப் பிரிவில் விருது வென்றுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகளிலிருந்து பத்து திரைப்படங்களுக்கும் வெள்ளித் தாமரை விருது வழங்கப்பட்டது. இந்தி, உருது மொழிகளில் வெளியான ஒரு படம், கதை அம்சம் அல்லாத பிரிவில் சிறந்த படத்திற்கான தங்கத் தாமரை விருதை வென்றது.
மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட இந்தியக் குடியரசு உருவாக்கப்பட்டு ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த காலத் தடைகள் தற்போது உடைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. பாலிவுட் திரைப்படங்கள் இந்தியைப் பரவலாகக் கொண்டு செல்கின்றன என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால், இந்திய திரைப்படங்கள், பன்முகத் தன்மையை வளர்க்கின்றன. பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் அந்த மொழிக் குழுக்கள் தொடர்பாகவும் அவர்களின் அடையாளங்களைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற பன்முகத்தன்மையை வலுவாக்குகின்றன. ஒற்றுமை உணர்வை வளர்ப்பவையாக இந்திய திரைப்படங்கள் அமைந்துள்ளன.
அரசியல், சமூகம், கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்து உலகளாவியத் தரத்துடன் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதும் இந்திய திரைத்துறையின் சிறப்பம்சமாகும். சமூக, கலாச்சார, அரசியல், வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்குமான படங்களை வழங்குவது நமது திரைப்படத் தயாரிப்பாளர்களின் மற்றொரு பொதுவான தன்மையாக உள்ளது. இந்தியாவில் கதை சொல்லும் கலையின் தனித்துவமான பலமும் இதுதான். அது கலைப் படங்களாக இருந்தாலும், பிரபலமான படங்களாகவோ, வணிகப் படங்களாகவோ, நவீன கால படங்களாகவோ என எதுவாக இருந்தாலும், நாம் அவற்றைக் கொண்டாடுகிறோம். ஆஸ்கர், கோல்டன் குளோப் ஆகிய விருதுகளை வென்ற 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல், மொழி, இனம், தேசியம் ஆகியவற்றைக் கடந்து இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியடைந்து இந்தியாவின் புகழை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்த, அரசு மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. ஒரு வலுவான திறமை வாய்ந்த படைப்பாளிகளை உருவாக்குதல், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கதை சொல்லிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான செயல்முறைகளை எளிதாக்குதல் ஆகியவையே அந்த 3 முக்கிய அம்சங்களாகும். படைப்பாற்றலை வளர்ப்பதில் நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனம் (IICT- ஐஐசிடி) நிறுவப்படும் என அரசு அண்மையில் அறிவித்தது. திரைப்படத் தயாரிப்பில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுன் மூலம் தேசிய ஒருமைப்பாடு, உலகளாவிய பொழுதுபோக்கு ஆகிய இரண்டிலும் இந்திய சினிமா ஒரு பலமான சக்தியாக திகழ்வதை உறுதி செய்துள்ளது.
எதிர்காலத்தை நாம் சிந்திக்கும் போது, திரைப்படத் துறையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. வேகமாக வளர்ந்து வரும் உலகில், இந்திய சினிமா தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. நமது பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கதைகளைச் சொல்வது மட்டுமல்லாமல், அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும், இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் கதைசொல்வதன் எல்லைககளை விரிவுபடுத்தி தங்களது திறன்களை நிரூபிக்கின்றனர். ஒட்டு மொத்தத்தில் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்குமான வலுவான ஊக்கசக்தியாக சினிமா திகழ்கிறது.
*****