எதிர்கால போக்குவரத்தை வடிவமைக்கும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வழிகாட்டுதல்கள் 2024 -சமீர் பண்டிதா, இயக்குநர், பி.இ.இ
எதிர்கால போக்குவரத்தை வடிவமைக்கும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வழிகாட்டுதல்கள் 2024 

-சமீர் பண்டிதா, இயக்குநர், பி.இ.இ


2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை நோக்கி இந்தியா முன்னேறும் வேளையில்,  இந்த இலக்கை அடைவதற்கு போக்குவரத்துத் துறையில் மின்சார வாகனங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. எனினும் பரவலான மின்சார வாகன பயன்பாடு என்பது, நம்பகமான மற்றும் அணுகக்கூடிய மின்னேற்ற நிலையங்களின் உள்கட்டமைப்பை சார்ந்துள்ளது.  இதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் மின்னேற்ற நிலையங்களை அமைக்கும் பணியை துரிதப்படுத்துவதற்காக மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களின் உள்கட்டமைப்பை நிர்மாணித்தல் மற்றும் இயக்கத்திற்கான வழிகாட்டுதல்கள் 2024-ஐ இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.   மின்சார வாகனங்களுக்கு வலிமையான மின்னேற்ற இணைப்பை கட்டமைப்பது, வசதியை ஏற்படுத்தித் தருவதுடன், எரிசக்தி பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் அதிகரிப்பு மற்றும் காற்றின் தர மேம்பாடு ஆகியவற்றிற்கும் வழி வகுக்கும்.  மேலும், இதன் மூலம் புதிய தொழில்துறைகள் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் பெருகுவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கல தொழில்நுட்பம் மற்றும் திறன் தொகுப்பு அமைப்புமுறைகளில் புத்தாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மின்சார வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பிற்கான வழிகாட்டுதல்கள் 2024-ன் முக்கிய அம்சங்கள்:
நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளின் தேவையைக் கருத்தில் கொண்டும்,  இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை வெவ்வேறு வாகனங்களின் அடிப்படையிலும் மின்னேற்ற நிலையங்களின் உள்கட்டமைப்பு விரிவாக்கத்தை துரிதப்படுத்துவதற்காக தெளிவான மற்றும் சீரான செயல் திட்டத்தை வழங்கும் வழிகாட்டுதல்களின்  முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. பொது மற்றும் தனியார் மின்னேற்ற நிலையங்கள்:
உலகளாவிய அணுகலை உறுதி செய்வதற்காக நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் சீரான இடைவெளிகளில் பொது மின்னேற்ற நிலையங்களை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு இது இன்றியமையாததாகிறது. மேலும் குடியிருப்பு வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தனியார் மின்னேற்ற வசதிகளை அமைப்பதும் ஊக்குவிக்கப்படுகிறது
2. இயங்கு தன்மை: 
2024 வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சம்,  வெவ்வேறு மின்னேற்ற இணைப்புகளுக்கு இடையேயான இயங்கு தன்மையாகும். அதாவது, வாகனத்தின் வகை அல்லது மின்னேற்ற உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்தைப் பொருட்படுத்தாது எந்த நிலையத்திலும் பயனர்கள் தங்களது மின்சார வாகனத்தை மின்னேற்றம் செய்து கொள்ளலாம். 
3. திறன் மின்னேற்றல்: 
எரிசக்தி சேமிப்பிற்காக தொகுப்பு மேலாண்மை அமைப்புமுறைகளுடன் ஒருங்கிணைந்த திறன் மின்னேற்றிகளின் பயன்பாட்டை  வழிகாட்டுதல்கள் ஊக்குவிக்கின்றன. திறன் மின்னேற்றிகள், மின்தேவை குறைவாக இருக்கும் போது, மின்தடை இல்லாத நேரங்களில்  மின்னேற்ற  செயல்பாடுகளை திட்டமிட பயனர்களை அனுமதிக்கின்றன, செலவைக் குறைக்கின்றன மற்றும் மின்  தொகுப்பில் சுமையை எளிதாக்குகின்றன.
4. பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை தரநிலைகள்:
 பயனர்களின் அச்சத்தைப் போக்குவதற்கு, தீ விபத்தில் இருந்து பாதுகாப்பு, மின்சார ஆபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட மின்னேற்று நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு தரநிலைகளை வழிகாட்டுதல்கள் கட்டாயமாக்கியுள்ளன. ஓட்டுநர்களின் வசதிக்காக, நெடுஞ்சாலைகளில்  உள்ள நிலையங்களில்  தடை இல்லாத சேவை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 
5. ஊக்கத்தொகை மற்றும் தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல்:
மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களின் உள்கட்டமைப்பை  அதிகரிப்பதற்கும், நிலையங்களை அமைப்பதற்கான நிலத்தின் இருப்பை  மேம்படுத்த  புதுமையான வணிக மாதிரிகளை ஊக்குவிப்பதற்கும், அரசு  பலவிதமான நிதிச் சலுகைகளை வழங்குகிறது. இந்த நடவடிக்கைகள் செலவினங்களைக் குறைப்பதுடன், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.  மின்னேற்ற நிலையங்களின்  சேவையை துரிதப்படுத்துவதற்காக, பொது- தனியார் கூட்டுமுயற்சிகளையும் வழிகாட்டுதல்கள் ஊக்குவிக்கின்றன.
6. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி:
வழிகாட்டுதல்களின்படி, தூய்மையான எரிசக்தியின் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுடன் மின்னேற்ற  நிலையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். 

நிலையான எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய   இந்தியாவின் பயணத்திற்கு இந்த வழிகாட்டுதல்கள் அவசியமாகின்றன.  புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு  நாடு மாறி வரும் வேளையில்,  இந்த வழிகாட்டுதல்களின் ஆதரவுடன் மின்சார வாகனங்களின்  பயன்பாடு எரிசக்தி மாற்ற உத்திக்கு இன்றியமையாததாகும். 

******
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image