ஏர்பஸ் – டாடா இணைந்த ராணுவ போக்குவரத்து விமான உற்பத்தி மூலம் நேரடியாகவும் மறைமுகவும் 12,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்- அனில் கொலானி
ஏர்பஸ் – டாடா இணைந்த ராணுவ போக்குவரத்து விமான உற்பத்தி மூலம் நேரடியாகவும்  மறைமுகவும் 12,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்
- அனில் கொலானி.

சென்னை

இந்திய விமானப்படைக்கு 56 சி-295 போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கு  ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சகம்  கையெழுத்திட்டது. இந்த விமானங்கள் மிகவும் பழமையான ஆவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக, விமானப் படையில் இடம் பெற உள்ளன. ஏர்பஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, ஸ்பெயின் நாட்டின் செவில்லேயில் உள்ள விமான பாகங்களை ஒன்று சேர்க்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு முதல் 16 விமானங்கள் வழங்கப்படும். எஞ்சிய 40 விமானங்களை இந்தியாவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் (டிஏஎஸ்எல்) தயாரித்து இந்திய விமானப்படைக்கு வழங்கும். இந்த நிறுவனத்திற்கு குஜராத் மாநிலம் வதோதராவில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2022, அக்டோபர்  30 அன்று அடிக்கல் நாட்டினார். இந்திய விமானப்படைக்கு போக்குவரத்து விமானங்களைத் தயாரிப்பதில் இத்தகைய ஒத்துழைப்பு இதுவே முதல்முறையாகும். 
ஏற்கனவே, 2023 செப்டம்பர் 13 அன்று பறக்கும் நிலையில் முதலாவது விமானம்  ஸ்பெயினின் செவில்லேயில் அப்போதைய இந்திய விமானப்படை தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2023 செப்டம்பர் 25 அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் முறையாக விமானப்படையில் சேர்த்தார். வதோதராவில் உள்ள 'ரைனோஸ்' என்று அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் 11-வது படைப்பிரிவு ஏற்கனவே  ஆறு சி-295 விமானங்களை இயக்கி வருகிறது.
சி-295, ராணுவ போக்குவரத்து விமானம் பலவகைகளில் பயன்படுவதாகும். தளவாடங்கள், பாராசூட் வீர்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களைக் கொண்டு செல்லுதல், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடல் ரோந்து, நீர்மூழ்கி எதிர்ப்பு போர், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, எல்லைக் கண்காணிப்பு உள்ளிட்ட பரந்த அளவிலான பணிகளில் இது ஈடுபடும். 9.5 டன் பொருட்களுடன்,  70 பயணிகள் அல்லது 49 பாராசூட் வீர்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும். பகல், இரவு என இரு நேரங்களிலும் அனைத்து வகையான வானிலையிலும் செயல்படும் திறன் கொண்ட  இந்த விமானம் உலகம் முழுவதும் பல்வேறு விமானப்படைகளால் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய விமானம்  இந்திய விமானப்படையின் திறனுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
 2024 அக்டோபர் 27 முதல் 29 வரை இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்செசும்  பிரதமர் திரு நரேந்திர மோடியும்  வதோதராவில் அக்டோபர் 28 அன்று டிஏஎஸ்எல் நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்தனர். இது இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையமாக அமைந்துள்ளது.  முதலாவது 'மேக் இன் இந்தியா' சி -295 விமானம் 2026 செப்டம்பர் மாதத்தில் ஒப்படைக்கப்படும். 2031-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழு எண்ணிக்கையிலான விமானங்களும் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் இந்தியாவில் வான்வெளி சூழல் அமைப்புக்கு மிகவும் தேவையான உத்வேகத்தை அளிக்கும். 
இதில் நாடு முழுவதும் பரவியுள்ள பல குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விமானத்தின் பாகங்களை தயாரிப்பதில் ஈடுபடும். மொத்தம் 33 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே ஏர்பஸ் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. விமானத்தின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி ஏற்கனவே ஹைதராபாத்தில் உள்ள பிரதான ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் வழங்கிய மின்னணு போர் உத்தி  அமைப்புகள் ஏற்கனவே விமானத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 
இந்த விமான உற்பத்தி, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு கிரியா ஊக்கியாக செயல்படும். இது நேரடியாக 600 உயர் திறன் வேலைவாய்ப்புகளும், 3000-க்கும் அதிகமாக மறைமுக வேலைவாய்ப்புகள் மற்றும் கூடுதலாக 3000 நடுத்தரத் திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் 42.5 லட்சம் மணி மனித நேர வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஏரோஎன்ஜின் மற்றும் ஏவியோனிக்ஸ் தவிர, மற்ற கட்டமைப்பு பாகங்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும். ஒரு விமானத்தில் பயன்படுத்தப்படும் 14,000 விரிவான பாகங்களில், 13,000 இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதுவரை பெரும்பாலான நடவடிக்கைகள் ஏர்பஸ் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டன. உள்ளூர் உற்பத்தி, விமான தரக் கட்டுப்பாட்டு  உறுதிக்கான தலைமை இயக்குநரகம், விமானம் இயக்குவதற்கான எதிர்கால சான்றிதழ், இந்திய வான் சூழல் அமைப்பு செழித்து வளர உள்நாட்டு சோதனை, மதிப்பீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.  
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக பாதுகாப்புத் துறை அமோக வளர்ச்சி அடைந்துள்ளது. பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.43,726 கோடியிலிருந்து ரூ. 1,27,265 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் சுமார் 21 சதவீதம் தனியார் துறையின் பங்களிப்பாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ.1000 கோடிக்கும் குறைவாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி கடந்த ஆண்டு ரூ.21,000 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை எட்ட நாட்டிற்கு உதவிய சில கொள்கை சீர்திருத்தங்களில், மூலதன உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் – 2020-ல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட, தயாரிப்புகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதும் அடங்கும். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் உள்நாட்டு தொழில்கள் மூலம் கொள்முதல் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 செப்டம்பர்  நிலவரப்படி ரூ. 50,083 கோடி முதலீட்டில் உத்தரபிரதேசத்திலும்  தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு தொழில் வழித்தடங்களை நிறுவுதல்  அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளில் அடங்கும். 
இந்தியாவில் சி-295 ராணுவ போக்குவரத்து விமானங்களை  உற்பத்தி செய்வதற்கான ஏர்பஸ் டிஏஎஸ்எல் கூட்டாண்மை இந்தியாவில் விமானப் போக்குவரத்து சூழல் அமைப்புக்கு நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் சின்னமாக விளங்குகிறது. தற்சார்பை முன்னோக்கிய பயணம் கடினமானதாகத் தோன்றினாலும், ஏர்பஸ் மற்றும் டிஏஎஸ்எல் இடையேயான இந்தக் கூட்டாண்மை மூலம் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அனுபவம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவில் தனியார் துறை மேலும் பங்கேற்பதற்கான முன்னோடியாக இருக்கும். அதன் ஆதரவு இல்லாமல் 2047-ம் ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை இந்தியா நனவாக்க முடியாது.

கட்டுரையாளர்: அனில் கொலானி, இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு), தகுதிவாய்ந்த ஃபிளையிங் இன்ஸ்ட்ரக்டர்  
**
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image