வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கிறது; வாழ்க்கையை மாற்றியமைக்கிறது
சிவராஜ் சிங் சௌஹான்
மத்திய வேளாண்மை,
விவசாயிகள் நலத்துறை அமைச்சர்
சென்னை :
விவசாயிகள் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் ஆழ்ந்த அக்கறையும், ஈடுபாடும் வேளாண் சமூகத்திற்காக எடுக்கப்பட்ட முடிவுகளிலும் கொள்கைகளிலும் திட்டங்களிலும் தெளிவாகத் தெரிகிறது. நமக்கு உணவு வழங்குபவர்களின் (அன்னதாதாக்களின்) வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே பிரதமரின் முதன்மையான முக்கியமான குறிக்கோள். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில் விவசாயமும் விவசாயிகளும் முன்னுரிமைகளாக இருந்ததற்கு இதுவே காரணம்.
இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் பெரிய சவாலாக உள்ளன. இது விவசாயத் துறையின் உற்பத்தித் திறனை அச்சுறுத்துகிறது. லட்சக்கணக்கான விவசாயிகளின் கடின உழைப்பையும் இது மோசமாக பாதிக்கிறது. சமீபத்திய மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உணவு உற்பத்தியில் சுமார் 16-18% இதனால் பாதிக்கப்படுகிறது. அறுவடை, கதிரடித்தல், சேமிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல் போன்ற விவசாயத்தின் பல்வேறு நிலைகளால் இந்த இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தக் காரணிகள் அனைத்தையும் மனதில் கொண்டு, இதை வலுப்படுத்த மோடி அரசு புதிய உத்வேககத்துடன் செயல்பட்டு வருகிறது.
'தற்சார்பு இந்தியா' முன்முயற்சியின் கீழ், மாற்றத்திற்கான ஒரு முயற்சியாக, தொலைநோக்கு அணுகுமுறையுடன் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை ஜூலை 2020-ல் பிரதமர் தொடங்கினார். விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதும், உணவு வீணாவதைக் குறைக்க அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை சிக்கல்களைத் தீர்ப்பதும் இதன் நோக்கமாகும். புதிய திட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ், வங்கிகள் 9% வட்டி வரம்புடன் ஆண்டுக்கு 3% வட்டி மானியத்தை வழங்குகின்றன. குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையின் கீழ் கடன் உத்தரவாத பாதுகாப்புடன்
ரூ.2 கோடி வரை நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். இந்த முயற்சியின் மூலம் தரத்தையும் அளவையும் பாதுகாக்க, உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, விவசாயிகள் சந்தைகளை மிகவும் திறமையாக அணுக உதவுவதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, அவர்களின் வருவாயும் அதிகரிக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட தொகை 2024, ஆகஸ்ட் வரை ரூ.47,500 கோடியைத் தாண்டியுள்ளது. இதில், பல்வேறு திட்டங்களுக்கு ரூ.30,000 கோடிக்கு மேல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
உலர் சேமிப்பைப் பொறுத்தவரை, இந்தியாவில் 1,740 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய சேமிப்புத் திறன் அடிப்படையில் உள்கட்டமைப்பு உள்ளது. தற்போது, இந்தியாவின் ஒட்டுமொத்த தானிய உற்பத்திக்கான சேமிப்பு திறனில் 44% பற்றாக்குறை உள்ளது. இதேபோல், தோட்டக்கலை விளைபொருட்களுக்கு, இந்தியாவில் சுமார் 441.9 லட்சம் மெட்ரிக் டன் குளிர்பதன சேமிப்பு வசதி உள்ளது. ஆனால், நாட்டின் பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியில் குளிர்பதனத் திறன் 15.72% மட்டுமே. வேளாண் உள்கட்டமைப்பு நிதியத் திட்டம் சுமார் 500 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு திறன் இடைவெளியை நிரப்ப உதவியது. அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளில் நாட்டுக்கு ரூ.5,700 கோடியை சேமிக்க பங்களிப்பு செய்தது. மேலும், முறையான குளிர்பதன சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தோட்டக்கலை பொருட்களின் இழப்பு 10% குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவடைக்குப் பின் 3.5 லட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1,250 கோடி சேமிக்கப்படுகிறது.
அரசின் முயற்சிகள் காரணமாக, இளைஞர்களும் விவசாயத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இது விவசாயிகளை தற்சார்புடையவர்களாக மாற்ற உதவுவதோடு, வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க முக்கியமான நடவடிக்கையாகவும் உள்ளது. இந்த முயற்சிகள் 8,00,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளது. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும், இறுதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த நிதி நபார்டின் மறுநிதியளிப்பு வசதியுடன் இணைந்து விவசாய உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கான பயனுள்ள வட்டி விகிதத்தை 1% ஆகக் குறைத்துள்ளது. இது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது. அகில இந்திய முதலீட்டு நிதியின் கீழ், 9,573 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க திட்டங்களுக்கு நபார்டு வங்கி இதுவரை
ரூ.2,970 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மாற்றங்கள் பதப்படுத்தும் திறன்களை அதிகரிக்கும். உணவு உற்பத்தியைப் பலவகைப்படுத்தும். விளைச்சலின் தரத்தை அதிகரிக்கும்; மேம்படுத்தும். இதனால் விளைபொருட்களின் சேமிப்புக் காலம் கூடும். நகர்ப்புற தேவையுடன் இணைப்பதன் மூலம் கிராமப்புற விநியோகத்தை மேம்படுத்தும். இத்துடன் இந்த மாற்றங்கள் கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்ளீட்டு செலவுகளைக் குறைக்கவும், விளைச்சலை அதிகரிக்கவும், வேளாண் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். ஊரகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் பங்களிப்பு செய்யும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் காரணமாக, விவசாயிகள் எதிர்கொள்ளும் சிறிய பிரச்சினைகள் கூட தீர்க்கப்பட்டு வருகின்றன. பயனுள்ள தகவல் தொடர்பும் ஒருங்கிணைந்த முயற்சிகளும் விவசாயிகளின் நல்வாழ்வுச் சூழலில் ஒரு புதிய விடியலைக் கொண்டு வந்துள்ளன. மேலும் இது 'வளர்ச்சியடைந்த பாரதத்தில்' வளர்ச்சியடைந்த விவசாயத் துறையின் கனவுகளை நிறைவேற்ற முக்கிய மைல்கல்லாகத் திகழும்.
**************