உயிரி வாயு உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம்
திரு ஆனந்த் குமார் ஜா,
இயக்குநர், (வாயு திட்டங்கள்)
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம்.
உயிரி வாயு சூழலியலை உருவாக்குவதில் மத்திய அரசு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்தத் துறையில் ஆண்டுக்கு 15 மில்லியன் மெட்ரிக் டன் அழுத்தப்பட்ட உயிரி வாயுவை (CBG) தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு புதை படிம எரிபொருளை சார்ந்திருப்பதற்குப் பதிலாக நீடித்த மாற்று எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என்ற முன்முயற்சியை அடுத்து, இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியான பயன்கள் தற்போது உருவாகத் தொடங்கியுள்ளன. மத்திய அரசின் நிகர பூஜ்ய உமிழ்வு என்ற லட்சியத்திற்கு குறிப்பிட்ட அளவு பங்களிப்பை அழுத்தப்பட்ட உயிரி வாயு வழங்கும் நிலை உருவாகியிருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் சிஎன்ஜி பிரிவில் பயன்படுத்தப்படும் உள்நாட்டு இயற்கை வாயு தேவைக்கு திறன் வாய்ந்த மாற்றாக 15 மில்லியன் மெட்ரிக் டன் அழுத்தப்பட்ட உயிரி வாயு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஜி உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் அளவு குறைந்து மண்ணின் வளம் பாதுகாக்கப்படும். இந்த இயற்கை உரங்களை ரசாயன உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்.
உயிரி எரிபொருள் உற்பத்திக்கான எந்திரங்களை வாங்குவதற்கு நிதி ஆதரவு வழங்கும் திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் செயல்படுத்துகிறது. நொதிக்க வைக்கப்பட்ட இயற்கை உரங்களுக்கான சந்தை மேம்பாட்டு ஆதரவை அதிகரிக்க மத்திய உரத் துறை உதவுகிறது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், மத்திய நிதியுதவி மூலமாக இத்துறைக்கு ஆதரவளிக்கிறது. நிலங்களை குறைந்த குத்தகைக்கு அளிப்பது, ஒற்றை சாளர அனுமதி, நில ஒதுக்கீட்டில் முன்னுரிமை ஆகியவற்றின் மூலம் மாநில அரசுகளும் பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் வழியாக இதற்கு ஆதரவளிக்கின்றன.
எனினும் சூழலியலில் வருவாய் மாதிரி என்னும் நிலையான இடத்தை இன்னும் பிடிக்க முடியவில்லை. அனைத்து இயன்ற வருவாய் வாய்ப்புகளும் இன்னும் முழு ஆற்றலுடன் இயங்கவில்லை. நொதிக்க வைக்கப்பட்ட இயற்கை உரங்கள் மூலமான வருவாயும் உரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை. கார்பன் வாயு பொறிமுறையும் முழு அளவில் உருவாக்கப்படவில்லை. இத்தகைய சூழலால் கார்பன் வாயுகளை உருவாக்குவதில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.
தற்போது அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) நிலையங்களில் தயாரிக்கப்படும் வாயு மூலமாக, வருவாயை பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) நிலையங்களை விரிவாக்கம் செய்வது அவசியமாகிறது. வாயு, நொதிக்க வைக்கப்பட்ட இயற்கை உரங்கள் ஆகியவற்றின் மூலம் வருவாய் பெருக்கத்திற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அவசியமாகி உள்ளது.
உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும் சிபிஜி கொள்முதலை உறுதி செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த முன்முயற்சி காரணமாக 2022-23-ம் ஆண்டில் 12 ஆயிரம் டன்களாக இருந்த மொத்த வாயு விற்பனை 2023-24-ல் 19 ஆயிரம் டன்னாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2024-25-ம் ஆண்டின் இரண்டு மாதங்களில் எடுக்கப்பட்டுள்ள தரவுகளின்படி சிபிஜி விற்பனை இந்த ஆண்டில் இரு மடங்குக்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதில் உள்ள சவால்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சிபிஜி உற்பத்தி நிலையங்களுக்கும். சிஜிடி கட்டமைப்புக்கும் இடையே குழாய் இணைப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும் வாயு முழுவதையும் பயன்படுத்துவதை உறுதி செய்ய முடியும்.
இந்தியாவில் மண்ணின் கார்பன் அளவு மற்றும் ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடஇந்திய மாநிலங்களில் மிகவும் மோசமான அளவிற்கு உள்ளது. மண்ணின் உற்பத்தி வளத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களின் பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகியவற்றை முழுவதும் உறிஞ்சக் கூடிய திறனை அந்தப் பகுதிகளின் நிலம் இழந்துள்ளது. மண்ணின் கார்பன் அளவை அதிகரிக்க நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் ஆற்றலை உறிஞ்சும் திறனை அதிகரிப்பதும், நிலத்தை வேளாண்மைக்கு தகுதியுள்ளதாக மாற்றுவதும் அவசியமாகும். இதன் மூலம் விவசாயிகளுக்கு உதவ முடியும்.