உயிரியல் என்பது அடுத்த தொழில்நுட்ப புரட்சியாக இருக்கும்: சென்னை கருத்தரங்கில் டாக்டர் அல்கா சர்மா பேச்சு
சென்னை :06
உயிரியல் என்பது அடுத்த தொழில்நுட்ப புரட்சியாக இருக்கும் என்று மத்திய உயிரி தொழில்நுட்ப துறையின் மூத்த ஆலோசகரும், விஞ்ஞானியுமான டாக்டர் அல்கா சர்மா தெரிவித்துள்ளார்.
பயோஇ3 குறித்து சென்னையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய அவர், கடந்த சில 10 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை போல் பயோஇ3 எனும் உயிரி தொழில்நுட்பம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தியாவிலும், உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். இதனைக் கருத்தில் கொண்டே பயோஇ3 கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக அவர் கூறினார். இந்தத் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
சோதனை கூடத்தில் இருந்து வணிக மயத்தை நோக்கி என்பது இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். கழிவு பொருட்களை குறைப்பது, மறு பயன்பாட்டுக்கு உட்படுத்துவது, மறு சுழற்சி செய்வது ஆகியவை செல்வத்தை உருவாக்கும் நடைமுறைகளாக அமையும். மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து உயிரி தொழில்நுட்பம் தொடர்பான உற்பத்தியில் ஈடுபடுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
உயிரி அடிப்படையிலான ரசாயனங்கள், என்சைம்கள் பற்றியும், பருவநிலைக்கு ஏற்ற வேளாண்மை குறித்தும் கார்பன் சேகரிப்பு, அதன் பயன்பாடு பற்றியும் அவர் எடுத்துரைத்தார். கண்டுபிடிப்புகளை பரவலாக்கவும், மாற்றத்திற்கான ஆராய்ச்சிக்காகவும் உயிரி- செயற்கை நுண்ணறிவு மையங்கள், உயிரி உற்பத்தி மையங்கள், பயோ பவுண்டரிகள் ஆகியவை நாடு முழுவதும் நிறுவப்படும் என்று அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கில் உரையாற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர் குகன் ஜெயராமன், பயோஇ3 கொள்கை என்பது வேலைவாய்ப்புகளையும், நீடிக்கவல்ல சுற்றுச்சூலையும் உருவாக்கும் என்றார். லிக்னோசெல்லுலோஸ் என்பது கோதுமை தட்டை மற்றும் நெல் பயிர் வைக்கோலில் அதிகம் உள்ளதாகவும், இதனைக் கொண்டு எத்தனால் தயாரிக்கலாம் என்பதால் ஊரகப்பகுதியில் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப கல்வி கழகத்தின் பேராசிரியர் டாக்டர் தரணி இந்தக் கருத்தரங்கில், கடல்சார் உயிரினம் மற்றும் உயிரற்ற ஆதார வளங்கள் கண்டுபிடிப்பு குறித்த புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்முயற்சிகள் பற்றியும், கடல்சார் உயிரி தொழில்நுட்பத்துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்தும் விவரித்தார்.
மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையின் டாக்டர் ஏ வம்சி கிருஷ்ணா பேசுகையில், விண்வெளி சுற்றுலா என்பது 2050-ம் ஆண்டு வாக்கில் உண்மையாகும் என்றும், விண்வெளி சார்ந்த உயிரி உற்பத்தி உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு நிதி ஆதாரத்தை வழங்கும் என்றும் கூறினார்.
சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை எடுத்துரைத்தார்.