பத்திரிகைத் தகவல் அலுவலகம் சார்பில் 6 நாள் ஊடக சுற்றுலா நிகழ்வுக்கு ஏற்பாடு - அசாமில் இருந்து 13 பத்திரிகையாளர்கள் நாளை தமிழ்நாடு வருகின்றனர்.
சென்னை : செப்,08.
அசாமில் உள்ள பிரபல ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 13 பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு, தமிழ்நாட்டில் ஆறு நாள் ஊடக அனுபவப் பயணத்தை மேற்கொள்கிறது. குவஹாத்தியில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசு நிறுவனங்கள், அமைப்புகள் பற்றிய விரிவான புரிதலை ஊடகங்களுக்கு வழங்குவதை இந்த சுற்றுலா நோக்கமாகக் கொண்டுள்ளது. அச்சு, மின்னணு, டிஜிட்டல், சமூக ஊடகங்களைச் சேர்ந்த இந்த 13 பேர் அடங்கிய ஊடகக் குழு 2024 செப்டம்பர் 9ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ளும்.
இந்த ஆறு நாட்களில், சென்னை துறைமுகத்தில் உள்ள ஐஎன்எஸ் பித்ராவில் இந்திய கடற்படை - கடலோர காவல்படையின் செயல்பாடுகளை ஊடகக் குழு அறிந்து கொள்ளும். சென்னை மெட்ரோவின் செயல்பாடுகளைப் பார்வையிடுவது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் (இஸ்ரோ) செல்லுதல், பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்குச் (ஐசிஎஃப்) சென்று மேம்பட்ட ரயில் தொழில்நுட்பங்களைப் பார்வையிடுதல் போன்றவையும் இந்த ஆறு நாள் நடவடிக்கைகளில் அடங்கும்.
கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம், மகாபலிபுர பாரம்பரிய சின்னங்கள், காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு மையங்கள் ஆகியவற்றையும் இந்தக் குழு பார்வையிடும். இந்தப் பயணத்தின் போது தமிழ்நாடு ஆளுநரையும் அசாம் ஊடகக் குழு சந்திக்கும்.
குவஹாத்தி பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் ஊடக - தகவல் தொடர்பு அதிகாரி ஸ்மிதா சைகியா தலைமையிலான ஊடகக் குழுவில், தி அசாம் ட்ரிப்யூன், அமர் அசோம், தைனிக் கணதிகர், சில்சாரைச் சேர்ந்த ஜுகசங்கா, திபுவை தலைமை இடமாகக் கொண்ட ஹில்ஸ் டைம்ஸ், தைனிக் பூர்வோடே, டிடி அசாம், நார்த் ஈஸ்ட் லைவ், நியூஸ் 18 அசாம், பிரதிதின் டைம்ஸ், ஜிப்ளஸ், டைம் 8 ஆகிய ஊடக நிறுவனங்களின் மூத்த பத்திரிகையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஊடக சுற்றுப்பயணம், அசாமில் உள்ள ஊடக வல்லுநர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கும் இடையே சிறந்த புரிதல், அறிவு பரிமாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மத்திய அரசின் நாடு தழுவிய வளர்ச்சி முயற்சிகளின் பரந்த கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.