வளர்ச்சியடைந்த பாரதம் – பூவுலக நண்பன்டாக்டர். எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர்
வளர்ச்சியடைந்த பாரதம் – பூவுலக நண்பன்

டாக்டர். எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் 

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் இலக்கை அடைவதற்குப் பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. முதலாவதாக, தேசத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையும், அதற்குச் சற்றும் குறைவில்லாமல், அந்தத் தொலைநோக்கில் விளையும் கனவுகளை, களத்தில் மெய்ப்பட வைக்கும் ஆற்றலும் தேவை. நமது வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதன்மூலம், நாம் நம்மில் நம்பிக்கையை வளர்க்க முடியும். நிலையான முன்னேற்றமும், தொடர்ச்சியான சீர்திருத்தமும்கூட அரசியல் நிலைத்தன்மை உள்ள சூழலில் மட்டுமே சாத்தியமாகும். அது மட்டுமே நீண்டகால இயல்புடைய கொள்கை பரிந்துரைகளைக் கருத்தாக்கம்செய்து செயல்படுத்த உதவும். இவற்றில் பெரும்பாலானவை, வரும் வாரங்களில் இந்திய மக்களின் ஒட்டுமொத்த அரசியல் தேர்வுகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். இதில் இன்னொரு முக்கியமான அம்சம், வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிச் செல்லும் நம் பாதையில், சர்வதேசச் சூழல் நமக்கு அளிக்கும் வாய்ப்புகளும், சவால்களும்கூட.

2. பொதுவாக, நாடுகள் தங்கள் தேசிய வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மற்றும் சர்வதேச சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், தங்கள் வெளியுறவுக் கொள்கையை வகுக்கின்றன. தேவைப்படும் வளங்கள், உலகளாவிய சந்தைகள், தொழில்நுட்ப யுக்திகள், மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான அணுகலை அதிகரிப்பதே பெரும்பாலும் இத்தகைய வெளியுறவுக் கொள்கையின் இலக்காகும். கடந்த பல தசாப்தங்களில் வியத்தகு வளர்ச்சி விகிதங்களைப் பதிவுசெய்த நாடுகள் இத்தகைய கொள்கை தெளிவு கொண்டவர்கள் ஆவர். நம் இந்தியா சுதந்திரமடைந்த பின், முதல் நான்கு தசாப்தங்களில், கருத்தியல் காரணங்களுக்காகச் சிதறிக்கிடந்த இந்தக் கவனம் 2014 முதல் தெளிவாக உள்ளது. வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கைகளாலும், கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட நாம் சில சமயங்களில் நமது வளர்ச்சியை மறந்து மற்றவரின் லாபத்துக்காகச் செயல்பட்டோம். இப்போது ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம்,  'பாரதம் முதலில்' என்ற வலுவான உணர்வு. அதன் மூலம் தன்னம்பிக்கையும், நமது தேசிய நலனையே முதன்மை அளவீடாகக் கொள்ளும் உணர்வும் ஏற்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை, சர்வதேச சூழலில் நம் நண்பர்களை அதிகப்படுத்தி, பிரச்சனைகளை குறைக்கக்கூடிய ஒரு பல்நோக்கு கொண்ட வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற ஊக்கமளிக்கிறது. ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய இடத்தில், நாம் தயங்குவதுமில்லை, அழுத்தங்களுக்கு ஆளாவதுமில்லை. அதே நேரத்தில், நமது இருப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறோம். இதைத்தான் பூவுலக நண்பனான பாரதம் என்கிறோம்.

3. இந்தியா ஒரு முன்னணிச் சக்தியாக உருவெடுக்க வேண்டுமானால், அது தனக்கான தேசிய வலிமையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதில் பெரும்பான்மை பங்கு வகிப்பது, தொழில்துறை உற்பத்தி ஆகும். ஏனெனில், அதுவே தொழில்நுட்பத்தின் அடித்தளமாகும். கடந்தகால தொழில்நுட்ப கவனக்குறைவுக்கு ஈடுகட்ட, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை, நாம் பல படிகளை ஒருசேர தாண்டியாக வேண்டும்., பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சர்வதேச கூட்டுமுயற்சியால் இது சாத்தியமாகும். துருவங்களாய் பிளவுபட்டு, பரஸ்பர சந்தேகங்களோடு இயங்கும் உலகச்சூழலில், இத்தகைய கதவுகளை அரசானயம்/ராஜதந்திரம் கொண்டு மட்டுமே திறக்க முடியும். சர்வதேச பொருளாதாரம் இப்போது அதன் விநியோகச் சங்கிலிகளை மீண்டும் கட்டியெழுப்பி, உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறைகடத்திகள் (semiconductors), மின்சார வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பேணும் தொழில்நுட்பங்கள் போன்ற போட்டிமிக்க களங்களில் இது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கட்டமைப்புகளில் இந்தியா முழுமையாக இணைக்கப்படுவதை ஒரு பூவுலக நண்பனுக்கான சிந்தனை மற்றும் செயல்பாட்டின்மூலம் மட்டுமே நாம் உறுதி செய்யமுடியும்.

4. கொரோனாவுக்குப் பிந்தைய உலகில், அனைத்துக் குறிப்பிடத்தக்க நாடுகளும், நீண்டகால சுயசார்பிற்கான தேடலில் உள்ளன. மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகள்கூட தங்கள் உற்பத்தித் திறன் காணாமற்போய், வேறு நாடுகளைச் சார்ந்து இருப்பதைப்பற்றி கவலைப்படுகின்றன. அனைத்தும் ஆயுதமாக்கப்படும் உலகில், இந்தியாவும் தன் அடிப்படைத் தேவைகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை தேசிய அளவில் உருவாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதனால்தான் 'மேக் இன் இந்தியா' நமது பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாமல், தேசப் பாதுகாப்புக்கும்கூட மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு போன்ற சவாலான துறைகளில் நாம் ஏற்கனவே பார்த்து வருவதைப்போல, இது ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் உலகளாவிய மையங்களில் ஒன்றாக உருவெடுக்கும் நிலையில் இந்தியா இன்று உள்ளது. சர்வதேச அளவில், நட்பு நாடுகளுடன், இன்னும் தீவிரமாக ஒன்றிணைந்து செயல்படுவதன்மூலம் மட்டுமே வளர்ந்த பாரதத்தை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்த முடியும்.

5. இந்தியர்களின் திறமை மற்றும் திறனை உலகம் உணர்ந்து வருவது, வரவேற்கத்தக்கத் தற்கால மாற்றங்களில் ஒன்றாகும். டிஜிட்டல் யுகத்தில், நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் இது இன்னும் மேம்படுகிறது. உலகில் ஏற்பட்டுள்ள கடுமையான மக்கள்தொகை மாற்றங்கள் பல்வேறு தொழில்களிலும் புதிய தேவைகளை உருவாக்குகின்றன. இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள நமது கல்வி மற்றும் பயிற்சித் திறன்களை பெருமளவில் விரிவுபடுத்த வேண்டும். ஆனால், அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டுமெனில், நமது நட்பு நாடுகள், இந்தியபாரம்பரியத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரியக் கூறுகளுடன் பொருந்தக்கூடிய வகையில் செயல்பட்டால் மட்டுமே முடியும். இவை அனைத்துடன் சேர்த்து, நமது குடிமக்கள் எங்கிருந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இன்று இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய இலக்காக உள்ளது. சமீபத்தில், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளுடனான தொழிலாளர் நகர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. உலகளாவிய பணியிடத்தில், இந்தியர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது, தனிப்பட்ட முறையில் நன்மை அளிப்பதுடன், தேசிய அளவில் திறன் மேம்பாட்டிற்கு வழி வகுக்கும்.

6. சச்சரவுகளும், பருவநிலை மாற்றத்தின் தாக்கமும் நிறைந்த இந்த காலகட்டம், சர்வதேச இணைப்புகளுக்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது. விநியோகச் சங்கிலிகளைப் போலவே தளவாடப் போக்குவரத்தையும் பன்முகத்தன்மை மற்றும் நெகிழ்திறன் கொண்டதாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. செங்கடலில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் சூயஸ் கால்வாய் அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளை நாம் கண்டிருக்கிறோம். பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது போன்ற அபாயத்தைக் குறைப்பது சாத்தியமாகும். இத்தகைய சமீபத்திய முயற்சிகள் பலவும் இந்தியாவை மையமாகக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஐஎம்இசி(IMEC) வழித்தடம் அரேபிய தீபகற்பம் வழியாக ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றுடன் நம்மை இணைக்கிறது. ஐ.என்.எஸ்.டி.சி. இதே நோக்கத்துடன் ஈரானையும், ரஷ்யாவையும் கடந்து செல்கிறது. நமது கிழக்கில், முத்தரப்பு நெடுஞ்சாலையால் நம்மை பசிபிக் பெருங்கடல் வரை இணைக்க முடியும்.

7. மாறிவரும் உலகில் பாதுகாப்பு மற்றும் அரசியல் சமநிலையை உறுதி செய்வதற்கும் இதே அணுகுமுறை பொருந்தும். குவாட் (Quad), பிரிக்ஸ் (BRICS), I2U2, எஸ்சிஓ (SCO),கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS) என எந்த அமைப்பாக இருந்தாலும், இந்தியாவின் நலன் மட்டுமே நம் கணக்கீடுகளின் மையத்தில் உள்ளது. பெரும்பாலும், இத்தகைய செயல்பாடுகளுக்காக, தங்களுக்கு மத்தியில் பெரும் முரண்பாடுகள் கொண்ட பல நாடுகளை ஒன்றிணைத்து செயல்பட வேண்டியுள்ளது. இதை சாத்தியமாக்க ஒரு பூவுலக நண்பன் தேவை. அதனால்தான் இது மோடியின் உத்தரவாதத்தின் ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image