மின்சார வாகனத் தேவையை அதிகரிக்கச் செய்ய ஃபேம் (FAME) திட்டத்தின் பங்கு: உலகளாவிய மின்சார வாகனத் துறைக்கு இந்தியா தலைமை வகிக்க அவசியம்
சுலஜ்ஜா ஃபிரோதியா மோத்வானி,
நிறுவனர் மற்றும்
தலைமை செயல் அதிகாரி, கைனடிக் கிரீன்
முற்றிலும் கார்பன் வாயு வெளியேற்றம் இல்லை என்ற இலக்கை எட்டுவதற்கு உலக நாடுகளும், இந்தியாவும் பணியாற்றி வருகின்றன. இந்தியா, தனது பசுமைச் சூழல் என்ற இலக்கை எட்டுவதற்கும், இதில், ஆதிக்கம் செலுத்துவதற்கும் மின்சார வாகனங்கள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன். மின்சார வாகனத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன், மின்சார வாகனத் தொழில்நுட்பத்துக்கு மாற உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மிகப்பெரும் அளவில் முதலீடு செய்கின்றன. உதாரணமாக, தங்களது நாடுகளில் உள்ள வாகனங்களில் 76% அளவுக்கு மின்சார வாகனங்களாக 2030-ம் ஆண்டுக்குள் மாற்ற ஐரோப்பிய நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. இதுவே, அமெரிக்கா 46%, சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் 66% என நிர்ணயித்து செயல்படுகின்றன. அதிகத் திறன்பெற்ற வளரும் நாடாக உள்ள இந்தியாவும், இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடக் கூடாது.
வாகனச் சந்தையில் உலகின் 3-வது மிகப்பெரும் நாடாக உள்ள இந்தியா, மின்சார வாகனங்கள் துறைக்கு தலைமை வகிக்கவும், சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறது.
இந்த விவகாரத்தில் நாம் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளோம் என்று கூறிக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதுடன், பெருமை கொள்கிறேன்.
தேவையை ஊக்குவிப்பதற்காக, ஃபேம் (FAME) திட்டத்தின்கீழ் ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் அதிவேகமாக மின்சாரமயமாக்குவதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருவதற்கு நாம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இந்த வாகனங்களை 80% இந்தியக் குடிமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மின்சார வாகனங்களின் பயன்கள், மக்களுக்குச் சென்றடைய வேண்டும். இந்தியப் போக்குவரத்துத் துறையின் பெரும் பகுதியைச் சென்றடைய வேண்டும்.
வாகனத் தொழில் துறை மற்றும் இந்திய அரசு இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சியின் மூலம், 5-6% அளவுக்கு மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 30% அளவுக்கு மின்சார வாகனங்களாக மாற்றுவது என்ற இலக்கை அடைவதற்கு நாம் இன்னும் நிறையப் பணியாற்ற வேண்டியுள்ளது. இதில், 2030-ம் ஆண்டுக்குள் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் அளவு 60% அளவுக்கு இருக்க வேண்டும். மின்சார வாகனத் துறையில் நாம் நேர்மறையான சூழலை உருவாக்கியுள்ளோம். அடுத்த படியை எடுத்துவைக்கத் தயாராக உள்ளோம்.
தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாவது கட்ட ஃபேம் திட்டம், மார்ச் 2024-உடன் முடிவுக்கு வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த 5 ஆண்டுகளுக்கான மின்சார வாகனங்களுக்கான கொள்கையை விரிவாக ஏற்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று நாங்கள் நம்புகிறோம். இதில், மின்சார வாகனங்களின் தேவையை அதிகரிக்கச் செய்ய விரிவான செயல் திட்டத்தை இந்தியா கொண்டுவர வேண்டும்.
தற்போதைய நிலையில், வழக்கமான வாகனங்களுக்கும், மூன்று சக்கர மற்றும் இரண்டு சக்கர மின்சார வாகனங்களுக்கும் இடையேயான விலை வித்தியாசம் என்பது 45-50% அளவுக்கு உள்ளது. இதுவே கார் என்றால், 80% அளவுக்கு உள்ளது. தேவையை அதிகரிக்கச் செய்வதற்கான ஃபேம் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், இந்த வித்தியாசம் 15% முதல் 30% என்ற அளவுக்கு குறையும். இது பொதுமக்களுக்கு மின்சார வாகனங்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.
இந்தியாவில் லித்தியம்-அயன் பேட்டரி செல்களின் உற்பத்தி அடுத்த 2-3 ஆண்டுகளில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பேட்டரிகளின் செலவைக் குறைக்கும். அந்தச் சூழலில், விலை வித்தியாசத்தை சரிப்படுத்துவதற்காக ஊக்கத் தொகை வழங்க வேண்டிய தேவை இருக்காது.
எனவே, இந்தியாவில் பசுமை வாகனங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. உலகளாவிய மின்சார வாகனங்களுக்கான போட்டியில் இந்தியாவால் வெற்றிபெற முடியும். இந்த விவகாரத்தில் நாம் மிகவும் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளோம். எனினும், நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
==========