மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு
Chennai
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பம், மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார்.
மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், தபால் துறை அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினர்.
இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து மத்திய இணையமைச்சர், வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவி திட்டம், சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, கல்விக் கடன் மற்றும் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பயனாளிகளுக்கு மத்திய இணையமைச்சர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அமைச்சர், 2047 ஆம் ஆண்டில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைவதோடு இந்தியாவின் கட்டமைப்புகள் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரத யாத்திரை நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பொதுமக்கள் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டதாகவும், இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய பயனாளிகள் திட்டங்களில் இணைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிறைவாக மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டர்களை பொதுமக்களிடம் வழங்கிய அமைச்சர், விழிப்புணர்வு வாகனத்தையும் பார்வையிட்டார்.