*பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் மத்திய அரசின் நமது லட்சியம்,வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் பொங்கல் விழாவில் உத்தரபிரதேச மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் தினேஷ் ஷர்மா கலந்து கொண்டார்.*
Chennai
மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நடந்து வருகிறது. பெரம்பலூர் வேளாண் அறிவியல் மையம் சார்பில் குரும்பலூரில் யாத்ரா வாகனத்தின் வீடியோ படக்காட்சி மூலம் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீட்டு வசதி திட்டம், மகளிருக்கான சமையல் எரிவாயு திட்டம், ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டம், பிரதமர் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டம், ஆயுஷ் மருத்துவக் காப்பீடு திட்டம், பயிர்காப்பீடு திட்டம், டிஜிட்டல் இந்தியா, மண்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடு, பயன்பாடு, எதிர்கால வளர்ச்சி, சாதனைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் தினேஷ் ஷர்மா கலந்துகொண்டு 9 ஆண்டுகால மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி கிராம மக்களுக்கு சென்றடைந்துள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக பிரதமர் மோடி வரும் 20ம்தேதி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகிறார். அந்த அளவிற்கு தமிழக மக்கள் மீது மோடி பற்றுக் கொண்டுள்ளார் என அவர் தெரிவித்தார். பின்னர் மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டர், விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு அவர் விநியோகம் செய்தார். இதனைத் தொடர்ந்து, பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தினேஷ் ஷர்மா, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பானை உடைத்தல் போட்டியில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி நேதாஜி மாரியப்பன், வேளாண் அலுவலர் புனிதா மற்றும் வேளாண் அலுவலர்கள் மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டங்கள், மண் புழு உரம் தயாரித்தல், மண் வளப் பாதுகாப்பு போன்றவை குறித்து விளக்கமளித்தனர்.