கோவை மாவட்டம் காரமடையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்துகொண்டார்
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்' யாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கலந்து கொண்டு, மத்திய அரசின் திட்டங்களில் பயன்பெறும் பொதுமக்களுக்கு திட்டப் பயன்களை வழங்கினார்.
மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான நிதி உதவி திட்டம், முத்ரா கடன் உதவி, உஜ்வாலா சமையல் கேஸ் இணைப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் திட்டப் பயன்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டதோடு, மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டர்கள் மற்றும் புத்தகங்களை மத்திய இணையமைச்சர் பிரச்சார வாகனத்தைப் பார்வையிட்டு பொதுமக்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க பல்வேறு வகையிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசின் சார்பில் வீடு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளதோடு, விறகு அடுப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க உஜ்வாலா திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளிலும் கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவற்றோடு நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும், இளைஞர்களின் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமல்லாமல் ஆதார் இணைப்பு மற்றும் ஆதாரில் தகவல் மாற்றம் தொடர்பான சேவைகளும் நமது லட்சியும் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சியில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னதாக இன்று காலை, காரமடை பகுதியில் உள்ள சாஸ்திரி நகர் ஏ.டி. காலனி பகுதியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் பொதுமக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களோடு, மத்திய இணையமைச்சர் கிரிக்கெட் விளையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.