*அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்கள் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கம்*
*அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் நிலைகளை மேம்படுத்துவதற்கான 11 முக்கிய தலையீடுகள்*
பின்னணி:
தனித்துவமான கலாச்சாரம், புவியியல் தனிமை, பெருவாரியான சமூகத்துடன் தொடர்பு கொள்ளக் கூச்சப்படுதல் மற்றும் பின்தங்கிய நிலை போன்ற சில குறிப்பிட்ட அறிகுறிகளால் பழங்குடி சமூகங்கள் பெரும்பாலும் அடையாளம் காணப்படுகின்றன. இவற்றுடன் வேட்டையாடுதலை சார்ந்திருத்தல், உணவு சேகரிப்பு, விவசாயத்திற்கு முந்தைய தொழில்நுட்ப நிலை, மக்கள்தொகையின் பூஜ்ஜியம் அல்லது எதிர்மறை வளர்ச்சி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை மற்றும் மிகக் குறைந்த கல்வியறிவு போன்ற அம்சங்களை பழங்குடியின குழுக்கள் கொண்டிருக்கின்றன. இத்தகைய குழுக்கள் ‘குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
அறிமுகம்:
குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் அடங்கிய 75 குழுக்களை இலக்காகக் கொண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தியில் நவம்பர் 15, 2023 அன்று பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்கள் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினரின் சமூகப் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்காக, இந்த இயக்கம் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னதாக 2023-24 நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவித்திருந்தது.
இத்தகைய பழங்குடியின குழுக்கள் ஆங்காங்கே, தொலைதூர மற்றும் எளிதில் அணுக முடியாத இடங்களில் , பெரும்பாலும் வனப் பகுதிகளில் தங்கியுள்ளனர். எனவே இவர்களின் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர் மற்றும் துப்புரவு, கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான மேம்பட்ட அணுகல், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் நிரப்ப ஒரு இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசங்களில் உள்ள 220 மாவட்டங்களைச் சேர்ந்த 840 வட்டாரங்களின் 22,544 கிராமங்களைச் சேர்ந்த 7.12 லட்சம் வீடுகளில் உள்ள 28 லட்சம் பேர், 75 குழுக்களில் அடங்கியுள்ளனர்.
நிதி ஒதுக்கீடு:
அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்கள் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கத்தை , சுமார் ரூ.24000 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கவனம்:
9 அமைச்சகங்களின் வாயிலாக 11 முக்கிய தலையீடுகளில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் நிலைகளை மேம்படுத்துவதற்கான இயக்கம் கவனம் செலுத்துகிறது.
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் உறுதியான வீடுகள், சாலை இணைப்புகள் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பிரதமரின் கிராமச் சாலைத் திட்டம் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புத் தேவைகளை இந்தப் பழங்குடி குழுவினர் வசிக்கும் கிராமங்கள்/ பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான குடிநீர் வசதி, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் மூலம் நிறைவேற்றப்படும்,
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கம், கல்வி அமைச்சகத்தின் முழுமையான கல்வித் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊட்டச்சத்துத் திட்டம் ஆகியவை, ஆயுஷ்மான் அட்டை வழங்குதல், மருத்துவமனை பிரசவம் மற்றும் நோய்த்தடுப்பு உட்பட இந்தப் பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட மேம்பாட்டுத் துறைத் திட்டம் (ஆர்.டி.எஸ்.எஸ்) அல்லது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய மின்சக்தித் திட்டம் மூலம் தெருக்கள் மற்றும் பல்நோக்கு மையங்களில் சூரிய மின் விளக்குகளை வழங்குவதன் மூலம் மின்மயமாக்கப்படாத விடுபட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்.
நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவதற்காக, பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வன் தன் மையங்கள் மற்றும் பல்நோக்கு மையம் உருவாக்கப்படும்.
தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் உலகளாவிய சேவை கடமை நிதியத்தின் (யு.எஸ்.ஓ.எஃப்) கீழ் செல்பேசி கோபுரங்களை நிறுவுவதன் மூலம் இணைக்கப்படாத குடியிருப்புகளில் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும்.
இவை தவிர பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், அரிவாள் செல் ரத்த சோகை நோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு, 100% நோய்த்தடுப்பு, பிரதமரின் பாதுகாப்பான தாய்மை திட்டம், பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம், பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம், பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் போன்றவற்றை முழுமையாக செயல்படுத்தவும் உறுதியளிக்கப்படும்.
முன்னேற்றம் மற்றும் விளைவுகளைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தின் பயன்பாடு:
திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் விளைவுகளைக் கண்காணிக்க பிரதமரின் விரைவு சக்தி தளத்தில் மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் ஓர் வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், அமைச்சகங்களுடன் ஒருங்கிணைக்க ஒரு திட்ட கண்காணிப்பு பிரிவு (பி.எம்.யூ), பழங்குடியினர் விவகாரங்களுக்கான செயலாளர் தலைமையில் ஒரு வழிகாட்டுதல் குழு மற்றும் மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர் அதிகாரக் குழு ஆகியவை நிறுவப்படுகின்றன.
குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுடன் மாண்புமிகு குடியரசுத்தலைவர் சந்திப்பு:
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, ஜூன் 12, 2023 அன்று குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுவினரை குடியரசு தலைவர் மாளிகைக்கு மாண்புமிகு குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு வரவேற்றார், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் மாண்புமிகு சபாநாயகர் உரையாற்றினார்.
பழங்குடி சமூகங்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கைமுறைகளுக்கு மதிப்பளித்து, அவர்களை பிரதான சமூகத்தினருடன் இணைப்பதற்கு இந்திய அரசு பல முன்முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அவை பற்றி படிக்க, இங்கே சொடுக்கவும்.