போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் மாற்றம்
திரு பவன் குமார் ஜோஷி
விஞ்ஞானி-ஜி _______
pawan.joshi@nic.in
தொழில்நுட்ப புதுமைகள், மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு, சாலை உள்கட்டமைப்பின் மேம்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் போக்குவரத்துத் துறை அபரிமிதமான வளர்ச்சியை சந்தித்துள்ளது. எந்த ஒரு நாட்டை போலவும், போக்குவரத்துத் துறையை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இந்தியாவிலும் விரிவான ஆளுகைமுறை உள்ளது. மேம்பட்ட ஆளுகை, மக்களுக்கு கூடுதல் பயனுள்ள சேவைகளை வழங்குவது மற்றும் அமைப்புமுறையில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் நோக்கத்தோடு அண்மை ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஏராளமான நவீன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் முன்முயற்சியான மின்னணு போக்குவரத்து இயக்கத் திட்டம் என்பது போக்குவரத்துத் துறையின் மேலாண்மை மற்றும் செயல்பாடுகளை நவீனமாக்குவதில் ஓர் முக்கிய நடவடிக்கையாகும். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய தகவலியல் மையத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த விரிவான டிஜிட்டல் தளம், இணையத்தை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் அமைப்புமுறை மூலம் போக்குவரத்து தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. போக்குவரத்து சம்பந்தமான பல்வேறு செயல்பாடுகளின் (வாகனங்களின் பதிவு, ஓட்டுநர் உரிமம், நடைமுறைப்படுத்துதல், வரி விதிப்பு, அனுமதி, தகுதி நிலை உள்ளிட்டவை) சேவை விநியோக அமைப்புமுறையை இத்திட்டம் வெற்றிகரமாக மாற்றி அமைத்திருப்பதோடு, சேவைகளின் விநியோகத்தில் மேம்படுத்துதலை உறுதி செய்து பல்வேறு பங்குதாரர்களுக்கு அதிகாரமும் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு சில முக்கிய செயல்முறைகள்: வாஹன் (வாகனங்களின் பதிவிற்கானது), சாரதி (ஓட்டுநர் உரிமத்திற்கானது), எம்பரிவாஹன் (mParivahan) (செல்பேசி செயலி), மின்னணு ரசீது (நடைமுறைப்படுத்துவதற்கான தீர்வு) மற்றும் மாசு கட்டுப்பாட்டில் உள்ள சான்றிதழ் (பி.யூ.சி.சி) (மாசு கட்டுப்பாட்டு அமைப்புமுறை).
வாஹன் மற்றும் சாரதி ஆகியவை 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1300க்கும் அதிகமான சாலை போக்குவரத்து அலுவலகங்கள், 30000க்கும் மேற்பட்ட விற்பனையாளர் இடங்களை சென்றடைந்துள்ளன. மோட்டார் வாகன சட்டம்/ விதி நிர்ணயித்துள்ள தரங்களின் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கு 24 மாநிலங்களின் 30000 மாசு கண்காணிப்பு மையங்களில் இணைய வழியிலான பி.யூ.சி.சி. செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. எம்பரிவாஹன் என்ற செயலியின் வாயிலாக மெய்நிகர் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் போன்ற போக்குவரத்துத் துறை சம்பந்தமான பல்வேறு சேவைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வாகனங்களின் தகுதிநிலையை சரி பார்ப்பது மற்றும் ஆய்வை துறை அதிகாரிகள் சுமூகமாக நடத்துவதற்கு வசதியாக எம்வாஹன் (mVahan) என்ற மற்றொரு செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து சம்பந்தமான தகவல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, மேம்பட்ட விபத்து மேலாண்மையை ஏற்படுத்துவதற்காக உலக வங்கி நிதி உதவியோடு ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவு என்ற முன்முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பங்குதாரர்களின் ஆதரவுடன் போக்குவரத்து சூழலியல், பொது டிஜிட்டல் தளமாக உயர்ந்திருப்பதோடு, ஆக்கப்பூர்வமான இணைப்பை உருவாக்கும் வகையில் தரவு மற்றும் சேவைகளின் பரிமாற்றமும் பெருமளவு வளர்ந்திருக்கின்றன.