வேளாண்மையில் மின்னணு அதிகாரம்
டாக்டர் ரஞ்சனா நாக்பால்
விஞ்ஞானி -----
உலகின் பழமையான மற்றும் மிக முக்கியமான தொழில்களில் விவசாயமும் ஒன்றாகும், இது மனித உயிர்வாழ்வுக்கு முக்கியமானதாகும். உலகளவில், நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பரவல், நீர் ஆதாரங்கள் குறைந்து வருதல், மாறிவரும் மற்றும் கணிக்க முடியாத பருவநிலை முறைகள், வேளாண் வருமானம் குறைதல் போன்ற காரணங்களால் வேளாண் சாகுபடி குறைந்து வருகிறது. விதைப்பு, பயிர் தேர்வு, உர அளவு மற்றும் நீர்ப்பாசனம், அறுவடை உள்ளிட்டவை தொடர்பான பெரும்பாலான வேளாண் முடிவுகள் தரவு பகுப்பாய்வு உள்ளீடுகளின் அடிப்படையில் இல்லை.
இந்நிலையில் வேளாண் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு தருணங்களில் தேவையான கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தியது. இந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த பல்வேறு தகவல் தொழில்நுட்ப முறைகளை அரசு அமல்படுத்தியது. முன்னதாக இணைய தளத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட முறைகள் தற்போது செயற்கை நுண்ணறிவு, வேளாண் பண்ணைகளின் சென்சார், கேமரா பயன்பாடு உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நிபுணர் அமைப்புகளையும் அரசு பயன்படுத்துவதன் மூலம் மாற்று சந்தைப்படுத்துதல், விவசாயிகளுக்கான தேவையான உத்தி ஆகியவற்றை தீர்மானிக்க முடியும். எதிர்காலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் தொலைநோக்கு எண்ணத்தோடு இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் மூலம் பூச்சிகளை கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். பூச்சிகள் பற்றிய அறிகுறிகள், படங்கள், நோய்கள் ஆகியவை குறி்த்த தகவல்களையும் அறிந்து கொள்ளமுடியும். அதற்குரிய தீர்வு முறைகளை செயற்கை நுண்ணறிவு முறையால் தெரிந்துகொள்ள முடியும். வேளாண் பயிர்களுக்கான விலைகளை கணித்தல், திடீர் விலையேற்றம் அல்லது விலை வீழ்ச்சி ஆகியவை குறித்த தகவல்களை அனுப்புதல் போன்றவற்றிற்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும். தரவு பகுப்பாய்வு செயலி மூலம் சந்தை நிலவரம், உரப்பயன்பாடு உள்ளிட்டவற்றை பகுப்பாய்வு செய்யலாம்.
பிரதமர் வேளாண் வருவாய் ஆதரவு திட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட விவசாயிகளுக்கு நேரடியாக நிதியை அனுப்ப முடிகிறது. உரங்களுக்கான நிதியை நேரடியாக செலுத்தும் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறை பயன்படுத்தப்படுகிறது. வேளாண் சேவை மற்றும் தகவல் குறித்து விவசாயிகள் மின்னணு முறையில் அறிந்து கொள்ள கிசான் சுவிதா என்ற மொபைல் செயலி செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக இதுபோன்ற பல்வேறு முறைகளை தேசிய தகவல் மையம் மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அளித்து வருகிறது.