உங்களின் உணவே மருந்தாகட்டும் உங்களின் மருந்தே உணவாகட்டும்
டாக்டர் சந்திரகாந்த் சம்பாஜி பாண்டவ்
புதுதில்லி எய்ம்ஸ் சமூக மருத்துவ மைய
முன்னாள் தலைவர் மற்றும் பேராசிரியர்
நோயை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை இந்த பழமொழி மூலம் ஹிப்போகிரட்ஸ் சரியாகவே பதிவு செய்துள்ளார். மிகக் குறைவாக ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வது, சரிவிதித உணவு குறைபாடு என்ற விஷச்சக்கரத்தால் இந்தியா தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மக்களிடையே பரவலாக அதிகரித்து வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் ஐந்தாவது அறிக்கை இதற்கு சான்றாக உள்ளது. கருவுறும் வயதுள்ள பெண்களில் 57 சதவீதம் பேரும், இளம் சிறார்களில் 67.1 சதவீதம் பேரும், ஆண்களில் 25 சதவீதம் பேரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பது இந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது. ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பற்றி அறிந்துகொள்ள அனைத்து வருவாய் பிரிவினர் மற்றும் புவிசார்ந்த (நகரம், ஊரகம்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்த்தபடியே மிகக்குறைந்த வருமானம் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழைகளுக்கான பொது விநியோகமுறை, பிரதமரின் போஷான் சக்தி நிர்மாண் (முந்தைய மதிய உணவு திட்டம்), ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ஐசிடிஎஸ்) திட்டம் போன்ற இந்தியாவின் உணவு பாதுகாப்பு திட்டங்கள் மானிய விலையில் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுடன் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களை சென்றடைந்துள்ளன. உண்மையில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கும் தேவைப்படுகின்ற குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதாக இந்த உணவு பாதுகாப்பு திட்டங்கள் உள்ளன. இவை மிகவும் நலிந்த பிரிவு மக்களை சென்றடைந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து பலன்களை அளிக்கின்றன. இந்தியாவில் பெரும்பாலான மக்களால் அரிசி பயன்படுத்தப்படுகிறது. தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை 2011-ன்படி, 65 சதவீத இந்தியர்கள் அரிசியை பயன்படுத்துகின்றனர். இதனால், அரிசியில் ஊட்டச்சத்து செறிவூட்டப்படுவது நாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும்.
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் முன்முயற்சியுடன் 2019-21-க்கு இடையே மத்திய அரசின் நிதியுதவியுடன் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்திற்கான முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது 11 மாநிலங்களின் 11 மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த முதல் கட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் ஐசிடிஎஸ் மற்றும் பிரதமரின் போஷான் திட்டங்கள் மூலம் ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட்டது.
2023 மார்ச் மாத வாக்கில், 2-வது கட்டத்தில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களிலும் (மொத்தம் 291 மாவட்டங்கள்) 2024 மார்ச் மாத வாக்கில் 3-ம் கட்டத்தில் எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட அரிசி விநியோகத்தில் ஊட்டச்சத்தின் திறன் மற்றும் மருத்துவ அம்சங்கள் குறித்து தேசிய ஊட்டச்சத்து ஆய்வு நிறுவனம், ஐசிஎம்ஆர் போன்ற முன்னணி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யவுள்ளன. இதற்கு நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது.
“தேவை என்ன என்பதை மறந்துவிடாமல் ஊட்டச்சத்து துறையில் சாத்தியமான பணியை செய்ய வேண்டும்” என்று ஊட்டச்சத்து விஞ்ஞானி ஜி எச் பீட்டன் முன்மொழிந்த கருத்தில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நோய் வராமல் தடுப்பது, நோயை குணப்படுத்துவதைவிட சிறந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். “மிகச்சிறந்தது என்பது நல்லதன் எதிரியாக இருக்க கூடாது”. ஒருசிலருக்கு மிகச்சிறந்ததாக இருப்பதைவிட பலருக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்பதே பொது சுகாதாரத்தின் கருத்தாக உள்ளது.