பேராசிரியர் இ.பாலகுருசாமி
முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
முன்னாள் உறுப்பினர், மத்தியப் பணியாளர் தேர்வாணையம், புதுதில்லி
நீட் தேர்வு நீடிக்க வேண்டும்
நாட்டின் அனைத்து இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்குத் தேசிய திறன் மற்றும் நுழைவுத் (நீட்) தேர்வு நடத்தப்படுகிறது. நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின் உச்சநீதிமன்றமும் தேசிய மருத்துவ ஆணையமும் இந்த நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவித்தது.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் முக்கியமான இரண்டு இலக்குகள்:
1. இந்தப் படிப்புக்குத் தேவையான மாணவர்களின் பொதுவான அறிவு மற்றும் நுண்ணறிவைத் தீர்மானிப்பது.
2. இந்தப் படிப்பில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மன உணர்வை மாணவர் பெற்றிருக்கிறாரா என்பதை மதிப்பீடு செய்வது.
உலகம் முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் முறை பாடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் இது மிகவும் முக்கியமானதாகும்.
மேலும் நுழைவுத் தேர்வு என்பது அனைவருக்கும் பொதுவான கருத்தை அளிக்கிறது என்பதும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 30-க்கும் அதிகமான மாநிலங்களைக் கொண்ட, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு விதமான பல கல்வி வாரியங்களிலிருந்து மாணவர்கள் வருகின்ற இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் ஒருமுகப்பட்ட, வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய நுழைவுத் தேர்வு என்பது குறைந்தபட்ச கல்வித் தரத்தை உறுதி செய்வது மட்டுமின்றி பன்முகப்பட்ட பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்குப் பொதுவான தளத்தையும் வழங்குகிறது.
நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்வதற்குத் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் அளித்துள்ள அறிக்கை ஏதார்த்தமான பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இந்தக் குழுவின் பல பரிந்துரைகள் உண்மைக்கு மாறாக இருக்கின்றன. நீட் தேர்வுடன் தொடர்புடைய எண்ணற்ற பயன்களை எடுத்துரைக்க இந்தக் குழு தவறி விட்டது.
நீட் தேர்வால் கிடைக்கும் முக்கியமான பயன்கள் வருமாறு:-
1. பல்வேறு மாநிலங்கள், மத்திய கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களால் வழக்கமாக நடத்தப்பட்ட பலவகையான நுழைவுத் தேர்வுகளை நீட் தேர்வு ஒழித்துள்ளது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இந்தியாவில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் மாணவர் சேர்க்கையைக் கோர முடியும். மாணவர்கள் பல வகையான தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கு செலவிடும் பணம், சக்தி, நேரம் ஆகியவற்றைக் கணிசமாகக் குறைக்க முடியும். அது தவிர மாணவர்களிடம் மன அழுத்தத்தையும் குறைக்கும்.
2. நீட் தேர்வு நியாயமான, வெளிப்படையான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள எந்தவொரு கல்லூரியிலும் இடம் பெறுவதற்கு சமமான வாய்ப்பை உறுதி செய்கிறது.
3. (மத்திய அரசுக்கான ஒதுக்கீடு தவிர) தமிழ்நாட்டின் அனைத்து மருத்துவ இடங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.
4. எந்தவொரு மாநிலத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கையையும் நீட் தேர்வு பாதிக்கவில்லை. தற்போதுள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அவை தொடர்ந்து பின்பற்ற முடியும்.
5. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும், அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத இடங்களிலும் மாணவர் சேர்க்கையைக் கோர முடியும். இது தமிழ்நாட்டின் கல்லூரிகளில் உள்ள இடங்களை விட பல மடங்கு அதிகமானதாகும். நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் பங்கு பெறாவிட்டால் இந்தக் கல்வி நிலையங்களில் அவர்கள் சேரும் வாய்ப்பை இழப்பார்கள்.
6. நிகர்நிலைப் பல்கலைகழகங்களுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு அரசு முகமைகள் கலந்தாய்வு நடத்தும்போது நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கப்படும் அதிகக் கட்டணம் (கேபிடேஷன் ஃபீஸ்) முற்றிலுமாக ஒழிக்கப்படுகிறது. மேலும் மாணவர் சேர்க்கையில் தற்போதுள்ள முறைகேடுகளுக்கு நீட் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
7. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்கும் வசதி செய்கிறது.
8. நீட் தேர்வு என்பது இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்வது மட்டுமின்றி இந்திய மருத்துவப் பட்டங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகிறது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியில் நலிந்தப் பிரிவினருக்கு 10 சதவீதம் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு என்ற சமீபத்திய அறிவிப்பால் எண்ணற்ற ஏழைகள் மற்றும் ஊரகப் பகுதி மாணவர்கள் பயனடைவார்கள்.
இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் அளித்த அறிக்கை அடிப்படையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றியிருப்பது உண்மையில் துரதிருஷ்டவசமானது.