மண்டை ஓடுகளை கையில் வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் - பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்!!
மண்டை ஓடுகளை கையில் வைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன முறையில் சாலை மறியல் போராட்டம்!
கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மார்க்கண்டேய நதியில் 162 அடி உயர அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தியும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை இடிப்போம் என முழக்கங்கள் எழுப்பியும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை அறிந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கண்டிப்பாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.