டிஜிட்டல் இந்தியா – அறிவாற்றலே வலிமை தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் நித்தி ஆயோக்கின்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இயற்கை எழில் தவழும் கேரளாவில், பாரம்பரிய மீன்வளத் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மீனவர்கள் பிடித்துவரும் மீன்களுக்கு, அவற்றின் சந்தை விலையில் 20% மட்டுமே விலை கிடைத்துவந்த நிலையில், அதனை அதிகரிக்கும் முயற்சியாக, பைபர்கிளாஸ் படகுகள், விசைப்படகுகள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கடற்கரையிலேயே மீன்களை ஏலத்தில் விற்பனை செய்வதையும் அறிமுகம் செய்து வைத்தோம். எனினும், அவர்களுக்கான பணப்பட்டுவாடாவை முறைப்படுத்த வங்கிக் கணக்குகளை தொடங்குவது பெரும் சவாலாக இருந்தது. அந்த காலகட்டத்தில், வங்கிகளுக்கு நேரில் சென்று ஒரு கணக்கைத் தொடங்கி, அதனை பராமரிப்பதற்கு குறைந்தது 10 மாதங்கள் வரை அலைய வேண்டியிருந்தது.
உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது, வித்தியாசமான திட்டமாக இருந்தது. ஆனால், 2021-ல் நீங்களே வங்கிக் கிளைக்கு சென்று, மின்னணு முறையில் உங்களைப் பற்றிய விவரங்களை அளித்து, விரல் ரேகைகளைப் பதிவுசெய்து, சில வினாடிகளிலேயே வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும். மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை மாறி, சில நிமிடங்களில் பணிகள் முடிவதற்கு, டிஜிட்டல் மாற்றம் தான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு ஆறாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் விடுத்த செய்தியில், இது இந்தியாவின் தொழில்நுட்ப யுகம் என்று குறிப்பிட்டிருப்பது, மிகவும் பொருத்தமானது ஆகும். தொழில்நுட்ப முன்னேற்றமும், இணையதள பயன்பாட்டு வேகமும், இந்தியா முழுவதும் உள்ள 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களை சாதாரண நிதி, பொருளாதார மற்றும் டிஜிட்டல் சூழல்முறையில் ஒருங்கிணைத்துள்ளன. உலகிலேயே மிகக் குறைவான இணையதளக் கட்டணமும், சற்றேறக்குறைய 70 கோடி இணையதள பயனாளிகளும் உள்ள நிலையில், புதிதாக ஒவ்வொரு வினாடிக்கும் 3 இந்தியர்கள் புதிதாக இணையதள பயன்பாட்டில் இணைந்து வருகின்றனர். பாரத்நெட் திட்டத்தை 16 மாநிலங்களில் உள்ள கிராமங்களில் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த மத்திய அமைச்சரவை அன்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களின் அங்க அடையாளங்கள், நூறு கோடிக்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் சுமார் நூறு கோடி வங்கிக் கணக்குகள் என, இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களையும் உலகம் முழுவதும் அடையாளம் காணக்கூடிய நடைமுறையை நாம் உருவாக்கியுள்ளோம். இதுவரை, 129 கோடி ஆதார் அடையாளங்கள் உருவாக்கப்பட்டு, அரசுக்கும் மக்களுக்குமிடையேயான இடைவெளி குறைக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் டிஜிட்டல்மயமாக்கலின் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.
குஜராத் கடற்கரையில் தொடங்கி, உத்தரப்பிரதேச வயல்வெளிகள், சிக்கிமின் மலை முகடுகள் வரை பரவி விரிந்துள்ள லட்சக்கணக்கான இந்திய மக்களை இணைக்கும், யுபிஐ பணப்பரிவர்த்தனை நடைமுறை, டிஜிட்டல் பணப்பட்டுவாடாவின் முக்கியக் கட்டமைப்பாகத் திகழ்கிறது. பெரும் தொழில் நிறுவனங்கள் முதல் சாதாரண காய்கறி விற்பனையாளர் வரை அனைவருக்கும் அதிகாரமளிக்கும் டிஜிட்டல் நடைமுறைகளில் இந்தியா அடைந்துள்ள சாதனை, உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜுன் 2021-ல் மட்டும் 5.47 டிரில்லியன் ரூபாய் அளவிற்கு 280 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி உலகம் முழுவதும் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளைவிட, இரண்டு மடங்கு அதிக பரிவர்த்தனைகளை யுபிஐ மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து கூகுள் நிறுவனம் அமெரிக்க ரிசர்வ் வங்கிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு பரிந்துரைத்துள்ளது.
அரசின் மின்னணு சந்தை (GeM) நடைமுறை, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பில் இதுவரை 19.17லட்சம் விற்பனையாளர்கள் பதிவுசெய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினர் தயாரிக்கும் ஆபரணங்கள், காஷ்மீரின் உலர் பழங்கள், சென்னையிலிருந்து நடத்தப்படும் நாட்டிய வகுப்புகள், ஒடிசாவின் ஜவுளி ரகங்கள் என பலதரப்பட்ட மின்னணு வணிக மற்றும் இணையதளங்கள் இந்திய உற்பத்திப் பொருட்களை உலகளவில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுகாதாரம், கல்வி ஆகிய இரண்டு முக்கியத் துறைகள், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பெரும் உத்வேகம் அடைந்துள்ளன. இது இந்திய மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கான, முழுமையான வளர்ச்சிப் பாதையாக கருதப்படுகிறது. இந்தியக் கடலோரப் பகுதி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தங்க நிறத்தலாலான சுகாதாரக் காப்பீட்டு அட்டைகள், பலரது உயிர்காப்பு அடையாளமாகத் திகழ்கின்றன. பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டம், சுகாதார சேவை மற்றும் தொழில்நுட்பத்தின் தலைசிறந்த கலவையாகத் திகழ்கிறது. இந்த, ரொக்கமில்லா, நேரடித் தொடர்பில்லாத, காகிதமற்ற மற்றும் டிஜிட்டல் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், 50 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பயனளித்து வருகிறது.
பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டமும், தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கமும், இந்தியாவில் முழுமையான சுகாதார சேவைகளை அளித்து வருகின்றன. உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது சவாலாக இருந்தபோதிலும், பொது சேவை மையங்கள், கிராம அளவிலான தொழில் முனைவோர் மற்றும் ஆஷா பணியாளர்களை ஒன்றினைத்து, மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தொலைமருத்துவ சேவையை சிறப்பாக வழங்கியிருப்பது, இத்திட்டத்திற்கு சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது.
டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் இணையதள பயன்பாடு அதிகரிப்பு, நாடு முழுவதுமுள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தியுள்ளது. பீகாரின் கடைக்கோடி மாவட்டமான நவாடா-வில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகப்பறைகள் தொடங்கப்பட்டு, முற்றிலும் டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது, உலகின் எந்த மூலையிலும் வெளிப்படுத்தப்படும் அறிவாற்றலை, இணையதளம் வாயிலாக இந்தியாவின் குக்கிராமங்களுக்கும் கொண்டுவர முடிந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இது, இந்தியாவின் கிராமப்புற மாணவர்களை, கற்றலின் புதிய உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பெருந்தொற்று காலத்தில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட DIKSHA, இ-பாடசாலை, ஸ்வயம் போன்ற தளங்கள், நாட்டின் தொலைதூரங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்கு, தொடர்ந்து கல்வி வழங்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
இந்தியாவை, டிஜிட்டல் சமுதாயம் மற்றும் அறிவுசார் பொருளாதார நாடாக மாற்றியதன் மூலம், மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய அஞ்சல் நடைமுறையான இந்தியா போஸ்ட், ஆயுஷ்சஞ்சீவனி செயலி, டிஜிலாக்கர், ஊமாங் செயலி, சட்ட ஆலோசனைக்கு தொலை சட்டம், சாலையோர சிறு வியாபாரிகளுக்கான ஸ்வநிதி, சமையல் எரிவாயு முன்பதிவுக்கான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் திட்டங்கள் போன்றவை , மக்களுக்கு குறைந்தபட்ச அரசாங்கம் அதிகபட்ச ஆளுகை என்பதை நிறைவேற்றியுள்ளன. மைகவ் இணையதளம், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ஆகும். உலகின் மிகப்பெரிய இந்த டிஜிட்டல் ஜனநாயகக் கலந்துரையாடல் தளம், பங்கேற்பு ஆளுகையை ஊக்குவிப்பதாக உள்ளது.
புள்ளி விவரங்கள் மிகுந்த நாடான இந்தியா, புள்ளிவிவர நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நோக்கி நகர்வது, தண்ணீர்ப் பற்றாக்குறை, கற்றல் பிரச்சினைகள், சுகாதார மேம்பாடு மற்றும் மேம்பட்ட வேளாண் உற்பத்தி போன்ற எண்ணற்ற சவால்களுக்குத் தீர்வுகாண உதவும். உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப உற்பத்திகளை மேற்கொள்வது, பேரார்வம் கொண்டுள்ள இளம் தொழில்முனைவோரின் திறனை பயன்படுத்திக்கொள்ள உதவும். அத்துடன், சமூக விழிப்புணர்வு பெற்ற புதிய கண்டுபிடிப்பாளர்கள், வளர்ச்சி சார்ந்த உற்பத்தி மேலாளர்கள், செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள், உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்குவதிலும் இந்தியாவிற்கு உதவிகரமாக அமையும்.
உள்ளடக்கிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவது, குறைந்த செலவில், உள்ளூர் மொழிகளிலேயே சேவைகள் கிடைக்கச் செய்யும். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கருத்திற்கொண்டு, இதற்கான அணுகுமுறையை மேற்கொள்வது அவசியம். தொழில்நுட்பத் திறமைகளை ஊக்குவிப்பது, இந்திய மக்களுக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள 500 கோடி மக்களும், வறுமை நிலையிலிருந்து நடுத்தர வகுப்பினராக மாற வழிவகுப்பதுடன், இந்தியாவின் அடுத்த டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்தில் மைல் கல்லாக அமையும்.