21ஆம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கான சீர்திருத்தங்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

  21ஆம் நூற்றாண்டில் 

புதிய இந்தியாவுக்கான 

சீர்திருத்தங்கள் மத்திய நிதி அமைச்சர்

நிர்மலா சீதாராமன்





இந்தியாவிற்குத் தற்போது தேவையானது படிப்படியான மாற்றங்கள் அல்ல, ஒட்டுமொத்தமான உருமாற்றமே.  மோடி அரசாங்கம் பொருளாதாரத்தில் கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தவும், முறையான சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லவும் உறுதி கொண்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தில் கட்டுப்பாட்டு விதித் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதை நாம் இந்த ஆண்டில் குறிப்பிட்டு நினைவு கொள்கிறோம். 1991ஆம் ஆண்டின் பொருளாதாரத் தாராளமயம் வழங்கிய புத்தம் புதிய சுவாசக் காற்று பொருளாதாரத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தது. பிரதமர் பிவி நரசிம்ம ராவின் அரசியல் மனஉறுதியையும் இதற்கு உதவியாக இருந்த நிதி அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங்கையும் நாம் பாராட்டும் அதே வேளையில், ஒரு முழு பத்தாண்டு காலம் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக, கண்டனம் தெரிவிக்கவும் வேண்டும். முன்னாள் நிதி அமைச்சராக இருந்து பிரதமராக மாறியவரின் தலைமையின் கீழ் அவர்கள் அந்த பொருளாதார உத்வேகத்தை தொடர்வதில் தோல்வி அடைந்து விட்டார்கள்.


இழந்து போன அந்தப் பத்தாண்டுக்கு சற்று முன்புதான், பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து திட்டமிடுவதில் அரசியல் உறுதிப்பாட்டையும் கடப்பாட்டையும் வெளிப்படுத்தி இருந்தார்.  ஆனால் அந்த முயற்சி 2004க்கும் 2014க்கும் இடையில் செயல் வடிவம் பெறவே இல்லை. ஜிஎஸ்டி மற்றும் நொடித்துப் போதல் மற்றும் திவால் ஆதல் சட்டம் (IBC) ஆகிய இரண்டும் நரேந்திர மோடி அரசாங்கம் முதன் முறையாக பதவி வகித்தபோதே செயல்படுத்தப்பட்டன.

பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு வருவதோடு கூடவே, முதலீடுகளைத் திரும்பப் பெறுதல், கட்டுப்பாட்டு தளர்வுகள் மற்றும் ரொக்கமாக மாற்றுதல் ஆகியனவும் சமமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  முதல் முறை ஆட்சிக்கு வந்த போதே பிரதமர் மோடி அத்தகைய 1,200 சட்டங்களை நீக்க வேண்டும் என்று தீர்மானித்து இருந்தார். இரண்டாவது முறை ஆட்சியில் மேலும் 58 சட்டங்களை நீக்க முடிவு எடுத்துள்ளார். 

சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வை பாதிக்கக் கூடிய 6000க்கும் மேற்பட்ட உடன்பாட்டு விதிமுறைகள் உள்ளன.  இந்த விதிமுறைகள் மத்திய அரசு முதல் மாநில அரசு வரை பல்வேறு துறைகளுக்கு இடையிலும் விரவியுள்ளன.  மாநிலங்களோடு இணைந்து செயலாற்றி, நாங்கள் நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவில் அதாவது ஆகஸ்ட் 2022ல் குடிமக்களை இவற்றின் சுமையில் இருந்து விடுவிப்பது எனத் திட்டமிட்டு உள்ளோம்.

“ஒன்றிணைதல், ஒவ்வொருவருக்குமான வளர்ச்சி, ஒவ்வொருவரின் நம்பிக்கை” என்பது அனைவரையும் உள்ளடக்கிய யாரையும் புறக்கணிக்காத, அனைவருக்கும் அதிகாரம் அளித்தல் என்ற குறிக்கோளைக் கொண்டது ஆகும்.  ஜன் தன் யோஜனா (அனைவருக்கும் வங்கிக் கணக்கு), ஆதார் எண் மற்றும் பரவலாக உள்ள மொபைல் பயன்பாடு (JAM) ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரதமர் ஏற்படுத்திய அனைவரையும் உள்ளடக்கிய நிதியமைப்பின் மூன்று கூறுகள் மூலமும் நேரடி பலன் பரிமாற்ற (DBT) அமைப்பு மூலமும் இன்றைய நிலைமை தெளிவாகிறது.  அதிலும் குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இது திறம்பட செயல்பட்டு பலனை நிரூபித்துக் காட்டுகிறது.  

தகுதி வாய்ந்த ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் (உஜாலா) கழிப்பறை (ஸ்வச்சதா) மற்றும் சுத்தமான எரிபொருள் (உஜ்வாலா) ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. தனிநபர்களும், குடும்பங்களும் ரொக்கப் பணம் செலுத்தத் தேவை இல்லாத சுகாதாரச் சேவைகளையும் (ஆயுஷ்மான்) ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீட்டையும் (ஜீவன் ஜோதி சுரக்ஷா பீமா) பெறுகின்றனர். மிகச் சிறிய வர்த்தகர்கள் அதிலும் பிணையாக எதையும் தர இயலாதவர்கள் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை முத்ரா கடன்களைப் பெறலாம்.  பெருந்தொற்று காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்வநிதி திட்டம் தெருவோர வியாபாரிகளுக்கும் சிறிய உணவகங்களை நடத்துபவர்களுக்கும் பிணை ஏதும் இல்லாமல் ரூ.10,000 கடன் கிடைக்க உதவுகிறது. 2.5 மில்லியனுக்கும் அதிகமான அத்தகைய வியாபாரிகள், வங்கிகள் மூலம் இந்தக் கடனைப் பெற்று உள்ளனர். ட்ரோன்கள் மூலம் துல்லியமாக நில ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் கிரமப் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அவர்களின் நிலம் எந்த அளவாக இருந்தாலும் அதற்கான “உரிமை ஆவணங்கள்” தரப்படுவது என்பது அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் செயல் ஆகும்.

இத்தகைய திட்டங்கள் ஒவ்வான்றின் குறிப்பிடத்தக்க அம்சம் என்பது அதன் நடைமுறையாக்கலில்தான் உள்ளது.  ஒருவர் எனக்கு இந்தப் பலன் வேண்டாம் என்று மறுக்கலாமே தவிர தகுதி பெற்ற அனைத்து குடிமக்களுக்கும் பலன் சென்று சேர்கிறது. இது அனைவரையும் உள்ளடக்கும், பயனாளியை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகும். 

விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு மூன்று விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நாற்பத்து நான்கு தொழிலாளர் சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டு நான்கு சட்ட விதிகளாக ஆக்கப்பட்டு உள்ளன.

பெருந்தொற்றுப் பரவல் சவாலை முன்வைத்துள்ளது. ஆனால், இந்தியா முன்னேறுவதற்கான உறுதிப்பாட்டை பின்னடையச் செய்யவோ அல்லது நீர்த்துப் போக செய்துவிடவோ அதனால் முடியவில்லை. நாம் இழந்துபோன அந்த பத்தாண்டுகளுக்கும் இதனை ஈடு செய்தாக வேண்டும். பெருந்தொற்று காலகட்டத்தில் ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் நாம் உதவி மற்றும் நிவாரணங்களை வழங்கி வரும் அதே வேளையில், சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான காலம் குறித்த வாய்ப்பையும் நாங்கள் நழுவி விட்டுவிடவில்லை.

சுகாதாரப் பிரிவும் அதன் ஒழுங்கு முறைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. தனியார் துறையின் திறன்களையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு இசைந்ததாகவும் மின்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் `ஒரே தேசம் – ஒரே ரேஷன் அட்டை’ என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நமக்கு இழப்பு ஏதும் இல்லை. புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் இதனால் பலன் பெற்று உள்ளார்கள்.

பெருந்தொற்றுப் பரவல் காலகட்டத்திலும்கூட, மாநிலங்களின் ஒத்துழைப்போடு முறையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. திடநம்பிக்கை மற்றும் ஊக்க நடவடிக்கைகள் மூலமான சீர்திருத்தங்கள் என்று தலைப்பிட்டு லிங்க்டுஇன்-ல் பிரதமர் மோடி பதிவேற்றி இருந்த தகவலில் இத்தகைய சீர்திருத்தங்களில் சிலவற்றைப் பட்டியலிட்டு இருந்தார். ஒரே தேசம் – ஒரே ரேஷன் அட்டை, ஏழு சட்டங்களின் கீழ் தானியங்கி முறையிலான ஆன்லைன் மற்றும் சுயசார்பின்றி உரிமம் வழங்குதல், சொத்து வரிக்கான ஒத்துக்கொள்ளப்பட்ட விகிதங்களை அறிவித்தல், முத்திரைக் கட்டண வழிமுறைகளின்படி அதற்கேற்ற நீர் / கழிவுநீர் அகற்றல் கட்டணம், இலவசமாக மின்சாரம் விநியோகிக்க முடியாத நிலையில் டிபிடீ ஆகியன பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்ட சீர்திருத்தங்கள் ஆகும்.

பெருந்தொற்றுப் பரவல் காலகட்டத்திற்கு இடையில் பட்ஜெட்-2021 தயாரிக்கப்பட்டது. இது உள்கட்டமைப்பு செலவுக்கு கூடுதல் நிதியளித்தது. இது பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொள்கைசார் விதியமைப்புகளை வழங்கியது.   நிதித்துறை சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இது வழங்கியது. வங்கிகளை தொழில்நிபுணத்துவமாக்குவது தொடர்கிறது. பிணையப் பத்திர சந்தைகள் வலுப்படுத்தப்படுகின்றன.  தொழில்நுட்பம் மூலம் வரி நிர்வாகம் நேருக்கு நேரான சந்திப்பு இல்லாமலேயே நடக்கிறது.  துன்புறுத்தலை நோக்கி செலுத்தும் தன்னிச்சையான அதிகாரம் நீக்கப்பட உள்ளது. 

பொதுச் சொத்தில் இருந்து வருவாய் ஈட்டும் வழிமுறை தயாராக உள்ளது. உள்ளூர் சில்லறை வர்த்தக முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான அறிவிப்புகளும் சிறப்பான ஒழுங்குமுறைகளும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன. அதனால் அவர்கள் சந்தை வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

1991 சீர்திருத்தங்கள் 20ஆம் நூற்றாண்டின் கதையாக இருக்கின்றன. இன்று மேற்கொள்ளப்பட்டு வருபவை 21ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவுக்கான சீர்திருத்தங்கள் ஆகும்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image