நகர்ப்புற புத்துயிரூட்டல்
ஹர்தீப் எஸ் பூரி
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்
2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம்தேதி தொடங்கப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் மூன்று முக்கிய திட்டங்கள் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்ப்புறம்), அடல் புத்தாக்கம் மற்றும் நகர்ப்புற மாற்ற இயக்கம் (அம்ருத்), ஸ்மார்ட் நகரங்கள் இயக்கம் ஆகியவை அந்த நாளில் தொடங்கப்பட்டன. பல பரிசோதனைகளை உள்ளடக்கிய இந்தத் திட்டங்கள் முன்னுதாரணமாக மாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அறிந்த வகையில், திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டு மக்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளும் வகையில் வரலாறு படைத்துள்ளது.
நகர்ப்புற வடிவமைப்பு நகரங்களால் வரையறுக்கப்படுகிறது. நகரங்கள் அங்கு வசிக்கும் மக்களால் வரையறுக்கப்படுகின்றன. மக்களின் ஒருங்கிணைந்த உறுதி மற்றும் அறிவு, முடிவு எடுக்கும் தலைவர்கள் மூலம் நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. 2014 மே மாதத்திற்கு பின்னர், கூட்டுறவு கூட்டாட்சியின் உண்மையான எழுச்சி ஏற்பட்டுள்ளது மிகவும் போற்றத்தக்க அம்சமாகும். ஒவ்வொரு இயக்கமும் மாநிலங்களுக்கு திட்டங்களை மதிப்பிட்டு அங்கீகரிக்கும் அதிகாரத்தை வழங்கியது. முன்பு, ஒவ்வொரு திட்டமும் தில்லியில்தான் அமைச்சகத்தால் மதிப்பிடப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு வந்தது. மக்களின் நலன் கருதி, மாநிலங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான இந்த நம்பிக்கை பிணைப்பு நல்ல பலன்களைத் தந்தது. 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நகர்ப்புறத்துறைக்கான மொத்த ஒதுக்கீடு சுமார் ரூ.1,57,000 கோடி. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் 2014 முதல் 2021 வரையிலான கடந்த 7 ஆண்டு காலத்தில் இந்த ஒதுக்கீடு சுமார் 11,83,000 கோடியாக உயர்ந்தது. இதேபோல, யுபிஏ ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் 12 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. பிரதமர் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்ட 2015 ஜூன் மாதம் முதல் மோடி அரசு ஏற்கனவே 1.12 கோடி வீடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதில் 49 லட்சம் வீடுகள் முடிக்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய வீடுகள், திட்டம் முடிவடையும் 2022 மார்ச் மாதத்திற்கு முன்னர் கட்டி முடிக்கப்படும்.
அரசு திட்டங்கள் தடைபடுவதற்கு மெத்தனமான செயல்பாடுகளும், கசிவுகளும்தான் காரணம். இவை அகற்றப்பட்டுள்ளன. ஜியோ கண்காணிப்பு முறை மூலம், வீடுகளின் கட்டுமானம் மற்றும் நிதி ஒதுக்கீடு , கண்காணிக்கப்படுகிறது. முதன்முறையாக, நமது உலகத்தரம் வாய்ந்த விண்வெளி நிறுவனமான இஸ்ரோவை, அரசு துறைகளுடன் இணைந்து விண்வெளி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது அது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்த சிறப்பான தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், ஆறு பெரும் முக்கிய திட்டங்களைச் செயல்படுத்த நாட்டின் ஆறு புவி-பருவநிலை மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பணம், பொதுநிதி மேலாண்மை முறை மூலம் விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்த மின்னணு முறையால், மத்திய நிதி, மாநிலங்களின் கருவூலத்துக்கு தடையின்றி சென்றடைகிறது. இதேபோல, நேரடி பண பரிவர்த்தனை வாயிலாக பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு அரசு உதவித்தொகை சென்றடைவதால், இடைத்தரகர்களால் ஏற்படும் இன்னல்கள் களையப்பட்டுள்ளன.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் கட்டப்பட்ட வீடு, குடும்பத்தின் பெண் பெயரிலோ, அல்லது கூட்டு உரிமையாளர் என்ற வகையிலோ இருக்கும். கழிவறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதுடன், பெண் குழந்தைகளின் கண்ணியம் காக்கப்படுகிறது. அவர்களிடம் ஒரு நாணமும், பாதுகாப்பற்ற தன்மையும் கடந்த காலத்தில் இருந்தது. தற்போது வீட்டிலேயே கழிவறை உள்ளதால் பாதுகாப்பான நிலை உள்ளது.
பதிவு செய்தவர்களுக்கு வீடுகளை உறுதி செய்யும் வல்லமை மிக்க ஆயுதமாக ஆதார் உள்ளது. கைரேகை பதிவு இதற்கு உதவுகிறது. பல பத்தாண்டுகளாக, போலி பயனாளிகளால், அரசின் பயன்கள் கிடைக்காமல் ஏழைகள் பாதிக்கப்பட்டனர். இடைத்தரகர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகளின் நியாயமற்ற கூட்டு சதிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
மின்சாரம், குடிநீர், கழிவுநீர் அகற்றல் போன்ற வசதிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள அம்ருத் இயக்கம் உதவுகிறது. நகர்ப்புற நிர்வாகத்தின் பலவீனமான இணைப்பை அம்ருத் அகற்றியுள்ளது. சில மாநிலங்களில் ரூ.81,000 கோடி மதிப்பிலான சுமார் 6,000 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 500 நகரங்கள் அடங்கும்.
சீர்திருத்த நடவடிக்கை மூலம் நகர நிர்வாகத்தின் மீது அம்ருத் கவனம் செலுத்துகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிலைத்தன்மை இதனால் மேம்பாடு அடைந்துள்ளது. நகராட்சி பத்திரங்கள் மூலம் பத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ரூ.3,840 கோடி அளவுக்கு ஏற்கனவே நிதி திரட்டியுள்ளன.
ரூ.205,000 கோடி மதிப்பிலான முதலீட்டுடன், ஸ்மார்ட் நகரங்கள் இயக்கம் மக்களின் பங்கேற்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தாங்கள் வசிக்கும் நகரங்களின் தன்மை குறித்து முடிவு செய்ய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கு மக்களின் பழக்க, வழக்கங்கள், நடத்தை ஆகியவை மாற வேண்டும். கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், 100 ஸ்மார்ட் நகரங்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த 50 நகரங்களின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு, தொற்றைக் கண்டறிவதில், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு பேருதவி புரிந்துள்ளன. மேலும், நிவாரண, மறுவாழ்வு பணிகளிலும் அது ஈடுபட்டது.
இந்த திட்டங்களுடன், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016-ஐ கொண்டு, மனை வணிகத்துறையை முறைப்படுத்தியுள்ளது. அண்மையில், மாதிரி வீட்டு வாடகை சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இது வீட்டு வாடகை பிரிவுக்கு உத்வேகம் அளிக்கும்.
தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ளதன் மூலம் நகர்ப்புற வெளி வேகமாக மாறி வருகிறது. இது முன்னேற்றத்தின் வழியாகும். மத்திய அரசின் இந்தத் திட்டங்களை நகர நிர்வாகிகள் பின்பற்றி வருகின்றனர். பல்வேறு அளவுகோல்களில் நகரங்களின் தரவரிசை மதிப்பிடப்படுகிறது. உயர் மட்ட அளவில் இத்திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இது பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய மற்றொரு புதுமையான அம்சமாகும். பிரதமர் தலைமையில் தீவிர ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திறமையற்றவர்கள் சத்தமில்லாமல் அகற்றப்பட்டு வருகின்றனர். முறைகேடுகள் களையப்பட்டு, தப்பிக்கும் வழிகள் அடைக்கப்படுகின்றன. இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அனைத்து திட்டங்களிலும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ,மோடி அரசு ஏழைகளின் நலனில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருவதுடன், தொடர்ந்து செயல்படும் என்பதையும், அதிலிருந்து விலகிச் செல்லாது என்பதையும் இது காட்டுகிறது.