யோகாவுடன் வீட்டில் இருங்கள் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்.
ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் தலைமையிலான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியது. இரண்டு காரணங்களுக்காக இது வரலாற்று சிறப்பு மிக்க தருணமாக அமைந்தது; முதலாவதாக, நமது பிரதமர் திரு நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு முன்மொழிந்த இது, 90 நாட்களுக்குள் ஐ.நா அமைப்பின் உறுப்பு நாடுகளால் அமல்படுத்தப்பட்டது. இரண்டாவதாக, 177 நாடுகள் இதனை வழிமொழிந்தன. எந்த பொதுச் சபை தீர்மானத்துக்கும் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் ஆதரவு இருந்ததில்லை. இன்று, உலகம் முழுவதும், கொவிட்-19 பெருந்தொற்று ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்தி வரும் சூழலில், நாம் 7-வது ஆண்டாக யோகா தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்தச் சூழலில் யோகாவின் தேவை பல மடங்காக அதிகரித்துள்ளது.
யோகாவின் பயிற்சிகளும், கருத்தியல்களும், நமது பழமையான நாகரிகத்தின் விடியலுடன் இந்தியாவில் தோன்றியவையாகும். நமது துறவிகளும், யோகிகளும், சக்தி வாய்ந்த யோகா அறிவியலை உலகின் பல பாகங்களுக்கும் கொண்டு சென்று, ஒவ்வொரு சாதாரண மக்களையும் சென்றடையுமாறு பரப்பினர். உள்ளம், ஆன்மா, உடல் ஆகியவற்றை நெறிப்படுத்தும் மகத்தான பயிற்சிகளில் இது ஒன்றாகும். உள்ளத் தெளிவு வேண்டுபவர்களுக்கு வெகுமதியாக இது அமைந்தது. அன்றாட வாழ்க்கையில், தீவிரமான அழுத்தத்தை சந்திப்பவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான கருவியாக இது அமைந்துள்ளது. அதேசமயம், நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தவும், இதர உடல் உபாதைகளைக் குறைக்கவும் இது பயன்படுகிறது.
இன்று, கொவிட்-19 மனித குலத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று ஏராளமான மனித உயிர்களைக் காவு வாங்கியதுடன், பொது சுகாதாரத்தில் முன்னெப்போதும் கண்டிராத சவால்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில், நாம் அனைவரும் தொற்று ஏற்படும் என்ற அபாயத்திலும், அச்சத்திலும், நமது வீடுகளிலேயே இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். மிக நீண்ட காலத்துக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல, உடல் நோய்கள் ஏற்பட்டு, அதனால், மன அழுத்தமும் அதிகரிக்க காரணமாகியுள்ளது. இந்த பொது சுகாதார நெருக்கடி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. யோகா நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உடற்பயிற்சி. மூச்சுப் பயிற்சி ஆகியவற்றின் கலவையான யோகா, ஒருமுகப்படுத்துதலை மேம்படுத்தி, மனதையும், உடலையும் வலுப்படுத்தி, அதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. யோகா பயிற்சிகளில், ஷாவாசனா, சசாகாசானா போன்ற ஆசனங்கள் நமது மன அழுத்தத்தைக் குறைத்து, தொற்றுகளை எதிர்த்துப் போரிடும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. பிரணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி நமது சுவாச முறையை பராமரித்து, நமது நுரையீரல்களின் திறனை மேம்படுத்துகிறது. திரிகோனாசனம் ரத்தச் சுழற்சியை முன்னேற்றி, அனைத்து உள்உறுப்புகளும் நன்கு இயங்குவதற்கான ஆற்றலை உறுதி செய்கிறது. எனவே, யோகப்பயிற்சி மேற்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், மனித உடலின் ஒட்டுமொத்த நலனுக்கும் நன்மை பயக்கிறது.
குறைந்த அளவிலான கொவிட்-19 அறிகுறி உள்ள நோயாளிகள், இந்தக் கொடிய தொற்றை முறியடிக்க, வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், யோகா ஆசனங்களுடன், மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுமாறு பல்வேறு மருத்துவ நிபுணர்களும், மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். தொற்று நேரடியாக நுரையீரலைத் தாக்குவதால், நமது சுவாச அமைப்பை வலுப்படுத்துவது அவசியமாகும். இங்கு கூறப்பட்டுள்ள ஆசனங்கள் நமது எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலை இயல்பாக இயங்க உதவுகின்றன. கொவிட் தொற்று உறுதியான நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளும், யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கொவிட்-19 பாதிப்பால், மன உளைச்சல் அடைந்தவர்களுக்கு, யோகா மூச்சு பயிற்சி, ஆரம்ப அளவிலான ஆசனங்கள், தியானம் ஆகியவை மன அமைதியை கொண்டு வந்து, நோயாளிகளின் ஒட்டுமொத்த உடலையும் அமைதிப்படுத்துகிறது. மேலும், மாற்றியமைக்கப்படும் மூச்சு பயிற்சிகள், நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் யோகா நிலைகள், குணமடைந்த கொவிட் நோயாளிகளுக்கு சோர்வை அகற்றி, ஆற்றல் அளவைப் பராமரிக்கிறது.
யோகா வயது வந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும் அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது. அனைத்து வயது குழந்தைகளையும், கொவிட் விட்டுவைக்கவில்லை. குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நம் நாட்டில், அவர்களது நலனைப் பாதுகாக்கும் வகையில், பாதிப்பைக் குறைப்பது அவசியமாகும். எனவே, குழந்தைகள் தங்கள் அன்றாட வாழ்வில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். யோகா பயிற்சி குழந்தைகளுக்கு மன வலிமை, நெகிழ்வுத் தன்மை, ஒத்துழைப்பு மனப்பான்மை ஆகியவற்றை அளிக்கும். அதைத்தவிர, யோகாவால், குழந்தைகள் ஏராளமான பயன்களைப் பெறுவர். இதன் மூலம், இந்த சவாலான காலத்தில், அவர்களது ஒருமுகப்படுத்துதல் அதிகரித்து, அமைதியும், நிம்மதியும் ஏற்படும்.
உலகம் ஒரு தேக்க நிலையில் உள்ள இன்று, நமது எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உள்ளத்தின் சமன்பாட்டைப் பராமரிக்க யோகா மிகச்சிறந்த ஆரோக்கியமான பயிற்சியாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் யோகாவுக்கு ஆதரவு பெருகி, இந்தியாவின் மன வலிமைக்கு சான்றாக திகழ்கிறது. மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட வேண்டிய யோகா தினம், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, நமது வீடுகளில் தங்கி, சமூக இடைவெளியைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டின் மக்களும், குழந்தைகளும், நமது எழுச்சியைக் குலைக்க தொற்றை அனுமதிக்க வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான கால கட்டத்தில், நமக்குள்ளேயே ஒளியை ஏற்றி, மன அமைதியுடன் யோகா தினத்தைக் கொண்டாடுவோம்.