திருப்பூரில் ஆட்டோ மீது மினி லாரி மோதி விபத்து. இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடியவரை மீட்க பொதுமக்களுடன் உதவிய பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜனுக்கு பொதுமக்கள் பாராட்டு...
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த நொச்சிபாளையம் பிரிவு அருகே பல்லடம் நோக்கி காய்கறி பழங்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து லோடு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில் ஆட்டோவின் முன்புறம் அப்பளம் போல் நொருங்கியது. மேலும் ஆட்டோ ஓட்டுனர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியினர் ஆட்டோ ஒட்டுனரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் காரை விட்டு இறங்கி வந்து பொதுமக்களோடு சேர்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ ஓட்டுனரை மீட்க உதவினார். இந்நிலையில் ஆட்டோவின் முன்புறத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கூடி இருந்த பொதுமக்களை ஒழுங்கு படுத்தும் பணியில் எம்.எல்.ஏ ஈடுபட்டார். சாலையில் விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடியவரை பொதுமக்களுடன் இணைந்து மீட்க உதவிய எம்.எல்.ஏ நடராஜனை பொதுமக்கள் பாராட்டினர்.