தர்பூசணி பழத்தில் உலகத்தின் பலமொழிகளின் மூலம்
கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேனி இளைஞர்
உலகம் முழுவதும் சுமார் 158 நாடுகளுக்கு மேல் கொரோனா தொற்று நோயானது பரவி இன்றுவரை லட்சக்கணக்கான உயிர்களை பறித்துக் கொண்டுள்ள இந்த தொற்று நோய் குறித்து பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றி வருகின்றனர். இந்தியாவிலும் இரண்டு முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கணிசமான அளவு இறப்பு விகிதத்தை குறைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழக அரசாலும், தன்னார்வலர்களாலும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல தேனி மாவட்டம் கூடலூர் சேர்ந்த காய்கறிகளால் பல்வேறு உருவங்கள் வரைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பல விருதுகளைப் பெற்ற காய்கறி சிற்பக் கலைஞர் இளஞ்செழியன் என்பவர் தர்பூசணி பழங்கள் மூலம்,இத்தாலி, சீனா மலாய்,தாய்லாந்து, அரேபியா, ஜப்பான், ஜெர்மனி, பிரெஞ்சு, வியட்நாம், இந்தோனேசியா, மியான்மார்,ரஷ்யன், சிங்களம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 14 நாட்டு மொழிகள், மற்றும் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில் மூலம் அந்தந்த தாய் மொழிகளிலேயே அந்தந்த நாட்டு விழிப்புணர்வு வாசகங்களை செதுக்கி உலக சுகாதார மையம் படம் வரைந்தும் இந்த நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் உலக நாடுகளை மிரட்டி வருகின்ற இந்த தொற்றுநோய் ஒழிப்பதற்காக உலக மக்கள் அனைவரும் இனத்தாலும் மொழியாலும் நாடுகளாலும் பிரிந்திருந்தாலும் தற்போது ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகின்றனர் மொழியால் இனத்தால் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் இந்த நோயினால் உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்தோடு இந்த தொற்று நோயினை இவ்வுலகில் இருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஒன்றுபட்டால் வெற்றி மக்களுக்கே என்பதை உணர்த்தவே தர்பூசணி பழம் கொண்டு இந்த விழிப்புணர்வு சிற்பங்களை வரைந்து உள்ளேன் என் தெரிவித்தார்.
தேனி மாவட்ட செய்திகளுக்காக க.சின்னதாஸ்