சொந்த ஊருக்கு அனுப்ப கோரி சாலை மறியலில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக அவர்களை சாலையை விட்டு அகற்றிய பொது மக்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர் இந்நிலையில் பீகார் ஜார்கண்ட் உத்திரப்பிரதேசம் ஒரிசா மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் பதிவு செய்த வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். விண்ணப்பம் கொடுத்து பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை தங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் உடனடியாக தங்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என திருப்பூர் பாளையக்காடு பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்திற்கு இடையூறாக வடமாநில தொழிலாளர்கள் நின்று சாலை மறியல் செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையில் இருந்து அனைவரையும் அகற்றினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் பதிவு செய்தவர்கள் அனைவரும் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தற்போது கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர் இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பினர்.