அத்தியாவசிய உணவு பட்டியலில் இருந்து வெங்காயம், பருப்பு வகைகளை நீக்ககூடாது.
மத்திய அரசிற்கு எல்ஜேகே நிறுவனத்தலைவர் நெல்லைஜீவா கோரிக்கை.
கொரோனா ஏற்படுத்தி வரும் பொருளாதார பேரிழப்பை ஈடுகட்ட மத்தியஅரசு தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களின் 3 ம் கட்ட நிதி ஒதுக்கீடு அறிவிப்பில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வந்து, வெங்காயம் பருப்பு வகைகள் போன்றவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து நீக்கப்படுவதாகவும் வெங்காயம், தக்காளி, பருப்புகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாகவும் மேற்கண்ட, இந்த பொருட்களின் இருப்புகளுக்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வேதனையளிக்கின்றது. இந்த அறிவிப்பை லட்சிய ஜனநாயக கட்சி(எல்ஜேகே) மிக கடுமையாக கண்டிக்கின்றது. கடந்த 2014 ம் ஆண்டு இதே மத்தியஅரசு வெளியிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களில் வெங்காயம், தக்காளி, அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தேயிலை, உருளைகிழங்கு, மிளகாய், தேங்காய், சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றை பட்டியலாக வெளியிட்டு தடையில்லாமல் பொதுமக்களுக்கு தொடந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், தற்போது வெங்காயம் மற்றும் பருப்பை அப்பட்டியலிலிருந்து நீக்கியது மிகப்பெரிய சந்தேகத்தை எல்ஜேகேவுக்கு ஏற்படுத்தியுள்ளது. வெங்காயம், பருப்பு, தக்காளி, மற்றும் எண்ணெய் வித்துக்களை மத்தியஅரசு ஆடம்பர பொருட்களாக கருதினால்..! பீஸாவும், பர்க்கரும், மதுவும் அத்தியாவசியமானதா..? என்பதுடன் எவையெல்லாம் அத்தியாவசிய உணவு பொருட்கள் என்பதை மத்தியஅரசு விரைந்து விளக்கவேண்டும். இந்திய பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவத்தின் அடையாளமாக திகழ்வது வெங்காயம்தான். குரான், விவிலியம், கீதை ஆகியவற்றில் வெங்காயத்தின் பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. எகிப்து, ரோமானியம், சீனா, மெசபடோமியம் ஆகிய நாகரீக வரலாற்றில் வாழ்ந்த மக்களின் உணவில் முக்கியமானதாக வெங்காயம், பருப்பு, எண்ணெய் வகைகள் திகழ்ந்துள்ளதை மத்தியஅரசு மறந்துவிட கூடாது. அத்தியாவசிய உணவு பட்டியலிலிருந்து இவைகளை நீக்கினால் பதுக்கல்கள், தட்டுப்பாடுகள், விலையேற்றம், கள்ள சந்தை விற்பனை ஆகியவை அதிகரிக்கும். மக்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இருக்காது. இதனால் இப்பொருட்களின் உற்பத்தியை விவசாயிகள் கைவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்கும் இந்தியா மறுபுறம் அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய துடிப்பது என்ன நியாயம்..? ஏற்கனவே ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் இது போன்ற அறிவிப்பு விவசாயிகளையும், பொதுமக்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தும் என்பதை மத்தியஅரசு உணர மறுப்பது ஏன்..? அத்தியாவசியம் என்ற வார்த்தையால் தான் அனைத்து பொருட்களும் அடிதட்டு மக்களுக்கு தடையில்லாமல் தாராளமாக கிடைக்கின்றது என்பதை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்ந்து, அத்தியாவசிய உணவு பட்டியலிலிருந்து வெங்காயம், பருப்பு, எண்ணெய் வித்துக்களை ஒருபோதும் நீக்க கூடாது என லட்சிய ஜனநாயக கட்சியின் (எல்ஜேகே) சார்பில் மத்தியஅரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
நெல்லைஜீவா
நிறுவனத்தலைவர்
லட்சிய ஜனநாயக கட்சி - LJK